பாடுக பாட்டே! - 4

By நாஞ்சில் நாடன்

காதல் என்றும் வீரம் என்றும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. மறம் அல்லது வீரம் செறிந்த பாடல்களைக் காணும்போது நமது தோள்கள் விம்மிப் பூரித்து,  வாகு வலயங்கள் இற்று வீழும்படியாகப் பெருமிதம் கொள்கின்றோம். அந்த வீரம்தான் இன்று தேய்ந்து, கால்களுக்கு இடையில் வால் நுழைந்து ’ஈ’ என இளித்து மல்லாந்து படுத்து, பிறகு பின்னோக்கி ஓடும் குக்கர் போல நம்மை ஆக்கிவிட்டதா என்றும் ஏக்கத்தோடு எண்ணத் தோன்றுகிறது.

ஒன்றாக இருப்பதை வேண்டுமானால் பத்தாக இலக்கியங்கள் சில சமயம் கூறி இருக்கலாமே அன்றி, ஒன்றுமே இல்லாததைப் பத்தாக்கி இருக்க இயலாது. ஊரில் கூறுவார்கள் - ‘மணலைக் கயிறாக்கி, வைக்கோல் படப்பை மாப்பிள்ளை ஆக்கி’ என்று! அதுபோல் கயிறு திரித்தலைப் பண்டைய இலக்கியம் செய்திருக்க வாய்ப்பில்லை.

வாழ்க்கை எத்தனையோ அனுபவங்களை நமக்குத் தருகிறது. அண்மையில், ஹெலிகாப்டரும் விமானங்களும் விசைப்படகுகளும் வைத்திருந்த அரசாங்கம் கைவிட்ட மீனவர்களை, தமது வீரத்தினாலும் மனித நேயத்தினாலும் காப்பாற்றிய சக மீனவர்களை ஒக்கிப் புயலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்டோம்.

வீட்டில், ஒரு எலியைப் பிடிக்கத் துரத்தும்போது குறிப்பிட்ட எல்லையில், தன்னால் இனி ஓடித் தப்பிக்க இயலாது என்று உணர்ந்த எலி,  தனது பின்னங்கால்கள் மீதும் வாலின் பலத்தின் மீதும் எழுந்து நின்று, கோபத்தில் தனது பற்களையும் கூரிய முகத்தையும் காட்டிச் சீறுவதை நான் கண்டிருக்கிறேன். எலியின் சீற்றம் கூட சிலசமயம் நம்மை அச்சுறுத்தும். மனிதரைக் கண்டு அஞ்சிப் பதுங்கும் எலிக்கே இத்தனை சீற்றம் இருக்குமாயின், மரபோடு வாழ்ந்த மனிதருக்கு இருக்காதா என்ன? விலங்குகள் குறித்த தொலைக்காட்சி ஒன்றில் வீரமான வேங்கையைத் துரத்தும் மூர்க்கமான காட்டெருமையை நாம் காணலாம்.

அண்மையில், சென்னையில் ஒரு விழாவில், ஒரு பிரபலத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, குரல் எழுப்பாமல் நயந்த குரலில் அவரிடம் கேட்டேன்,“அருவா உங்களுக்கு மட்டும்தான் வெட்டுமா அண்ணே?" என்று! வீரம் என்பது ஒரு மதத்தவருக்கு, இனத்தவருக்கு, மொழியினருக்கு, பிரதேசத்தவருக்கு மட்டுமே உரிய தனித்தன்மையது அல்ல. கரும்பின் இனிப்பைப் போல, மண் சார்ந்து, அது கூடக் குறைய இருக்கலாம்.

நெருக்கடி நேர்ந்த ஒரு தருணத்தில் முறத்தால்கூட தமிழ்ப் பெண் புலியை விரட்டி இருக்க இயலும்! அரிவாள்மனையும் வெட்டும். தம்மில் தாழ்ந்தவர் என்றே எப்போதும் பிறரை எண்ணிக்கொண்டிருப்பவர், இதை நம்பாமல் பரிகசிக்க ஏதுமில்லை.

தமிழ் இலக்கியம் சிறப்பாகப் பேசுகின்ற வீரம் குறித்து, இங்கே சில பாடல்களைப் பார்க்கலாம்.

திருக்குறளில் இருந்தே தொடங்கலாம். படைச் செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று பேசுகிறது -

‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்’ என்று.

எதிரியின் யானையை கொல்லத் தனது கை வேலை வீசுகிறான் ஒருவன். அதில் அந்த யானை பிழைத்து விடுகிறது. வெறுங்கையோடு நிற்கிறான். அப்போது எதிரி எறிந்த வேல் இவன் நெஞ்சில் பாய்ந்து நிற்கிறது. அந்த வேலைப் பறித்து எடுக்கும் இவன்,  ‘இப்போது நான் வெறுங்கையன் அல்ல... என் கையிலும் வேல் ஒன்று உண்டு’ என்று எண்ணி இளநகை பூப்பானாம்.   

அதே அதிகாரத்தின் மற்றொரு குறள் பேசுகிறது -

‘கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ என்று.

கானகத்தில் ஓடுகின்ற முயல் மீது அம்பு எய்து, அதனை வேட்டையாடி வெற்றிக் களிப்போடு திரும்புவதை விட, யானைக்குக் குறிவைத்து,  அந்த யானை தப்பிவிடத் திரும்புவது சிறப்பு என்பது பொருள்.

‘ஐ’ என்ற நெட்டெழுத்துச் சொல்லுக்கு 24 பொருள்களைத் தருகின்றன அகராதிகள். அவற்றுள் ஒன்று தலைவன் என்பது. ‘ஐ’ எனும் ஓரெழுத்து நெடிலின் பிறப்புத்தான் ஐயன், ஐயர், ஐயை என்பனவெல்லாமே. போர் வீரன் ஒருவன், போர்க்களத்தில் தனது தலைவன் முன்னால் போரிடத் துணிந்து வந்து  நிற்கும் பகை நாட்டு வீரர்களைப் பார்த்து எச்சரிக்கையாகச் சொல்கிறான், ‘கபர்தார்’ என்று!

‘என் தலைவன் முன்னால் நிற்காதீர்கள் பகைவர்களே! பலர் என் தலைவன் முன் நின்று... அதோ பாருங்கள். அங்கே நடுகற்களாக நின்றுகொண்டிருக்கிறார்கள்.’

இந்தப் பாடல் எங்கே இருக்கிறது என்று கேட்பீர்கள்... அதே திருக்குறள், அதே அதிகாரம். குறள் தெரிய வேண்டுமா?

‘என்னைமுன் நில்லன்மின்  தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.’

புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடும்போது ஔவையார் சொல்கிறார்... ‘களம் புகல் ஓம்புமின், தெவ்விர்’ என்று. ‘இவனை எதிர்த்துப் போர்க்களம் புகுமுன் கொஞ்சம் எண்ணித் துணியுங்கள் பகைவர்களே’ என்று பொருள். ஏன் தெரியுமா?  ‘தினமும் எட்டுத் தேர்கள் செய்யும் ஆற்றல் கொண்ட தச்சன், ஒரு மாதம் முயன்று வலிமையாகச் செய்த ஒரேயொரு தேர்க்காலுக்கு இணையானவன் போல, எம்மிடம் ஒரு வீரன் இருக்கிறான். எனவே எச்சரிக்கையாக இருங்கள்’ என்று இந்தப் பாடல் பேசுகிறது.

‘களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,

எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல்

எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோனே!’

இதுபோல, கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்... வனவாசம் சென்ற இராமனைத் திரும்ப அழைத்துவர, பரதன் தன் படைகளுடனும் விதவைத் தாயாருடனும் அமைச்சர், படைத் தளபதிகளுடனும் கங்கைக் கரைக்கு வருகிறான். காட்டுக்குத் துரத்தியதோடு நில்லாமல், மேலும் தொந்தரவு செய்யப் படை கொண்டு வந்திருக்கிறான் பரதன் என்று தவறான புரிதல் இராமனின் தோழன் குகனுக்கு. அவன் ‘கட்டிய சுரிகையன், கடித்த வாயினன், வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன், கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன், கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினான்’!

 கங்கையின் மறுகரையிலிருந்து, பரதனின் படைப் பெருக்கத்தைப் பார்த்த குகனின் வீரமொழிகள் இவை. அதில் ஒரு பாடல், வீரத்துக்கு இன்னொரு உச்சம். ‘எலி எலாம் இப்படை; அரவம் யான்’ என்பது. அதாவது, பரதனின் மொத்த அயோத்தியின் படையும் எலிப்படையாம், குகன் ஒருவன் அரவமாம். அரவம் எனில் பாம்பு. இதே பாம்பு என்பதற்கு, கம்பன் பிற இடங்களில் பயன்படுத்தும் மாற்றுச் சொற்களில் சில - மாசுணம், உரகம், நாகம், பாந்தன்.

பத்தாயிரக் கணக்கில் எலிகள் கூடி, கடல்போல் ஓசை எழுப்பினாலும், ஒரு நாகம் சீற்றம் கொண்டு எழுந்து நிற்குமானால், எலிப்படை எல்லாம் துடித்துத் தவித்து ஓடி மறையுமாம். எங்கிருந்து பெற்றான் கம்பன் வீரத்தின் வேகமான இந்த உவமையை? படைமாட்சி அதிகாரத்துக் குறள் பேசுகிறது -

‘ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.’

கடல்போலத் திரண்டு நின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும்? ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா?

இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்...

 இன்று தேய்ந்த வீரத்தின் சுவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது. கோடிக் கணக்கான வாக்காளப் பெரு மக்கள் எதிர் நின்று என்ன தான் கூச்சல் போட்டாலும் என்ன நடந்துவிடும்? நச்சுப் பாம்பு போன்ற குற்றப் பின்னணி கொண்ட கொள்ளைக்கார அரசியல்வாதி ஒருவன் முன்னால் எடுபடாது என்று!

(இன்னும் பாடுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE