மேலே மஞ்சள், கீழே சிவப்பு, நடுவில் வெள்ளை; நடுவே மாநில அரசின் சின்னம். கர்நாடகக் கொடி அதன் எல்லைகளைக் கடந்து முழு இந்தியாவுக்கும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்திய வரலாற்றில் மாநிலங்களால் என்றைக்கும் மறக்க முடியாத தலைவராகிவிட்டார் சித்தராமையா.
கூட்டாட்சி முறையால் பிணைக்கப்பட்ட குடியரசு இந்தியா என்றாலும், அது உருவான நாளிலிருந்தே ‘இந்நாடு மாநிலங்களால் உருவானது’ எனும் பேருண்மையை மறக்குமாறே பழக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கூட்டாட்சியை வலுப்படுத்த சுதந்திர இந்தியா இம்மியளவும் முன்னகரவில்லை.
காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும்போது அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகார ஏற்பாடு ஒரு அரும்வாய்ப்பை டெல்லிக்காரர்களுக்கு வழங்கியது. நாடாளுமன்றச் சடங்குகளில் எப்போதாவது நம்முடைய தலைவர்கள் பெருமைக்காக உச்சரிக்கும் ‘கூட்டாட்சி’, ‘அதிகாரப் பரவலாக்கம்’, ‘மாநிலங்களுக்கான அதிகாரம்’ போன்ற சொல்லாடல்களுக்கு இந்திய அரசியல் அகராதியில் ஏதாவது அர்த்தம் தேட முடியும் என்றால், அது காஷ்மீருக்கு டெல்லி அதன் தொடக்க நாட்களில் கொடுத்த அதிகாரங்களாகவே இருக்க முடியும்.
ஏனைய மாநிலங்களுக்கும் காஷ்மீருக்குரிய சிறப்பதிகாரங்களை நீட்டித்திருந்தால் இந்தியா ஒரு குடியரசாக மேம்பட்டிருக்கும். எதிர்வழியில் ஏனைய மாநிலங்களைப் போல காஷ்மீரையும் முடக்கியது டெல்லி.