சுந்தர ராமசாமி, 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் எழுதியிருப்பார். ஸ்டீவனுக்கும் அது பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, மருத்துவர்கள் அவரது ஆயுளுக்கு வழங்கிய இரண்டு ஆண்டு கெடுவை மேலும் 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தவர் ஸ்டீவன்.
ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளைதான் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி. அங்கிருந்துதான் தொடங்குகிறது இந்தப் பிரபஞ்சத்தை அளக்க முயன்ற அறிவியல் மேதையின் பயணம்.
ஸ்டீவன் ஹாக்கிங் தனது 76-வயதில் மார்ச் 14 அன்று காலமானார். 1942, ஜனவரி 8-ம் தேதி பிறந்த ஸ்டீவன் ஹாக்கிங் தனது பிறந்த நாளைப் பற்றிக் கூறும்போது மாபெரும் விஞ்ஞானி கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்துப் பிறந்தேன் என்பார். கலீலியோ நினைவு நாளில் பிறந்த ஸ்டீவன் ஹாக்கிங் மற்றுமொரு மாபெரும் அறிவியலாளர் ஐன்ஸ்டைன் பிறந்து சரியாக 139 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் இறந்தது அறிவியலைப் பொறுத்தவரை ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அந்தத் தற்செயலிலும் ஒரு தொடர்பு இருக்கிறது.
மூன்று பேருமே அவரவர் காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி இருந்த புரிதலைப் பல மடங்கு அதிகரித்தவர்கள்; சரியாகச் சொல்வதென்றால் அதுவரை பிரபஞ்சத்தைப் பற்றி மனித குலம் நம்பியதைப் புரட்டிப்போட்டவர்கள்.