குரங்கணி சித்தன் கதை - 1

By வடவீர பொன்னையா

சித்தர்களோட பார்வையில் - இந்தப் பிரபஞ்சம்ங்கிறது ஒரு மயில் பறக்குற மாதிரி...! இந்தப் பூமியோட எடை ஒரு மயிலிறகு எடைதான்!!

ஆதியோட ஆதி காலத்துல, மகா உஷ்ணப் பிழம்பாய் இருந்த சூனியம் வெடிச்சு, ஒளிப்பிழம்பாய் சிதறி, அண்டம் அண்டமா பிரிஞ்சுபோய், கோடிக்கணக்கான உஷ்ணப் பந்துகளாக மிதக்க ஆரம்பிச்சது.

அதுல ஒரு உஷ்ணக் கோளம்தான் நம்ம பூமி!

இந்த பூமிக்கும் ஒரு ஆசை வந்துச்சு... அந்த ஆசைக்குப் பேருதான் விதி! நெருப்பா சுத்திக்கிட்டு இருந்த இந்த பூமி, தனக்கு மண்ணு, காத்து, தண்ணி, ஆகாயம் வேணும்னு ஆசைப்பட்டது. நியாயமான ஆசைதான்.

அடுப்புல, சூட்டுக்குத் தகுந்தாப்ல பாலுக்கு ஆடை உருவாகிற மாதிரி - இந்த உஷ்ணக் கோளத்துல மண்ணு பூத்து, நீரு பூத்து, நெருப்புக் குழம்பு பொங்கி வெடிச்சு அதுலயே அடக்கமாச்சு. பூமியோட எடையும் கூடிப் போச்சு.

விதி வலியது!

இதுக்கு எதிர்வினையாக - வளிமண்டலம் கனிஞ்சு, ஈர்ப்பும் விலக்கும் கொண்ட வீரிய சக்தியான காந்தப் புலம் உருவாச்சு. காலத்திரயம் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) உருவாச்சு.

பூமிக்கு மேற்கொண்டும் ஆசை பிறக்க... தன்கிட்டயே இருக்கிற பஞ்ச பூதத்தின் உரம் சேர்த்து, ஒரு மின்னல் வெட்ற நேரத்துல ஒரு உசுரு அணுவை உண்டாக்கிக்கிச்சு. உயிரினம் வளர்ந்தாச்சு. உயிரணுவிலிருந்து விதை, செடி, கொடி, மரம், அப்புறம் மீன், பறவை, குரங்கு, மனுசன் பிறந்து வளந்தாச்சு. இப்போ, பூமிக்குப் பேராசை வந்திருச்சு... 'பேராசை பெருநஷ்டம்’னு பூமிக்கு அப்போ தெரியல!

இந்தப் பேராசை ஒவ்வொரு உயிரினத்தோட அணுவிலயும் பத்தி எரிஞ்சு, தன்னைப் பாதுகாக்கணுமேனு உயிர் பயம் வந்து ஓட ஆரம்பிச்சதுக.

பேராசையும் உயிர் பயமுந்தான் வாழ்க்கைச் சக்கரம் உருளக் காரணமா இருக்கு. பேராசையோடு வாழ ஆரம்பிச்ச மனுசப் பயலுக உயிர் பயத்துல ஓடிஓடி செஞ்ச காரியங்கள்தான்..

இயற்கையின் அற்புதங்கள்... அதிசயங்கள்... ரகசியங்கள்!

உலகம் தோன்றினபோது, முதமுதல்ல நீரு பூத்து, மண் தோன்றி, கல் தோன்றின இடம் பொதிகை மலைன்னு முன்னோர்கள் சொல்லுவாங்க. அதன் தொடர்ச்சியான சதுரகிரி மலை, வருச நாட்டு மலை, சுருளி மலை, கொல்லி மலை, வெள்ளி மலை, கொழுக்கு மலை, குரங்கணி மலை, மேக மலை அடங்கிய மேற்குத் தொடர்ச்சி மலையைத்தான் ‘சித்தர்களின் பூமி’ன்னு சொல்லுவாங்க.

காடாண்ட சித்தர்கள் காலம் முதல் நாடாண்ட மன்னர்கள் காலம் வரை நம்ம குரங்கணி பூமியைச் சுத்தி நடந்த கதைகளைத்தான் நாஞ் சொல்லப் போறேன்...

ஒரு நிமிசம்... மலைமேல குரங்கணி சித்தன் குடிசைக்கு வெளியே ஆளரவம் கேக்குது. யாரோ அலறும் சத்தம்...

-வடவீர பொன்னையா

வடவீர பொன்னையா

‘வருச நாட்டு ஜமீன் கதை'யை எழுதிய 'வடவீர பொன்னையா' தமிழ் எழுத்துலகுக்கு நன்கு அறிமுகமான மண்வாசனை எழுத்தாளர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ‘வடவீர நாயக்கன் பட்டி' என்கிற தன் கிராமத்தின் பெயரையும், ‘பொன்னையா' என்கிற தன் தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டவர்.

கிராமங்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.

இயற்கை மேல் காதல் கொண்டு காடு மலைகளைச் சுற்றிவந்து, பழங்குடி மக்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து பதிவு செய்துவருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE