தாவோ: பாதை புதிது - 3

By ஆசை

சூபி ஞானி ஒருவர், சத்திரமொன்றில் தங்கினார். சத்திரத்தின் உரியமையாளர் ஞானியிடம் பேச்சுக்கொடுக்கிறார்.

“ஐயா எனது குழப்பத்தை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்” என்று தொடங்குகிறார்.

“சொல்லுங்கள்” என்கிறார் ஞானி.

“எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அழகானவள். இன்னொருத்தி விகாரமானவள். விகாரமான மனைவியைத்தான் நான் மிகவும் நேசிக்கிறேன். அழகியை நான் வெறுக்கிறேன். இந்த முரண்பாட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்கிறார் சத்திரக்காரர்.

ஞானி சொல்கிறார், “அழகான மனைவி எப்போதும் தன் அழகைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாள். இதனால் அவளுக்கு அளவுக்கதிகமான அகந்தை ஏற்படுகிறது. அழகான ஒன்று அகந்தையுடன்இருக்குமா? ஆகவே, அகந்தை அவளை விகாரமானவளாக ஆக்குகிறது. விகாரமானவளோ தன் விகாரத்தைப் பற்றிய எண்ணத்தால் மிகவும் பணிவுகொண்டவளாக மாறுகிறாள். அகந்தைதுளி கூட இல்லாதவளாக ஆகிறாள். அகந்தை இல்லாத எதுவும் பேரழகுதான்.

ஆகவேதான், அவள் பேரழகியாகிறாள். இதனால்தான் நீங்கள் அழகியை வெறுக்கிறீர்கள், விகாரமான மனைவியை நேசிக்கிறீர்கள்.”

சத்திரக்காரருக்குத் தெளிவு பிறக்கிறது.

கதை முடியவில்லை. சூபி கதையை ஓஷோ மேலும் நீட்டிக்கிறார்.

சூஃபி ஞானி வந்துவிட்டுப் போனதற்குச் சில ஆண்டுகள் கழித்து அந்தச் சத்திரத்துக்கு ஓஷோ வருகிறார். குழம்பிய முகத்துடன் சத்திரக்காரர் ஓஷோவிடம் வருகிறார். தன் மனைவிகளைப் பற்றியும் சூஃபி ஞானி வந்ததைப் பற்றியும் ஒரு முன்னறிமுகம் தந்துவிட்டு, “ஐயா, எனக்கு மறுபடியும் குழப்பம். சூஃபி ஞானி வந்துவிட்டுப் போன பிறகு ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நான் என்னுடைய அழகான மனைவியை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். விகாரமானவளை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார்.

“ஏன்?” என்று ஓஷோ கேட்கிறார்.

“அழகான மனைவி, தன்னுடைய அழகைப்பற்றித் தான் கொண்டிருக்கும் அகந்தை உண்மையில் தன்னை விகாரமாக ஆக்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய இயல்பை நினைத்து வருந்த ஆரம்பித்தாள்.

அவள் அழகை மறைத்த அகந்தை விலகியதால் அவள் உண்மையிலேயே அழகாகத் தெரிய ஆரம்பித்தாள்.விகாரமானவளோ தனது தன்னடக்கத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். இப்போது அவளுடையஅகந்தை அவளை உண்மையிலேயே விகாரமாக ஆக்கிவிட்டது. இதனால் அழகியை நேசிக்கவும் விகாரமானவளை வெறுக்கவும் ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று புலம்பினார் சத்திரக்காரர்.

ஓஷோ என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

“நான் ஏதாவது சொன்னால் கதை மறுபடியும் தலைகீழாக மாறிவிடும். ஆகவே, வாயை மூடிக்கொண்டு இரு” என்கிறார் ஓஷோ!

இங்கே கொடுத்திருக்கும் ‘தாவோ தே ஜிங்’கின் இரண்டாவது அதிகாரத்தின் மையப்பொருளை இந்தக் கதையைவிட அழகாக விளக்கிவிட முடியாது.

எல்லாவற்றிலும் பிரக்ஞைபூர்வமாக இருப்பது அதிதீவிர எதிர்நிலைகளை உருவாக்கிவிடுகிறது.நல்லவர்களாக நாம் இருப்பதற்கு, அல்லது காட்டிக்கொள்வதற்கு மிகவும் பிரக்ஞைபூர்வமாக முயற்சியெடுக்கிறோம். நல்லவர்களாக இருப்பதற்கான நம் பிரயத்தனம் கெட்டவர்களை உருவாக்கிவிடுகிறது, அல்லது கட்டமைக்கிறது என்று கருதுகிறது தாவோயிஸம்.

நன்மையையும் தீமையையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒரே இடத்தில்தான் உருவாகின்றன. உருவாகும் இடத்தில் ஒன்றாகவே இருக்கின்றன, நதி போல. அந்த நதியை அதன் போக்கில் விட்டால் கடலில் கலக்கும் இடத்திலும் தூய்மையான நதியாகவே அது இருக்கும். அதன் போக்கில் குறுக்கிடும்போது சாக்கடையாக நதி ஆகிறது. அதனை அதன் போக்கில் இருக்க,வெளிப்பட விடுவதுதான் தாவோ. நமது பிரக்ஞைதான் இதில் குறுக்கீடு.

எதிரெதிர் நிலைகள் என்று தோன்றுபவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக, நேரெதிரானவையாக தாவோ கருதுவதில்லை. எல்லாவற்றையும் ‘வானவில் தொடர்ச்சி’யாகத்தான் தாவோ பார்க்கிறது. அதாவது, வானவில்லில் ஒவ்வொரு நிறமும் தொடங்கும் இடத்தையும் முடியும் இடத்தையும் நம்மால் தெளிவாகப் பிரித்தறிய முடியாது.

ஆனால், முதல் நிறத்தையும் ஏழாவது நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டும் தொடர்பற்றவைபோல் தோன்றும். எனினும், எந்த இடத்தில் அடுத்த நிறம் பிறக்கிறது, மாறுபடுகிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நன்மை - தீமை, அழகு - விகாரம், உயர்வு - தாழ்வு என்று நேரெதிராக வைத்திருக்கும் எல்லாமே

‘வானவில் தொடர்ச்சி’தான். யாரும்  தன்னைநல்லவராகக் கருதிக்கொண்டு அடுத்தவரைத் தீயவராகக் கருதிவிட முடியாது. ஏனெனில், ‘நாம்’, ‘பிறர்’ என்று மிகுந்த பிரக்ஞையுடன் பிரித்தறிவதுதான் எல்லாவிதமான எதிர்நிலைகளையும் உருவாக்கிவிடுகிறது.

‘நரகம் என்பது பிறர்தான்’ என்பது இருத்தலியல் தத்துவவாதி ழான்-போல் சார்த்தரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் வரும் புகழ்பெற்ற வாக்கியம். ‘பிறரால்தான் நரகம் என்ற ஒன்று உருவாகிவிடுகிறது’ என்ற அர்த்தத்தில் இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘பிறர், மற்றவர்கள் என்ற பிரக்ஞைதான்நரகத்தை நமக்கு உருவாக்கிவிடுகிறது’ என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். நம் பிரக்ஞையில் ‘பிறர், மற்றது’ என்பவை மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கின்றன. நரகத்தின் தோற்றுவாய் இதுதான்.

‘மீள முடியுமா?’ நாடகத்தில் மூன்று பாத்திரங்கள் நரகத்தில் அடைக்கப்படுகின்றன. நரகம் என்று சொல்லப்படும் அந்த இடத்தில் எந்தத் தண்டனையாளனும் இல்லை, கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையும் இல்லை. எந்தத் தண்டனையும் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில் அவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்பது அந்த இடத்தில் மற்றவர்களோடு அடைக்கப்பட்டிருப்பதுதான். ஒவ்வொருவருக்கும் மற்ற இருவர்தான் தண்டனையாளர்கள்.

தண்டனை என்றால் பாத்திரங்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தண்டனை அளிக்கின்றன என்று பொருள் இல்லை. மற்றவர்களின் இருப்பே நமக்குத் தண்டனையாகிவிடுகிறது. ஆக, நரகத்தைச் சொர்க்கமாக மாற்றிக்கொள்வதற்கு ஒரே ஒரு வாய்ப்புதான். பிறரையும் நம்மையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இருத்தல், அதாவது பிறரும் நாமும் ஒரு வானவில் தொடர்ச்சிதான் என்று அறிதல்!அவ்வளவுதான் சொர்க்கம் - நரகம், நன்மை-தீமை உள்ளிட்ட எதிர்நிலைகள்.

எதிர்நிலைகள் சரி! அது என்ன ‘செயல்படாமை’? கொஞ்சம் பொறுத்திருங்கள். தாவோயிஸத்தின் மையத்தை அவ்வளவு சீக்கிரம் தொட்டு, முடித்துவிட முடியாது!

- ஆசை

******

ஓஷோவும் தாவோவும்!

தாவோயிஸத்தைப் பற்றி ஓஷோ பேசிய உரைகள் தொகுக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியாகியிருக்கின்றன. அவற்றுள், ‘அப்சொல்யூட் தாவோ’ (Absolute Tao) என்ற புத்தகத்தில் லாவோ ட்சுவைப் பற்றி ஓஷோ இப்படிக் கூறுகிறார்:

“எவரைவிடவும் மிக ஆழமாக வாழ்க்கையைப் பார்த்தவர் லாவோ ட்சுதான். லாவோ ட்சு மிகச் சிறந்த திறவுகோல். அவரைப் புரிந்துகொண்டால் அவர்தான் பிரதான திறவுகோல்; வாழ்க்கையிலும் இருத்தலிலும் இருக்கும் அனைத்துப் பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல். அவரைப் புரிந்துகொள்ள முயலுங்கள்... இந்தக் ‘கிழப்பய’லுடன் (லாவோ ட்சுவுடன்) ஒரு பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையை அனுபவியுங்கள், அது போதும். இந்தக் ‘கிழப்பயல்’ அழகானவர் - அசிங்கத்துக்கு எதிரிடையான அழகு அல்ல.

இந்தக் ‘கிழப்பயல்’ அறிவாளி, முட்டாளுக்கு எதிரிடையான அறிவாளி அல்ல. இந்தக் ‘கிழப்பயல்’ ஞானம் அடைந்தவர் - அதனால் அஞ்ஞானத்துக்கும் அஞ்ஞானிகளுக்கும் எதிரிடையானவர் அல்ல. இந்தக் ‘கிழப்பயல்’ எல்லாவற்றையும் உள்ளடக்கியவர். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள், புத்தர்களும் அவருக்குள்தான் இருக்கிறார்கள். இரண்டுமானவர். அவரைப் புரிந்துகொள்வீர்கள் என்றால் நீங்கள் புரிந்துகொள்வதற்கென்று ஏதும் மிச்சமிருக்காது. மகாவீரர்களை, புத்தர்களை, கிருஷ்ணர்களை நீங்கள் மறந்துவிடலாம். லாவோ ட்சு மட்டுமே போதும்.”

----------------------------------------------------------------

அழகாயிருப்பது அழகு என்று

எல்லோரும் புரிந்துகொண்டால்

விகாரம் தோன்றுகிறது.

நன்மையை நன்மை என்று

எல்லோரும் புரிந்துகொண்டால்

தீமை தோன்றுகிறது.

எனவே, இருத்தல்

இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது

எளிமை

கடினத்தைத் தோற்றுவிக்கிறது.

நீட்டத்திலிருந்து

குறுக்கத்தைப் பெறுகிறோம்,

அளவை வைத்து;

உயரத்திலிருந்து

பள்ளத்தை வேறுபடுத்துகிறோம்,

இடத்தை வைத்து;

ஒலியதிர்வு

ஒலியை இசைவுபடுத்துகிறது;

இவ்வாறு,பின்னது

முன்னதைத் தொடர்கிறது.

எனவே, ஞானி

தன் பணியைத் தொடர்கிறான்

செயல்படாமையை மேற்கொண்டு;

எனவே, அவன் தன் போதனைகளைப்

போதிக்கிறான், சொற்கள் இல்லாமல்.

- லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’.

தமிழில்: சி.மணி

(உண்மை அழைக்கும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE