தாவோ: பாதை புதிது - 2

By ஆசை

2500 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பிறந்த ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூல், பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். இன்றைக்கும் மிக மிகப் பொருத்தமாக இருக்கும் அந்த நூலைப் பற்றிய தொடர்..

தத்துவஞானிகள் பலரும் காலம்காலமாகச் சொல்லும் விஷயங்களில் ஒன்று மொழியின் போதாமை.கடவுள், அறுதி உண்மை போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது ‘சொல்லில் அடங்காத’, ‘விவரிக்க இயலாத’, ‘சொல்லுக்கு அப்பால் இருக்கிற’ என்பது போன்ற விவரணைகளை ஞானியர், பக்திக் கவிஞர்கள் பயன்படுத்துவதுண்டு. அவர்களின் தொடர்ச்சியாக இன்று நவீன இயற்பியலிலும் மொழியின் போதாமை குறித்துப் பேசப்படுகிறது.

“அணுவுலகைச் சித்தரிக்க முயலும்போது மொழியின் போதாமைகள் மிகவும் தீவிரமானவை. அணுக்களின் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் பேசுவதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அணுக்களைப் பற்றி வழக்கமான மொழியில் பேசுவதற்கு எங்களால் இயலவில்லை” என்று வெர்னர் ஹெய்சன்பெர்க் என்ற புகழ்பெற்ற இயற்பியலாளர் கூறுகிறார்.

மெய்ம்மையை மேலோட்டமாகவோ சுருக்கமாகவோ சித்தரிக்கவும் விளங்கிக் கொள்ளவும் முயலும்போது மொழியில் அவ்வளவு பிரச்சினைகள் தோன்றாது. பெரும்பாலும் எல்லாவற்றையும் குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டு நம் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறோம். குத்துமதிப்புகள் நமக்கு உதவிகரமாகவும் இருக்கின்றன. ஆனால், மெய்ம்மையை மேலும் அணுகி, ஆழமாகப் பார்க்க முயலும்போது நம் குத்துமதிப்பான அணுகுமுறை நம்மை ஏமாற்றுகிறது. ஏனெனில், அதுவரை இரட்டைப் பரிமாணத்தில் மட்டும் தெரிந்த மெய்ம்மை ஆழமாகப் போகப் போகப் பல பரிமாணங்கள் உடையதாகத் தெரிய ஆரம்பிக்கிறது. ஒரு கோணம் அல்ல, பல கோணங்கள்; ஒரு உண்மை அல்ல, பற்பல உண்மைகள். மொழியால் அவ்வளவு எளிதில் இந்த நிலையைச் சித்தரிக்க இயலாது. அதனால்தான் மொழியின் தர்க்கத்தை மீறிச் செல்ல முயல்கிறார்கள் ஞானிகளும் நவீன இயற்பியலாளர்களும்.

தாவோவைப் பற்றி விளக்குவது கடினம்தான். வெவ்வேறு வகையில் அதை உணர்த்த முயலலாம். அதற்கு தாவோயிஸ ஞானிகள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழிமுறைகள்தான் முரண்கூற்று அல்லது முரண்கதைகள். முரண்கூற்று, முரண்கதை என்றால் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் விஷயங்களை ஒன்றாகப் பிணைத்து முரண்பாடான ஒரு கூற்றையோ கதையையோ உருவாக்குவது.

துல்லியமான மொழியில் துல்லியமாக விளக்குவது சாத்தியம் இல்லை என்று கருதி குழப்பக்கூடிய ஒரு மொழியையும் உத்தியையும் தாவோயிஸ ஞானிகள் பயன்படுத்தினார்கள். ஜென் பவுத்தத்தில் வரும் ‘கோவான்’ (Koan) புதிர்க்கதைகள் போலத்தான் இது. குழம்பிப்போய் நாமாகத் தெளியும்போது மொழி மூலம் அல்லாமல், நம் காரண அறிவின் மூலம் இல்லாமல், நம் உள்ளுணர்வின் மூலம் உண்மை நமக்குப் புலப்படும் என்பது இதன் அடிப்படை. விளக்கப்பட முடியாததை விளக்குவதற்கு (உண்மையில் விளக்குவதற்கு இல்லை, உணர்த்துவதற்கு) வழக்கம்போல் நேராகச் சொல்வது சரிப்படாது என்பதால்தான் ‘குதர்க்கமான’ வழி (அதர்க்கமான வழி என்று படிக்கவும்!).

உதாரணத்துக்கு, ஜென் பவுத்தத்தில் சொல்லப்படும் புகழ்பெற்ற கோவான்கள் சில:

‘உனது அசலான முகம் எது - அதாவது உனக்கு உன் பெற்றோர் பிறப்பைத் தருவதற்கு முன்பு உனக்கிருந்த அந்த முகம்?”

“இரண்டு கைகளைத் தட்டி ஓசை எழுப்பலாம். சரி, இப்போது சொல், ஒரே ஒரு கையின் ஓசை எப்படி இருக்கும்?”

இந்தக் கேள்விகளுக்குத் தர்க்கரீதியில் விடைதேட முயன்றால் குழப்பம்தான் மிஞ்சும். தர்க்கம் தோற்றுப்போகும் இடத்தில் இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடை அல்லது தரிசனம் நம் அகவிழிப்புக்கு வழிகோலும் என்று ஜென் நம்புகிறது.

தாவோ என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதிலை நாம் இந்தத் தொடர் முழுவதும் தேடப்போகிறோம்.இந்தத் தேடலில் நமக்கு உதவியாகவும் தடையாகவும் இருக்கும் கருவி மொழிதான். எப்படி உதவியாகும்? எப்படித் தடையாகும்? லாவோ ட்சுவுக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிறந்த தாவோயிஸ ஞானி சுவாங் ட்சு இப்படிச் சொல்கிறார்:

“மீன்பிடி கூடைகள் எல்லாம் மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் மீன் கிடைத்தபிறகு நாம் கூடையை விட்டுவிடுகிறோம்; கண்ணிகள்எல்லாம் முயல் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் முயல்கள் பிடிபட்டவுடன் நாம் கண்ணிகளை விட்டுவிடுகிறோம்.கருத்துகளைத் தெரியப்படுத்துவதற்காகச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் கருத்துகள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டவுடன் சொற்களை நாம் விட்டுவிடுகிறோம்.”

மீன்பிடி கூடைகள், கண்ணிகள் விஷயத்தில் எல்லாம்சரியாக நடந்துவிடுகின்றன. சொற்கள் விஷயத்தில் அப்படி நடப்பதில்லை. சொற்களையே நாம் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம். சொற்கள் கருத்துகளை மறைப்பவையாக இப்போது மாறிவிடுகின்றன.  அதனால்தான் ‘தாவோ தே ஜிங்’கின் முதல் அதிகாரத்திலேயே தாவோவை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சூசகம் தொடக்க வரிகளில் கிடைத்துவிடுகிறது:

‘எடுத்துச்சொல்லப்படக் கூடிய தாவோநிரந்தர தாவோ இல்லை. விளக்கப்படக்கூடிய பெயர் மாறாத பெயர் இல்லை’

இந்த அதிகாரம் ‘தாவோ தே ஜிங்’ நூலின் நுழைவாயில் மட்டுமல்ல, அதன் மையத்தையும்கூட நமக்கு உணர்த்துவது. பைபிளின் தொடக்கப் பகுதியில், கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்று ஆரம்பிப்பதுபோல் ‘தாவோ தே ஜிங்’ நூலின் தொடக்கப் பகுதி இருத்தலின்மை இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது என்கிறது. இருத்தல், இருத்தலின்மை, தாவோ இவை எல்லாம் அவ்வளவு எளிதான சொற்கள் அல்ல. தொடரின் போக்கில் இவற்றைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்வோம்.

தாவோ மதமா?

‘தாவோ தே ஜிங்’ நூல் எழுதப்படும் காலத்தில் ஒரு மத நூலாக எழுதப்படவில்லை. போரும் ஆக்கிரமிப்பும் அரசியல் ஸ்திரமின்மையும் மிகுந்து காணப்பட்ட ஒரு காலத்தில் அதற்கு எதிர்வினையாகவும், மனிதர்கள் தமது மூலாதாரத்தை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதை நினைவுறுத்தவும் லாவோ ட்சு எழுதிய நூல் அது.

இந்த நூலைப் படிக்கும் ஒருவருக்கு இவ்வளவு தொன்மையான இந்த நூலில் மதம், சடங்குகள், தொன்மம் சார்ந்த விஷயங்கள் கிட்டத்தட்ட ஏதும் இல்லை என்பது பெரும் வியப்பளிக்கக் கூடியது. எந்த மதத்தையும் நிரூபிக்கவோ ஸ்தாபிக்கவோ இந்த நூல் எழுதப்படவில்லை என்றாலும் காலப்போக்கில் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ‘தாவோயிஸம்’ என்ற மதம் உருவானது. அதற்கான சடங்குகள், கடவுளர்கள், தொன்மங்கள்,கோயில்கள் உருவாயின.

சீனத்தில் கம்யூனிஸப் புரட்சி ஏற்பட்ட பிறகு தாவோயிஸம் கிட்டத்தட்ட துடைத்தழிக்கப்பட்டது. சமீப காலத்தில் சீனர்களின் மத விவகாரங்கள் குறித்த தன் அணுகுமுறையை சீன அரசு சற்றே தளர்த்திக்கொண்டதால் அங்கு மறுபடியும் தாவோயிஸம் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. சீனா மட்டுமல்லாமல் தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலானோர் தாவோயிஸத்தைப் பின்பற்றுகின்றனர்.

தாவோயிஸத்தின் தாக்கம் மிகவும் விரிவானது. கன்ஃபூசியஸ் உள்ளிட்ட ஏராளமான சீனத் தத்துவ ஞானிகளிடம் தாவோயிஸத்தின் தாக்கத்தைக் காண முடியும். தாவோயிஸமும் பவுத்தமும் சந்தித்துக்கொண்டதன் விளைவாகப் பிறந்ததுதான் சான் பவுத்தம். சான் பவுத்தம்தான் ஜென் பவுத்தமாக உருமாறி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, இன்று உலகின் பெரும்பாலான நாடுகளிலும் தன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கவிதை, ஓவியம், சிற்பம், அரசியல், மருத்துவம் (அக்குபங்சர், அக்குபிரஷர்), தற்காப்புக் கலை (டாய் ச்சீ, ஜூடோ) இன்னும் ஏராளமான துறைகளிலும் தாவோயிஸத்தின் தாக்கம் உண்டு. தாவோயிஸம் செயல்படுத்தப்பட முடியாத துறை என்று ஏதும் இல்லை என்று ஏராளமான மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்தத் தொடரின் குவிமையமானது மதமாக உருமாறிய தாவோயிஸம் அல்ல, ‘தாவோ தே ஜிங்’ நூலில் வெளிப்படும் தாவோயிஸம். தற்காலச் சூழலில், நம் வாழ்க்கையோடு எப்படி அதைப் பொருத்திப் பார்க்க முடியும் என்பதற்கான முயற்சிதான் இந்தத் தொடர், தவிர தாவோயிஸம் என்ற மதத்தைப் பற்றியது அல்ல!

இயான் லாக்வுட்

ஒளிப்படக்காரரும் சுற்றுச்சூழலியலாளருமான அமெரிக்காவைச் சேர்ந்த இயான் லாக்வுட்டின் இளமைப் பிராயம் பெரிதும் இந்தியாவிலேயே கழிந்தது. தற்போது கொழும்பில் இவர் வசித்துவருகிறார். சி.மணியின் மொழிபெயர்ப்பில் 2002-ல் வெளியான ‘தாவோ தே ஜிங்’ நூலை அலங்கரித்த இயான் லாக்வுட்டின் புகைப்படங்கள் தற்போதைய தொடரையும் அலங்கரிக்க வருகின்றன.

*******

எடுத்துச் சொல்லக்கூடிய தாவோ நிரந்தர தாவோ இல்லை. விளக்கப்படக்கூடிய பெயர் மாறாத பெயர் இல்லை. இருத்தலின்மை என்பது வானக, வையகத்தின் தோற்றுவாய் எனப்படுகிறது. இருத்தல் என்பது அனைத்தின் அன்னை எனப்படுகிறது.

எனவே, நிரந்தர இருத்தலின்மையிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் புதிரான தொடக்கத்தைச் சலனமின்றி நாம் பார்க்கிறோம். எனவே, நிரந்தர இருத்தலிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் புறத்தோற்ற வேறுபாடுகளைத் தெளிவாக நாம் பார்க்கிறோம். இருத்தலின்மையும் இருத்தலும் ஆதியில் ஒரே மாதிரி; ஆனால், வெளிப்படுகிறபோது வேறு வேறு.

இந்த ஒற்றுமை நுண்மையின் நுண்மை எனப்படுகிறது. பிரபஞ்சப் பகுதிகளின் தொடக்கம் வெளிவருகிற வாயில் இந்த எல்லையற்ற நுண்மையின் நுண்மையாகும்.

- லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’.

தமிழில்: சி.மணி

(உண்மை அழைக்கும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE