குல்தீப் யாதவ் – இந்திய கிரிக்கெட்டின் விடிவெள்ளி

By காமதேனு

கண்கள் தூங்க மறுக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறார். அதிகாலை 3 மணிக்குப் படுக்கையில் இருந்து எழுகிறார். விடியலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது மனம் தூங்க மறுக்கிறது. தனது கட்டிலிலேயே பந்தை வீசி பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த நாள் காலை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவர், தன் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்படி முதல் போட்டிக்கு முன்தினம் இரவு தூக்கம் இல்லாமல் தவித்த குல்தீப் யாதவ்தான், இன்று சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலரை தூக்கமில்லாமல் தவிக்கவிட்டுக் கொண்டிருக் கிறார். இவரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டேவும் நிழலாய் நிற்கிறார். வேகப்பந்து வீச்சாளராகத் தன்னிடம் பயிற்சி பெற வந்த குல்தீப் யாதவை ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாற்றிக் காட்டிய மாஸ்டர் அவர்தான்.

“வாசிம் அக்ரமைப் போல் தானும் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று விரும்பினான் குல்தீப். ஆனால், ஒரு வேகப்பந்து வீச்சாளனுக்கு ஏற்ற உடல் வலிமை குல்தீப் யாதவிடம் இல்லை. அதனால் அவனை ஒரு சுழற்பந்து வீச்சாளனாக்க முடிவு செய்தேன். இதுபற்றிச் சொன்னபோது குல்தீப் யாதவ் என்மீது கோபப்பட்டான். பின்னர் அரை மனதுடன் ஒப்புக்கொண்டான். போகப் போக அவனுக்கு சுழற்பந்து வீச்சு பிடித்துப்போனது.

சுழற்பந்து வீச்சாளராக அவன் வீசிய முதல் பந்தே ஒரு சைனா மேன் பந்துதான். அவனிடம் இப்படி ஒரு ஆற்றல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பிரமித்துப் போய்விட்டேன். பின்னர் தொடர்ந்து அதே முறையில் பந்து வீசச் சொல்லி அவனை உற்சாகப்படுத்தினேன்” என்கிறார் கபில்தேவ் பாண்டே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE