பாடுக பாட்டே! - 1

By நாஞ்சில் நாடன்

நாட்பட்ட மதுவுக்கு மதிப்பு அதிகம். இன்றும் வெளிநாட்டு மதுக் குப்பிகளில் அறிவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம், 12, 18 அல்லது 21 ஆண்டுகள் மூத்தது என, ஆனால் நாட்பட்ட ஊழலுக்கு மதிப்பே கிடையாது. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி. அயோக்கியன் = யோக்கியன் என்பதுவே நீதி. மது மூத்தால் விலை அதிகம். அதற்காகவே ஓக் மரப் பேழைகளில் காற்றுப் புகாமல் சீல் வைத்துப் பேணி, சந்தைக்கு அனுப்பும்போது போத்தலில் நிறைத்து விற்பனை செய்வார்கள். மதுவுக்குத் தமிழில் மாற்றுச் சொற்கள் உண்டு, கள், தேறல் என. ஆனால், தேறல் எனும் சொல்லுக்கு தெளிவு, தெளிந்த கள், தேன், சாறு என வேறு பொருள்களும் உண்டு.

‘தேட் கடுப்பன்ன நாட்படு தேறல்’ என்பது அதியமான் மகனை பொருட்டெழினியை ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரி. ‘பாம்பு வெகுண்டன்ன தேறல்’ என்கிறது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுப்படை. பாம்பின் சீற்றத்தை ஒத்த மது என்பது பொருள். ‘தேறல் மாந்தினர்; தேன்இசை மாந்தினர்; செவ்வாய் ஊறல் மாந்தினர்’ என்பார் கம்பர்.

வாய் ஊறலுக்கு நான் பொருள் சொல்ல வேண்டாம். ‘புது மண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும்’ என்பதுவும் கம்பன். அகலிகையும் இந்திரனும் துய்த்த காமம் பற்றிப் பேசும்போது, தேளின் கொட்டு வாங்கிய கடுப்பைப் போன்ற, பாம்பின் சீற்றத்தை ஒத்த நாட்பட்ட மது போன்று நம்மிடம் பல தொல்லிலக்கியப் பாடல்கள் உண்டு. அவை, தேளின் விடம் போன்று கடுக்கும், தேன் போன்று இனிக்கும், போதை ஏற்படுத்தும், மருந்தாகப் பயன்படும், தமிழ் வாசமும் வீரியமும் பரப்பும், விலை மதிப்பற்றதும் ஆகும்.

அவற்றுள் சில பாடல்களை அறிமுகம் செய்வதே இந்தத் தொடரின் நோக்கம்.

பாம்பாட்டியின் கூடையில் கிடக்கும் பாம்புபோல மெல்லிய மூச்சுக் காற்றையும் சலித்த சீறலையும் வெளிப்படுத்திக்கொண்டு, இன்னும் அவை உயிர் வாழ்கின்றன. படம் எடுத்து ஆடுவதை மறந்து, உடலின் அரைச் சுருள் பிரிப்பதே ஆயாசமாக இருக்கிறது. ஆனால், இன்னும் வாழ்ந்திருக்கின்றன.

உண்மையில் அவை பாம்புகள் அல்ல.

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்’ என்பதோர் உவமை. அவை உயிர்த்திருக்கும் பெரும் செல்வங்கள். சங்க நிதி, பதும நிதி போல் நவ நிதியங்கள். முதுசொம். பரம்பரைச் சொத்து. பண்டாரம். பண்டாரம் எனில் ஆண்டி என்று பொருள் மட்டுமல்ல; கருவூலம் என்றும் பொருள். பாவப் பண்டாரம் என்பது கம்பனின் சொல்லாட்சி.

பழந்தமிழ் இலக்கியம் என்பது பெருநிதியம். ஆனால், பேழைகளுக்குள் அடங்கிக் கிடக்கிறது. என்றாலும் உயிர்ப்புடன் இருப்பவை. புதைந்து கிடந்தாலும் பொற்காசுகள் நிரம்பிய செப்புக் கவசம். மங்காது, மாசு படாது, மவுசு குறையாது. அவற்றுள் மாதிரிக்குச் சில பாடல்களை இத்தொடரில் பார்க்க இருக்கிறோம்.

தூது என்பதோர் தனி இலக்கிய வகை. வடமொழியில் இதனை சந்தேசம் என்பார். மகாகவி காளிதாசனின் தூது நூல் ‘மேக சந்தேசம்’. அதனை ‘மேகதூதம்’ எனும் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் மதுமிதா தமிழ்ப்படுத்தினார். சங்க இலக்கியங்கள் முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம், தேவாரம் என தூதுப் பாடல்கள் உண்டு. சிற்றிலங்கியங்களில் தூது ஒரு முக்கியமான பகுதி.

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், வண்டு, தென்றல் முதலிய பத்தும் தூது போவன என இலக்கணம் உண்டு. எகினம் எனில் அன்னம், சகி எனில் தோழி, பூவை எனில் பெண், பிற்காலத்தில் புலவர்கள் தமிழ், மான், முகில், நெல், சவ்வாது, பணம், புகையிலை, பழைய சோறு எனத் தூது விட்டிருக்கிறார்கள். இன்று கட்டிய மனைவியையும் தூது விடுகிறார்கள் கனத்த செல்வம் சேர்க்க.

தமிழ் இலக்கியப் பரப்பில் சத்திமுத்தப் புலவர் என்றொருவர் வாழ்ந்திருக்கிறார், சில நூற்றாண்டுகள் முன்பு இவர் திருச்சத்தி முற்றம் சார்ந்து பட்டீசுவரத்தில் தெற்கு வீதியில் வசித்துவந்தார் என்றும், அவரது பரம்பரையினர் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள் என்றும் பிற்காலப் புலவர்கள் எனும் நூலில் உ.வே.சா குறிக்கிறார். சத்தி முத்தப் புலவர் நாரையைத் தூது விட்டிருக்கிறார்.

முதலில் நமக்கு நாரைக்கும் கொக்குக்கும் வேறுபாடு தெரிய வேண்டும். அதற்கு முன்பு பருந்துக்கும் செம்போத்துக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். குருகு என்றால் அது முருகல் தோசை என்றும் எண்ணிவிடல் ஆகாது. தமிழ்ப் பாடல் தொகுப்புகளில், சத்திமுத்தப் புலவர் பெயரில் நமக்குக் கிடைப்பது இரண்டே பாடல்கள்தான். அற்றுள் முதல் பாடலை நாம் இங்கு பேசப் போகிறோம். இரண்டாவது பாடல் என்ன என்பதைத் தமிழ் இனத்தையும் பண்பாட்டையும் மொழியையும் காக்க சோர்விலாது கண்துஞ்சாது உழைக்கும் ஆளுங் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘நாரை விடு தூது’ என்றால் ‘நாரை விட்ட தூது’ என்பதல்ல. நாரையைத் தூதாக விட்டது. சத்திமுத்தப் புலவர் மதுரைக்குப் போனார். எதற்குப் போனார் என்று தெரியவில்லை. ஒருவேளை பாண்டிய மன்னனைச் சந்தித்துப் பாடிப் பரிசில் பெறப் போயிருக்கலாம். போனவர் பசியில் துவண்டு, குளிரில் நடுங்கித் துன்புறும்போது, தன் நிலையை மனைவிக்குச் சொல்ல நாரையைத் தூது விடுவதாகப் பாடல்.

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!

நீயும் நின் மனைவியும் தென்திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனை சுவர்க் கூரை கனைகுரல் பல்லி

பாடு பார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு

எம்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

என்பது பாடல், அவலம், துன்பம், பசி, குளிர், வாட்டம், நம்பிக்கை இழப்பு, தனிமை எனத் தொனிப்பது.

சிவந்த கால்களை உடைய நாரையே! பழம் படுகின்ற பனையின் கிழங்கை, நீளமாக வகுந்தாற் போன்று, பவளம் போன்று சிவந்த கூர்மையான அலகைக் கொண்ட செங்கால் நாரையே! நீயும் உன் மனைவியும் தென்திசைக் குமரியில் கடல் ஆடி, வட திசை நோக்கிச் செல்வீர்களேயானால் எம்மூர் சத்திமுத்தத்தின் பொய்கையில் தங்குங்கள். அந்த ஊரில், மழையால் ஈரமான சுவரின் கூரை இறப்பில், கனைக்கும் குரல் கொண்ட பல்லியின் ஓசையின் பலன் பார்த்திருப்பாள் என் மனைவி.

அவளைப் பார்த்து ஒரு தாக்கல் சொல்லுங்கள். எம் கோன் மாறன் பாண்டியனின் கூடல் நகரில், போதுமான உடை இல்லாமல், வாடைக் காற்றில் தளர்ந்து, இரு கைகளாலும் தோளைப் பொத்திக்கொண்டு, மடிந்த கால்களால் வயிற்றையும் நெஞ்சையும் அணைத்தவாறு, பெட்டிக்குள் அடைபட்ட பாம்பு போல மூச்செறிந்து உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் ஏழையாளனாகிய என்னைக் கண்டேன் என்று சொல்லுங்கள் என்பது பாடலின் பொருள்.

பனங்கிழங்கு என்பது நெடும்பனையைத் தோண்டி எடுப்பதல்ல. பனம் பழம் மண்ணில் விழுந்து, முளைத்து, வேரோடிக் கிழங்கு ஆவது. பனங்கிழங்கை நறுக்கித் தின்பதில்லை. நீளவாக்கில் பிளந்து, நார் உரித்துத் தின்பது. செங்கால் நாரையின் பவளம் போன்ற கூரிய வாயானது பனங்கிழங்கைப் பிளந்தது போல இருக்கிறது. பிளந்தது என்பதற்கு மாற்றுச் சொல், கண்மணி குணசேகரனின் நடு நாட்டுச் சொல்லகராதியில், கீணுதல்.

ஆண்டாள், ‘புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்பார். பொய்கையை வாவி என்ற சொல்லால் குறிக்கிறார் புலவர். ஆண்டாள், ‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்கிறாள்.

சரி! கொக்குக்கும் நாரைக்கும் என்ன வேறுபாடு? கொக்கு தூய வெள்ளை. நாரை சாம்பல் வெள்ளை. கொக்கின் கால்கள் கருப்பு. நாரைக்கு செங்கால். பாடலின் சோகச் சுவை தாண்டி, இன்னொரு சிறப்பான உவமை, பேழையுள் இருக்கும் பாம்பு போல் உயிர்த்திருக்கிறேன் என்பது.

நாரை போய்ச் சொல்லாவிடின், புலவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதே அறியாமல், மனைவி நனைந்த சுவரின் கூரையின் இறப்பில் இருக்கும் பல்லியின் குரலிலிருந்து பலன் காண முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். அந்தக் காலத்துப் புலவனின் பாடு இது. பாட்டும் அதுவே! உலா வந்த பாண்டியன், புலவரின் பாடல் கேட்டு, அவர் நிலைக்கு இரங்கி, பரிசளித்துத் துன்பம் தீர்த்தானாம். தமிழ் உள்ள அளவும் சத்திமுத்தப் புலவரின் பாடலும் இருக்கும்தானே!

ற்றொடர். இன்னும் குறிப்பாகச் சொல்லப் புகுந்தால், குறுந்தொகையில் ஔவையார் பாடல் வரி. பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாட்டு, பாடல் அல்லது செய்யுள். கம்பன்தான் ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்றான். சங்க இலக்கிய ஆதி நூல்களைப் பாட்டும் தொகையும் என்றே குறித்தனர். அவை, பத்துப்பாட்டு மற்றும் எட்டுத் தொகை.
‘பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி அடா!’ என்று கவிமணி பாடியது நினைவிருக்கலாம். இன்று பாட்டு என்றால் திரைப்படப் பாடல், அல்லது இசைப் பாடல் என்று பொருள்படுகிறது. இசையுடனோ ஓசை நயத்துடனோ இலக்கணத்துடனோ இலக்கணம் இன்றியோ யாக்கப்பட்டது பாட்டு.


கவிஞர், கவிதாயினி எனும் சொற்கள் மிகப் பிற்காலத்தவை. புலவர் என்றே பாடல் இயற்றியவர் அறியப்பட்டார். புலவர் என்றால் தமிழ்க் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர் என்று மட்டும் பொருள் இல்லை. பாட்டு எழுதும் ஆற்றல் உடையவர் புலவர். கபிலர், பரணர், அவ்வையார், கோவூர்க்கிழார், கணியன் பூங்குன்றன், வெள்ளிவீதி யாவரும் புலவர்கள். வறுமையை, துன்பத்தை, இயற்கையை, வீரத்தை, வள்ளல்தன்மையை, அழகை, அறத்தை, பல்வகைச் சிறப்பைப் பாட்டாகப் பாடி வைத்தனர் புலவர்கள். ‘வித்தை விரும்பு’, ‘தோற்பன தொடரேல்’, ’கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’, ‘கலக்கினும் தண்கடல் சேறாகாது’ என்பன பாட்டுக்கள்.
‘பாடுக பாட்டே’ எனும் இந்தத் தொடரின் பொருள், சிறப்புகளைப் பாட்டாகப் பாடுவாயாக என்பது. இங்கு நாம் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புக்களைப் பாடப் போகிறோம்.

- (இன்னும் பாடுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE