குவியமில்லா ஒரு காட்சிப்பேழை - 1

By மதன் கார்க்கி

அறிமுகம்

வாசகர்களுக்கு வணக்கம். 

‘காமதேனு'வுடன் என் முதல் தொடரைத் தொடங்குகிறேன். என் எண்ணங்களை உங்களுடன் பகிர பக்கம் தந்த ‘காமதேனு’ குழுவுக்கு நன்றி சொல்லித் தொடங்குகிறேன்.

இத்தொடரில் உங்களோடு உரையாடப் போகிறேன். கேள்விகள் கேட்கப்போகிறேன். குழந்தையின் கையில் கிடைத்த நிழற்படக் கருவியாய், நான் கண்டதை எல்லாம் பதிவுசெய்யப்போகிறேன். இது என் குவியமில்லா காட்சிப்பேழை!

- மதன் கார்க்கி

நிழல்

அம்மா.

ஊதற்பையோடு நிற்கும் என்னைப் படம் பிடித்தார்.

அந்த ஊதற்பையின் வண்ணங்கள் நினைவில் இல்லை. அம்மா எனக்கு ஊட்டி வளர்த்த எண்ணங்கள் இன்னும் பசுமையாய்.
அம்மாவழி எனக்கு வந்த ஆர்வம், நிழற்படங்கள் எடுப்பது. நான் பிடித்த, எனக்குப் பிடித்த நிழல்களை இந்தப் பகுதியில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

‘அ’ எனும் ஒலியில் மொழிகள் தொடங்கும். 
கடவுள் எனும் ஒளியில் உலகம் தொடங்கும்.

#0001

தொழில்நுட்பம்

என் ஆராய்ச்சி நிறுவனம், சில வாரங்களுக்கு முன்னால் வெளியிட்ட ஒரு மொழிக் கருவி 'பிரிபொறி'. தமிழ் மொழியில் மரம் என்ற தனிச் சொல் மரங்கள், மரத்தில், மரத்துக்குள்ளிருந்துதானேயடா என்பதுபோல 300-க்கும் மேற்பட்ட மாறுதல்கள் பெறும். அச்சொற்களையும் பொற்கோவில், கணினியறை போன்ற கூட்டுச்சொற்களையும் பிரித்துப் பொருள் காணும் கருவி.

தொல்காப்பியத்தில் இருக்கும் விதிகளை ஜாவா மொழி விதிகளாக மாற்றிய என் நிறுவனத்தின் மொழிக்குழு, 2,500-க்கும் மேற்பட்ட விதிகளை பிரிபொறியில் இணைத்துள்ளது. இதன் மூலம் 35 கோடி தமிழ்ச் சொல் மாற்றங்களைப் பிரித்தறிய முடியும். வரும் காலத்தில் இணைய தேடல்களை மேம்படுத்தும். மொழி கற்க விரும்புவோர்க்கு நல்ல ஒரு கருவியாக அமையும் என்று நம்புகிறோம்.
www.karky.in/piripori

மொழி

மொழி ஒரு கடல். 
சிலர் கரைகளில் நின்று கால் நனைக்கிறோம்.  
சிலர் அலைகளில் ஏறி விளையாடுகிறோம்.
சிலர் முத்துக்குளிக்கிறோம்.
அதன் பவளப் பாறைகளை, மீன்களைக் கண்டு வியக்கிறோம்.
கடலை முழுதாய் அறிந்தவர் எவரும் இருக்க இயலாது.
இப்பகுதியில் பழைய சொற்களை அறியவும்
புதிய சொற்கள் கண்டறியவும் போகிறோம்.
 

கடலுக்கான தமிழ்ச் சொற்கள் இவை

சில சொற்கள் மட்டும் பிற மொழிகளில் இருந்து பெற்ற சொற்கள். இச்சொற்களில் உங்கள் மனதைக் கவர்ந்தவை எவை? ஏன்? எனக்கு எழுதுங்கள்.

readers@kamadenu.in 

கடல், சமுத்திரம், அத்தி, அப்பு, அம்பரம், அம்பு, அரலை, அரி, அலை, அளக்கர், அளம், அன்னவம், ஆர்கலி, ஆலம், ஆழி, ஈண்டுநீர், உத்தி, உததி, உந்தி, உரவுநீர், உலக்கை, உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கடும்புனல், கயம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சகரநீர், சசி, சரிற்பதி, சலநிதி, சலராசி, சாகரம், சிந்து, சிந்துவாரம், சுழி, சூழி, தவிசம், தாழி, திமிகோடம், திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோயம், தோழம், நதாதிபதி, நதிபதி, நதீனம், நரலை, நாமநீர், நாரநிதி, நித்தியம், நீத்தம், நீர், நீரதி, நீராழி, நீனிறவியலகம், நெடுநீர், நெறிநீர், நேமி, பயோததி, பயோதரம், பயோதி, பயோநிதி, பரப்பு, பரவை, பரு, பாராவாரம், பாரி, பாழி, பானல், பிரம்பு, புணரி, பெருநீர், பெருவனம், பேரு, பௌரணை, மகரநீர், மகராகரம், மகராங்கம், மகராலயம், மகரி, மகாகச்சம், மகான்னவம், மகீப்பிராசீரம், மழு, மாதங்கம், மாதோயம், மிருதோற்பவம், மீரம், மீனநிலயம், முண்டகம், முதுகயம், முந்நீர், முன்னீர், யாதபதி, வங்கநீர், வரி, வலயம், வளைநீர், வாகினீபதி, வாங்கம், வாரணம், வாரம், வாராகரம், வாரி, வாருணம், வீசிமாலி, வீரை, வெண்டிரை, வெள்ளம், வேலாவலையம், வேலாழி, வேலை, அரசசின்னம், மரல், மாநீர், மாறாநீர், மொலோரெனல், நித்தம், கையம், இரைநீர், உப்பீண்டுவரி, உரவு, ஒத்தன், ஒலக்கமொழி, தோயதி, நீர்நிதி, பொறி, அகூபாரம், அபாம்பதி, பெளவம், தாண்டமண்டலம், தாரதம்...
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE