தாவோ: பாதை புதிது - 1

By ஆசை

நாமெல்லாம் அமைதியின் பெருங்கடலுக்குள் மூழ்கி எழப்போகிறோம். அதன் பெயர் தாவோ!

மதம் என்றும், தத்துவம் என்றும், கோட்பாடு என்றும், சித்தாந்தம் என்றும் மனிதக் கூட்டம் உலகெங்கும் உருவாக்கி வைத்திருக்கும் விதம் விதமான அடையாளங்களுக்குள் அடைக்க முடியாத ‘தாவோ’வை நமக்கு முதலில் கைகாட்டிவிட்டவர் லாவோ ட்சு! சீனத்து ஞானி... 2,500 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் வாழ்க்கையின் ரகசிய முடிச்சுக்களை அவிழ்த்துக் கொடுப்பதில், இன்றும் புத்தம் புதியவராகத் தெரிபவர்! மனித குலத்துக்கு அவர் அளித்த விலைமதிப்பற்ற பரிசு, ‘தாவோ தே ஜிங்’ என்ற நூல்!

இயற்கையைச் சூறையாடுதல், மத-சித்தாந்த அடிப்படைவாதம், போர்கள், போட்டிகள், அதீத நுகர்வு, சமத்துவமின்மை, ஆண்-மையச் சிந்தனை இதெல்லாம் ஏதோ இன்றைக்குப் புதிதாகத் தோன்றியவை அல்ல. புறத்திலும் அகத்திலும் நாம் எதிர்கொள்ளும் பல துன்பங்களும்கூட காலம்காலமாக வெவ்வேறு வடிவத்தில் மனித குலத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. வாழ்க்கை பற்றிய குறுகிய புரிதல் காரணமாக இந்த உலகம் மிக மோசமான பிரச்சினைகளை, அழிவைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கிறது.

உலகிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப் பட்ட நூல்களில் பைபிளுக்கு அடுத்தபடியாக இருப்பது லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’. அது காட்டுவது மிதத்தின் பாதை, இயற்கையின் பாதை, மென்மையின் பாதை, பெண்மையின் பாதை, அழித்தலுக்கு எதிரான வாழ்க்கையின் பாதை! உலகின் தொன்மையான, மிகமிக ஆழமான நூல்களுள் ஒன்று ‘தாவோ தே ஜிங்’. மேலோட்டமான பார்வையில் மிகவும் எளிமையாகத் தோன்றும் இந்த நூலைக்கருத்தூன்றிப் படிக்கும்போது நம்மால் அவ்வளவு எளிதில் தீர்க்க முடியாத பல புதிர்களை அது நம் முன் வைக்கிறது. தாவோ காட்டும் உண்மையை நாம் அனைவரும் சேர்ந்தே கற்பதற்கான, சேர்ந்தே தேடல் நிகழ்த்துவதற்கான ஒரு முயற்சி இது! வாருங்கள், வாரந்தோறும் இனி ‘தாவோ’வைக் கொண்டு வாழ்க்கையை அணுகிப்பார்க்கலாம்.

நாமெல்லாம் நன்கறிந்த புத்தரின் கதை ஒன்றிலிருந்தே தொடங்குவோம்...

ஒரு வாலிபன் தன் மனைவியை இழந்துவிடுகிறான். அவனுக்குத் தற்போது இருக்கும் ஒரே பிடிப்பு அவனது ஐந்து வயது மகன். மனைவி மீது வைத்திருந்த அன்பையும், அவளை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தையும் சேர்த்துத் தன் மகன் மீது ஏற்றி, அவனை அளவுக்கதிகமாக அந்த வாலிபன் நேசிக்கிறான்.

ஒருமுறை வேலை நிமித்தமாக அவன் வெளியூர் செல்கிறான். அந்தச் சமயம் பார்த்துக் கொள்ளையர்கள் வந்து அவனது கிராமம் முழுவதையும் எரித்துவிட்டு, அவன் மகனைத் தூக்கிச்சென்றுவிடுகின்றனர். ஊர் திரும்பிய வாலிபனோ, சாம்பல் காடாகிக் கிடக்கும் கிராமத்தைப் பார்த்துத் துடித்துப் போகிறான். தன் வீட்டருகே அடையாளம் காண முடியாதபடி கருகிப் போய்க் கிடக்கும் ஒரு குழந்தையின் சடலத்தைப் பார்த்தவுடன், அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலாகிறது.

கருகிய சடலத்தைக் கையில் ஏந்தியபடி, “ஐயோ மகனே.. என்னைவிட்டு நீயும் போய்விட்டாயா? இனி நான் வாழ்ந்துதான் என்ன பயன்?” என்று. நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓலமிடுகிறான். ஈமச்சடங்கு நடத்தி சடலத்தை எரியூட்டுகிறான். மிஞ்சிய சாம்பலையெல்லாம் எடுத்து அழகான வெல்வெட் பையொன்றுக்குள் கொட்டுகிறான். வேலை நேரத்தின் போதும், தூங்கும்போதும், சாப்பிடும்போதும் என்று சாம்பல் நிரம்பிய அந்தப் பையை எப்போதுமே சேர்த்து அணைத்துக்கொண்டபடி இருக்கிறான். மகனின் நினைவு மட்டுமே அவனுக்குள். மற்றபடி, வெறும் நடைப்பிணமாகவே நாட்களை நகர்த்துகிறான்.

மாதங்கள் ஓடுகின்றன. ஒருநாள் இரவு அவன் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. சாம்பல் பையை இறுகப் பிடித்தபடி கதவைத் திறக்க யத்தனிக்கும்போது... வெளியிலிருந்து ஒரு சிறுவனின் குரல் பாசம் பொங்க அழைக்கிறது. “அப்பா... சீக்கிரம் வந்து கதவைத் திறவுங்கள். வீட்டைக் கொளுத்திவிட்டு, என்னைக் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றார்கள். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பிய நான், நம் ஊருக்கு வழி தெரியாமல் தேடித் தேடி அலைந்தேன். இதுதான் நம் வீடு என்று இன்றுதான் கண்டடைந்தேன்!’’ என்று கதவுக்கு அப்பால் குழைகிறது அந்தக் குரல்.

சாம்பல் பையை இறுகப் பற்றியபடி வீட்டுக்குள்ளிருந்து கத்துகிறான் தந்தை. “யாரது? என் துன்பத்தை அறிந்துகொண்டு கேலிசெய்து விளையாடுவது? என் மகன் என்றைக்கோ கருகி இறந்துவிட்டான். நீ யாரென்றே எனக்குத் தெரியாது. இங்கிருந்து போய்த் தொலை!” என்று அழுதுகொண்டே சீறுகிறான்.

தேம்பி அழுதபடி ஓயாமல் வெகுநேரம் கதவைத் தட்டிச் சோர்ந்துவிட்டு, அந்தச் சிறுவன் - ஆம், நிஜமாகவே இவனுடைய மகன் - அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகிறான். அதற்குப் பிறகு அந்தத் தந்தையும் மகனும் ஒருபோதும் சந்தித்துக்கொள்ளவேயில்லை. யாருடைய குழந்தையின் சாம்பலையோ தன் மடியில் வைத்துக்கொண்டே வாழ்ந்து, புத்திர சோகம் விலகாமலே அந்தத் தந்தை செத்துப்போனான்.

- இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகு, புத்தர் மேலும் சொன்னார் -

“சில சமயம், சில சூழல்களில் எதையோ ஒன்றை உண்மை என்று நாம் நினைத்துக்கொள்வோம். அதையே ரொம்பவும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தோம் என்றால், உண்மையே நேரில் வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டினாலும் நாம் திறக்க மாட்டோம்.”

சரி... தொடங்கிய இடத்துக்கே வருவோம்...

நாம் ஏன் மதங்களையும் தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் நாடிப்போகிறோம்? இந்த உலகையும், வாழ்க்கையையும், இன்னும் சுயநல அடிப்படையில் சொல்லப்போனால் தனிப்பட்ட நம் வாழ்க்கையையும் மேம்படுத்திக்கொள்ளத்தானே! இறுதியில் என்ன நிகழ்கிறது? நாம் இந்த உலகையும் வாழ்க்கையையும் நம் தனிப்பட்ட வாழ்க்கையையும் மேம்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, இன்னும் இன்னும் மோசமாகவே ஆக்கிக்கொள்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நம் மேம்பாட்டுக்காக எந்த மதத்தை, தத்துவத்தை, சித்தாந்தத்தை நாடிப்போகிறோமோ அவற்றை மேலும் இறுகியவையாகவும் குறுகியவையாகவும் மாற்றிவிடுகிறோம். கிணறு வெட்ட பூதம் தோன்றிய கதைபோல் ஆகிவிடுகிறது.

இதற்கு அடிப்படைக் காரணம் - இந்த வாழ்க்கை, இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஒற்றை மொழியை, ஒற்றைப் பார்வையை மட்டுமே கொண்டு விளங்கிக்கொண்டுவிட முடியாது. ஏன்... எல்லா மொழிகளையும் எல்லாப் பார்வைகளையும் சேர்த்தாலும்கூட விளங்கிக்கொள்ள முடியாது. இதுதான் அனைத்திலும் மேலான உண்மை. முதலில் இதை நாம் உணர வேண்டும். இல்லையென்றால்...

நாம் ஒரு ‘உண்மை’யை மடியில் வைத்துக்கொண்டு அழும்போது... உண்மையான பல உண்மைகள் நம் வீட்டுக் கதவைத் தட்டித் தட்டிச் சோர்ந்துபோகும்.

இதோ... இந்தத் தொடரின் மூலமாக ‘தாவோ’ என்ற உண்மை நம் வீட்டு வாசலில் வந்து நிற்கப்போகிறது. அதை நாம் ஏற்கலாம், ஏற்காமலும் போகலாம். ஆனால், கதவைத் திறந்து வீட்டுக்குள் முதலில் அனுமதிப்போம். வரவேற்பறையில் அமரவைத்து உரையாடிப் பார்ப்போம். அந்தத் தொடர் உரையாடல் இன்னும் இன்னும் பல உண்மைகளை நோக்கி நம் கண்களையும் காதுகளையும் திறந்துவிடலாம்.

(உண்மை அழைக்கும்...)

யார் இந்த ‘லாவோ ட்சு’?

சீனாவில் கி.மு. 6 – கி.மு. 5-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் லாவோ ட்சு. புகழ்பெற்ற சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸின் சம காலத்தவர், கன்ஃபூசியஸைவிட மூத்தவர். சிற்றரசு ஒன்றின் ஆவணக் காப்பாளராகப் பணிபுரிந்த லாவோ ட்சு, அரசியல் சூழல் மோசமடைந்த சூழலில் பதவி விலகினார். தன் வாழ்வின் இறுதிப் பகுதியில் அவர் தலைமறைவாகப் போவதற்காக எருது ஒன்றின் மேல் பயணித்து தன் நாட்டின் எல்லைப்புறத்துக்குச் சென்றிருக்கிறார். அந்த எல்லைப்புறக் காவலாளி லாவோ ட்சுவை அடையாளம் கண்டுகொண்டு, ஏதாவது எழுதித்தருமாறு கேட்டிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 5,000 சித்திர எழுத்துக்களில் ‘தாவோ தே ஜிங்’கை எழுதிக் கொடுத்துவிட்டுத் தலைமறைவானார். 90 வயது வரை வாழ்ந்தார் இவர் எனத் தெரிகிறது.

லாவோ ட்சுவின் வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரியக்கிடைப்பது இவ்வளவுதான்.

‘தாவோ தே ஜிங்’ என்றால் என்ன?

‘தாவோ’ என்ற சொல்லுக்குச் சீன மொழியில் ஏராளமான பொருள்கள் உண்டு. பாதை, சாலை, வழி, வழிமுறை, சரியான பாதை, கோட்பாடு என்பவை அவற்றுள் சில. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் ‘தாவோ’வை ‘The Way' என்று பெரிய எழுத்தில் மொழிபெயர்ப்பார்கள். ‘தாவோ’வின் அர்த்தத்தைப் பாதை என்பதில் மட்டும் குறுக்கிவிட முடியாது என்பதால், அந்தச் சொல்லை மொழிபெயர்க்காமல் ‘தாவோ’ என்ற சொல்லையே பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ‘தே’ என்ற சொல்லுக்கு ‘தார்மிகம்’, ‘அறம்’ போன்ற பொருள் இருந்தாலும், இங்கே ‘தாவோ வெளிப்படும் விதம்’ என்ற பொருள் பொருத்தமாக இருக்கும். ‘ஜிங்’ என்றால் நூல் என்று பொருள்படும். ஆக, ‘தாவோ தே ஜிங்’ என்றால் ‘தாவோ, தே ஆகியவற்றைப் பற்றிய நூல்’ என்று பொருள். ‘தாவோ’, ‘தே’ போன்ற சொற்கள் மேலும் விரிவான பொருளைக் கொண்டவை என்பதால் இந்தச் சொற்களின் பொருளைத் தொடரின் போக்கில் விளக்கமாக அறிந்துகொள்வோம்.

‘தாவோ தே ஜிங்’ நூலுக்குத் தமிழில், ஒருசில மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது தமிழ் நவீனக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் மொழிபெயர்ப்பில் 2002-ல், ‘க்ரியா’ வெளியீடாக வந்த ‘தாவோ தே ஜிங்’ நூல். சி.மணியின் வாழ்நாள் சாதனைகளுள் இந்தப் புத்தகமும் ஒன்று. நமது தற்போதைய தொடரில் இடம்பெறவிருக்கும் ‘தாவோ தே ஜிங்’ அதிகாரங்கள் யாவும் சி.மணியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த அந்தப் புத்தகத்திலிருந்தே கொடுக்கப்படுகின்றன. மகத்தான ஞானநூல் ஒன்றைத் தமிழுக்கு அளித்த சி.மணிக்கு நாம் என்றும் கடன்பட்டிருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE