சென்னை: அமேசான் ப்ரைம் ஓடிடியில் ‘ரூபன்தாரா’ கன்னடப் படம் வெளியாகியுள்ளது. ஆந்தாலஜி சினிமா ரசிகர்களுக்கான திரை விருந்தான இப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பது குறித்த 10 காரணங்கள் இங்கே...
> நம் அன்றாட வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிடும் சாதாரண மனிதர்களை படத்தில் வரும் பிரதான கதாப்பாத்திரங்களை அமைத்திருப்பது படத்தை மனதுக்கு நெருக்கமாகுகிறது.
> ஏஐ-யின் வேகத்துக்கு ஓட பழகிக்கொண்டிருக்கும் மனிதர்களை இரண்டரை மணி நேரம் உட்கார வைத்து, போரடிக்காமல் மனிதத்தைப் போதிக்கிறது இந்த திரைப்படம்.
> போர், ஆயுதங்கள், சுற்றுச்சூழல், சுத்தமான காற்று, தண்ணீரின் தேவை, காவல்துறை, தனியார் மருத்துவமனை கட்டணம், ஆன்லைன் விளையாட்டுகள், கணவன்-மனைவி உறவு, கிராமம், விவசாயம் என நிகழ்கால நிகழ்வுகளை பிரச்சாரமின்றி, நவீன அழகியல் தன்மைக் கொண்ட சினிமாவாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மிதிலேஷ் எடவலத்.
> ஹனுமக்கா-சோம்சேகர் போலேகன் இருவரும் ஏழ்மையான வயது மூத்த தம்பதியாக வாழ்ந்திருக்கின்றனர். இவர்களுக்கான போர்ஷன் அழகிய கவிதைபோல மனதில் படிந்துவிடுகிறது.
> காவல்துறையில் மனிதாபிமானமும், இரக்கமும், அன்பும் கொண்டவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது.
> ஒரு வழக்கை தனது நுட்பமான அறிவைக் கொண்டு மனதார உணர்ந்திருக்கும் தலைமைக் காவலர், மனசாட்சிக்கு விரோதமாக அதை கேஸை எப்படி முடிக்கிறார் என்பது நிகழ்கால நிஜங்களைத் தூலமாக காட்டியிருக்கிறது.
> ராஜ் பி.ஷெட்டியின் இயல்பை மீறாத நடிப்பு ஈர்க்கிறது. அவரது தொடக்கக் காட்சியில் அவர் மீது விழும் நம் கண்கள், இறுதிக்காட்சியில் அனிச்சையாக அவரைக் காண்பதில் இருந்து விலகிக் கொள்ளும் வகையில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
> எந்த வகையிலும் தொடர்பே இல்லாத நான்கு கதாப்பாத்திரங்கள் ஓர் இரவில் சந்திக்கும் இடத்தில் வரும் ட்விஸ்ட் அன்ட் டர்னஸ்களில் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் மிதிலேஷ் எடவலத்.
> படத்தின் ஒருசில இடங்களில் கூர்தீட்டப்பட்ட கத்தி போல பாய்கின்றன வசனங்கள். "ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவளை, மீண்டுமொரு முறை வன்கொடுமை செய்வதுதான் நம்ம சிஸ்டத்தோட நடைமுறை" என்ற வசனம் மரணபங்கம்.
> வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன், அனைத்து ரசனையும் கலந்த ஜனரஞ்சகமான ஆந்தாலஜி திரைப்படம் பார்க்க விரும்புவோர் மிஸ் பண்ணக்கூடாத திரைப்படம் ‘ரூபன்தாரா’