சந்தனக் கடத்தல் புகழ் வீரப்பனின் கதையை ஆராயும் ஆவணத் தொடர் மற்றும் வலைத்தொடர்கள், ஒரே ஆண்டில் அடுத்தடுத்து வரிசை கட்டி வருகின்றன.
சந்தனக்கடத்தல் வீரப்பன் மறைந்த பிறகும் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி மேடைகள் அவருக்கு அவ்வப்போது உயிரூட்டி வருகின்றன. கர்நாடக - தமிழக எல்லையின் வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்து, இரு மாநில வனத்துறை, போலீஸார் மற்றும் கூட்டு அதிரடிப் படையினருக்கு ’தண்ணி’ காட்டியதில் வீரப்பன் ஏக பிரபலமானார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வருவதற்கும் வீரப்பனின் இருப்பு ஒரு காரணமாக பேசப்பட்டு வந்தது.
வீரப்பனின் வாழ்வு, மரணம் மற்றும் இவ்விரண்டையும் சுற்றி உயிரோடு உலவும் சர்ச்சைகள் ஆகியவை படைப்பாளர்களை ஈர்க்கக்கூடியவை. அதிலும் புதுமை படைப்புகளுக்கு கதவுகளை அகலத் திறந்திருக்கும் ஓடிடி தளங்களில், வீரப்பன் கதைகளை வெளியிட பெரும் போட்டியே எழுந்தது. வீரப்பன் உயிரோடு இருந்தபோதும், இறந்த பின்னரும் அவரது வாழ்க்கையை தொட்டும், பிரதானமாக கொண்டும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த வரிசையில், வீரப்பனை நெருக்கமாக அலசும் ஆவணப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் சர்வதேச ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் முந்திக்கொண்டது. 'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற தலைப்பில் 4 அத்தியாயங்கள் கொண்ட வீரப்பனின் ஆவணத்தொடர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியானது. வீரப்பனின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை வனத்துக்கு வெளியிலிருந்த பலரின் பார்வைகளில் இந்த தொடர் அலசியது.
ராஜ்குமார் கடத்தலின்போது அவரை மீட்பதற்காக களமிறங்கியவரும், வனத்துக்குள் பயணித்து வீரப்பனை நெருக்கமாக அறிந்தவருமான நக்கீரன் கோபால் தரப்பை பிரதானமாக பதிவு செய்திருக்கும் அடுத்த ஆவணத்தொடர் அடுத்து வெளியாக இருக்கிறது ’கூச முனுசாமி வீரப்பன்’ என்ற தலைப்பில் டிசம்பர் 8 அன்று ஜீ5 தளத்தில் இந்த தொடர் வெளியாகிறது. தற்போது இந்த தொடரின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
மூன்றாவதாக ’வன யுத்தம்’ என்ற தலைப்பில் வீரப்பன் கதையை திரைப்படமாக எடுத்த ஏ.எம்.ஆர் ரமேஷ், ’வீரப்பன்: எ ஹங்கர் ஃபார் கில்லிங்’ என்ற தலைப்பில் வீரப்பன் கதையை ஓடிடி தளத்துக்கேற்ப வலைத்தொடராகவும் விரிவாக எடுத்துள்ளார். இந்த தொடரும் ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி!
எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்... குஷ்பு பேட்டி!
நடுரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டிப் புரண்டு சண்டை!
திருமணத்துக்கு சென்ற தம்பதியர்... லாரி மோதி பலியான சோகம்!
16,484 சதுர அடி.. அன்பு மகளுக்கு ரூ.50 கோடியில் அமிதாப் தந்த கிஃப்ட்!