‘ஸ்பாய்லருக்கு நோ சொல்லுங்க’: ‘வதந்தி’கள் குறித்து எஸ்.ஜே.சூர்யா வேண்டுகோள்

By காமதேனு

தனது ‘வதந்தி’ வலைத்தொடர் தொடர்பான ஸ்பாய்லர்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

எஸ்.ஜே.சூர்யாவின் ஓடிடி அடியெடுப்பாக அண்மையில் வெளியான வலைத்தொடர் ’வதந்தி: தி பேபிள் ஆப் வெலோனி’. க்ரைம் த்ரில்லர் வகைமையில் அடங்கும் இந்த வலைத்தொடர் அமேசான் பிரைம் தளத்தில் டிச.2 அன்று வெளியானது. புஷ்கர் காயத்ரி தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார்.

வெலோனி என்ற இளம்பெண் கொலைக்கு பின்னுள்ள மர்மங்களை விடுவிக்க சாமானிய போலீஸ் அதிகாரி ஒருவர் களமிறங்குகிறார். வெலோனியை வைத்து ஏராளமான வதந்திகள் உயிர் பெறுகின்றன. வெலோனியின் அறிமுக வட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் திரைக்கதை சந்தேகிக்கிறது. முடிச்சுகள் அனைத்தும் அவிழ்ந்து, முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் விசாரணையில் தீர்வு காணப்படுகிறது. இதற்கு இடையிலான பயணமும், வெலோனி குறித்த சித்தரிப்பும், விசாரணை அதிகாரி பதுங்கிப் பாய்வதுமே வலைத்தொடர். பழகிய போலீஸ் அதிகாரி வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா இந்த வலைத்தொடரில் தோன்றினாலும், ஓடிடி தளத்துக்கே உரிய சாதகங்களை பயன்படுத்தி வித்தியாசம் காட்டியுள்ளார்.

ஒரு திரைப்படத்துக்கு நிகரான புரமோஷன் நடவடிக்கைகள் ’வதந்தி’க்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களிலும் வதந்தி குறித்த பகிர்வுகள் அதிகரித்து வருகின்றன. இவர்களுடன் விமர்சனம் என்ற பெயரில் கதையை விவரிக்கும் ஆர்வக்கோளாறு யூட்யூபர்களும் வலைத்தொடரின் ஸ்பாய்லர்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ’ஸ்பாய்லர் வேண்டாமே.. ப்ளீஸ்’ என்ற கோரிக்கையுடன் ரசிகர்கள் சிலர் பதிவிட, அவை அனைத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘ஸ்பாய்லருக்கு நோ சொல்லுங்க’, வதந்தி குறித்து ’வதந்தி’கள் பரப்பாதீங்க.. என்றெல்லாம் பதிவுகள் களைகட்டி வருகின்றன. தனது முதல் ஓடிடி படைப்பு வரவேற்பு பெற்றதில் அவர் உற்சாகம் அடைந்திருப்பதும் அந்த பதிவுகளில் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE