தமிழர்களுக்கு எதிரானதா ‘தாராவி பேங்க்’?

By காமதேனு

அண்மையில் வெளியான ’தாராவி பேங்க்’ வலைத்தொடர் அதன் சர்வதேச தர வரிசை சிறப்புக்கு மத்தியில், தமிழர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் சர்ச்சைகளை கூட்டி உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரும் குடிசை பகுதிகளில் ஒன்று தாராவி. மும்பை மாநகரின் எழுச்சிக்கு காரணமான உழைப்பாளிகள் இங்கு அதிகம் உள்ளனர். அனைவரும் தமிழகத்திலிருந்து குடியேறி பல தலைமுறைகளாக இங்கே வசிப்பவர்கள். உழைப்பு மட்டுமன்றி மும்பையின் அரசியல் அதிகாரத்திலும் தாராவி குறிப்பிடத்தக்க இடம் வகித்தது. இவற்றின் பின்னணியில் கமல்ஹாசன் நடித்த நாயகன் முதல் ரஜினிகாந்த் நடித்த காலா வரை பல திரைபடைப்புகள் வெளியாகி இருக்கின்றன. இவை அனைத்தும் அங்கு வாழும் தமிழர்கள் குறித்து தமிழர்களின் பார்வையில் சித்தரிக்கப்பட்டவை.

ஆனால் மராத்தியர்கள் மத்தியில் தாராவி மீதான பார்வையும், சித்தரிப்பும் வேறானது. அடியாட்கள், நிழல் தொழில் செய்கிறவர்கள், முறையற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது உட்பட மோசமான வகையில் தாராவியை அங்கத்திய படைப்பாளிகள் அவ்வப்போது பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அண்மையில் வெளியான ’தாராவி பேங்க்’ என்ற வலைத்தொடரும் கவனம் பெற்றிருக்கிறது.

க்ரைம் த்ரில்லராக வகைப்படுத்தப்படும் இந்த வலைத்தொடர், சர்வதேச அளவில் திரை படைப்புகளை தரவரிசைப்படுத்தும் ஐஎம்டிபி தளத்தில் 10க்கு 9.7 பெற்று முன்னணி வகிக்கிறது, மிகச்சிறந்த படைப்புகள் மட்டுமே 9 புள்ளிகளை தாண்டும் என்ற வகையில் தாராவி பேங்க் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

‘தலைவன்’ என்றழைக்கப்படும் தாராவியின் தாதாவாக சுனில்ஷெட்டி நடித்துள்ளார். இது இவரது முதல் ஓடிடி பிரவேசமாகும். நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடும் தலைவனுக்கு எதிராக வரிந்து கிளம்பும் போலீஸ் இணை கமிஷ்னராக விவேக் ஆனந்த் ஓபராய் நடித்துள்ளார். தலைவனின் கிளைகளை முறிப்பதோடு வேர்களை வீழ்த்தவும் முற்படும் போலீஸ் அதிகாரி, அதற்காக எதையும் செய்யத் துணிகிறார். தனது அதிகார வரம்புக்கு அப்பாலும் பல காரியங்களை அவர் மேற்கொள்கிறார். சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான கள்ள சந்தை புழங்கும் தாராவி தலைவனின் வர்த்தகத்தை சாய்க்கவும் இந்த போலீஸ் அதிகாரி போராடுகிறார். தாராவி தலைவனின் அரசியல் எழுச்சியை பொறுக்காது, மாநிலத்தின் பெண் முதல்வரான சோனாலி குல்கர்னியும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்கிறார்.

மும்பையின் நிழலுலகம் என்ற பெயரில் வழக்கமாக தாவூத் இப்ராஹிம் வகையறாவை கையாளும் பாலிவுட்டில் ஒரு மாற்றத்துக்காக தாராவியை தீண்டியிருக்கிறார்கள். ஆனால் அப்படியான முயற்சிகளில் தமிழர்களை சற்று சீண்டியிருப்பது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. நாயகன், காலா அளவுக்கு அவசியமில்லை என்றாலும் தாராவி தமிழர்களின் வாழ்க்கையையும், மும்பை அதிகார களத்தில் அல்லல்படும் அவர்களின் போராட்டத்தையும் ஓரளவேனும் நேர்மையாக பதிவு செய்திருக்கலாம். ஒரு படைப்பாகவும் தமிழர்களை சித்தரிப்பதில் சொதப்பியிருக்கிறார்கள். அதிலும் சுனில்ஷெட்டி உள்ளிட்டோரின் தமிழ் உச்சரிப்பு பரிதாபம்.

விவேக் ஓபராயின் நடிப்பு, அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டது போல மோகன்லால் பாணியில் ஆழ்ந்து வெளிப்படுகிறது. மற்றபடி ஒரு சராசரி வலைத்தொடராக தாராவி பேங்க் தப்பி பிழைத்திருக்கிறது. ஐஎம்டிபி தரப் புள்ளிகளால் ஈர்க்கப்பட்டு வலைத்தொடரை ரசிக்க முற்படுவோர் ஏமாந்து போகலாம். மொத்தம் 10 அத்தியாயங்கள் கொண்ட தாராவி பேங்க் வலைத்தொடரை எம்.எக்ஸ்.பிளேயர் தளத்தில் காணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE