புதிய ரூபத்தில் ‘வராஹ ரூபம்’: காந்தாரா ரசிகர்கள் கண்டனம்

By எஸ்.சுமன்

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட ‘காந்தாரா’ திரைப்படம், அதனது ஓடிடி வெளியீட்டில் அதிருப்தியை சந்தித்துள்ளது. காந்தாராவின் ஹைலைட்டான ’வராஹ ரூபம்’ பாடலை முன்வைத்து ரசிகர்களின் கண்டனத்துக்கு காந்தாராவின் ஓடிடி வெளியீடு ஆளாகியிருக்கிறது.

ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில், செப்.30 அன்று கன்னடத்தில் வெளியான திரைப்படம் காந்தாரா. அண்டை மாநிலங்களில் வெளியான கன்னட பதிப்புக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னக மொழிகளிலும், பின்னர் இந்தியிலும் காந்தாரா டப் செய்யப்பட்டது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் புதிய சாதனை படைத்தது. குறிப்பாக பாலிவுட்டில் ரிலீஸான இந்தி படங்களின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு காந்தாரா அங்கே கவனம் பெற்றது.

இதற்கிடையே காந்தாரா படத்தின் நிறைவாக ரசிகர்களை மயிர்க்கூச்செரிய செய்யும் ’வராஹ ரூபம்’ பாடலை முன்வைத்து ஒரு சர்ச்சை வெடித்தது. ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மட்டுமன்றி அஜனீஷ் லோக்நாத் இசையும் வராஹ ரூபத்தின் வெற்றிக்கு காரணமானது. ஆனால் வராஹ ரூபம் பாடலின் இசை ’நவரசம்’ என்ற சுயாதீன இசைப்பாடலை கையாண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நவரசம் பாடலை வெளியிட்ட, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் ’தாய்க்குடம்’ இசைக்குழு நீதிமன்றத்தை நாடியது. இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தை அடிப்படையாக கொண்டவை என்று காந்தாரா தரப்பு சமாளிக்க, அது அப்பட்டமான காப்பி என்று வாதிட்ட தாய்க்குடத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஓடிடி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் இன்று(நவ.24) வெளியானது. ஆனால் அதில் தங்கள் விருப்பத்துக்குரிய வராஹ ரூபம் பாடல் இல்லாது ரசிகர்கள் திகைத்தனர். அந்த இடத்தில் முற்றிலும் வேறான இசையில் வராஹ ரூபம் பாடல் சேர்க்கப்பட்டிருந்தது. அதிருப்தியடைந்த ரசிகர்கள் காந்தாராவின் ஓடிடி பதிப்புக்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ’உங்கள் பதிப்புரிமை பிரச்சினை எப்படியோ போகட்டும், ரசிகர்களின் உணர்வுகளை மதித்து எப்படியாவது வராஹ ரூபம் பாடலை காந்தாராவில் சேருங்கள்’ என்றும், ’அப்படியென்ன அவசரம் உங்களுக்கு. பதிப்புரிமை பிரச்சினையை எப்படியாவது பேசித் தீர்த்த பிறகு ஓடிடிக்கு வர வேண்டியதுதானே’ என்றெல்லாம் உரிமையுடன் திட்டித்தீர்க்கிறார்கள்.

திரையரங்க வெற்றிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓடிடிக்கான வரவேற்பும் இருக்கும் என்று எதிர்பார்த்த படத் தயாரிப்பாளர் மற்றும் ஓடிடி நிறுவனத்துக்கு ரசிகர்களின் அதிருப்தி அதிர்ச்சி தந்திருக்கிறது. இதற்கிடையே தாய்க்குடம் இசைக்குழு, காந்தாராவின் அமேசான் வெளியீட்டில் திருப்தி அடைந்திருக்கிறது. நவரசம் பாடலை கையாண்ட ’வராஹ ரூபம்’ பாடலுக்கு பதிலாக வேறு இடம்பெற்றிருப்பது நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், தங்களுக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் தாய்க்குடம் இசைக்குழு பதிவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE