வெப் சீரிஸ் வடிவெடுக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பன் கதை

By காமதேனு

நீதிமன்ற வழக்குகளின் இழுபறியால் தடைபட்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெப் சீரிஸ் உருவாக்கம், தற்போது புதுவேகம் பெற்றிருக்கிறது.

பத்திரிக்கை தொடர்கள், பிரத்யேக புத்தகங்கள், திரைப்படம் என பல்வெறு வடிவங்களில் வெளியானபோதும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை அலுப்பதாக இல்லை. அடுத்த கட்டமாக ஓடிடி தளங்களுக்கே உரிய வலைத்தொடர் வடிவத்திலும் வீரப்பன் கதை உயிர் பெற்று வருகிறது.

’வன யுத்தம்’ என்ற தலைப்பில் வீரப்பன் கதையை திரைப்படமாக எடுத்த ஏ.எம்.ஆர் ரமேஷ், வீரப்பன் குறித்த வலைத்தொடரையும் படமாக்கி வந்தார். வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி பெங்களூர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினால் வலைத்தொடரின் பணிகள் முடங்கியிருந்தன. இடைக்காலத் தடை, வழக்கு விசாரணை என இழுத்தடிக்கப்பட்ட வழக்கை பெங்களூரு நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. இதனால் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் உற்சாகத்துடன் வீரப்பன் வலைத்தொடர் பணிகளுக்கு திரும்பியிருக்கிறார்.

விரைவில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வீரப்பன் கதை வலைத்தொடர் வடிவில் வெளியாக இருக்கிறது. ’வீரப்பன்: எ ஹங்கர் ஃபார் கில்லிங்’ என்று தலைப்பிடப்பட்ட வலைத்தொடர், நேரடியாக வீரப்பன் கதையை அலசுவதோடு, ஒரு ஆய்வு மாணவியின் பார்வையிலும் வீரப்பன் வாழ்க்கை மற்றும் மரணம் தொடர்பான சர்ச்சைகளையும் ஆராய்கிறது. வன யுத்தம் திரைப்படத்தில் வீரப்பனாக நடித்த நடிகர் கிஷோர், வலைத்தொடரிலும் வீரப்பனாக வருகிறார். சுமார் 20 அத்தியாயங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள வலைத்தொடரின் சரிபாதி அத்தியாயங்களுக்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

வலைத்தொடர் வடிவில் படைப்புக்கும், கருத்துக்கும் கூடுதல் சுதந்திரம் என்பதால், வீரப்பன் வெப்சீரிஸ் புதிய சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையிலேயே வலைத்தொடருக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் முத்துலெட்சுமி வழக்கு தொடர்ந்தார். ஆனால் படைப்பு வெளியான பிறகு, அதில் ஆட்சேபம் இருப்பின் நீதிமன்றத்தை அணுகலாம் என்று வழக்கு தள்ளுபடியானது. புதிய வெப்சீரிஸ் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE