’பப்பரக்கா என படுத்திருக்கும் தளபதியை பாருங்கள்..’: பிக்பாஸ் வில்லத்தனங்கள்!

By எஸ்.சுமன்

எதிர்நாயனாக தன்னை முன்னிறுத்துவதன் மூலம் மக்கள் மனதில் படிப்படியாக நாயகனாகும் உருவெடுக்கும் வியூகத்தில் தீவிரமாக இருக்கிறார் அசீம். அந்த போக்கில் அவர் எடுத்துவிடும் வில்லத்தனங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர் நோக்கத்துக்கு உயிரூட்டவும் செய்கின்றன. ஆனால் பிக்பாஸில் அவர் மட்டும்தான் வில்லனா?

அடாவடியை தனது இயல்பாகவே வரித்திருக்கும் அசீம் திருந்துவதாக இல்லை. கமல்ஹாசனே பலமுறை குட்டிய பிறகும் அவர் மாறவில்லை. தனது செயல்களுக்கு வருந்துபவராக, பலரிடம் பலமுறை மன்னிப்புகளை கேட்டிருக்கும் அசீம் அவற்றை உணர்ந்தவராகவும் தெரியவில்லை. 24 மணி நேரமும் இல்லத்தின் போட்டியாளர்களை கண்காணிக்கு பிக்பாஸும் உடனுக்குடன் அதனை சுட்டிக்காட்டி அசீமை நெறிப்படுத்துவதாக இல்லை. மாறாக நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்காக இவை பலியாகவும் செய்கின்றன. இதன்ன் விளைவாக அசீமின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த முறை சாப்பாட்டு தட்டும் கையுமாக அமர்ந்த ஆர்யன் தினேஷிடம் வலிய சென்று வம்பிழுத்தார் அசீம். இரவு அரச அருங்காட்சியகத்தில் களவு நடக்கப்போவதை ஒட்டி விடிய விடிய கண்விழித்திருந்தவர்களில் அசீமும் ஒருவர். சில காரணங்களுக்காக தூங்குவதுபோல அவ்வப்போது பாவனையும் செய்திருப்பார். அப்படி ஒரு இடத்தில் தூங்கும் அசீமை பார்த்து நகைச்சுவைக்காக ஆர்யன் தினேஷ் கமெண்ட் அடித்திருப்பார். இதனை செவிமெடுத்திருந்த அசீம் அடுத்த நாள் ஆர்யன் தினேஷிடன் தனது வில்லத்தனத்தை ஆரம்பித்தார்.

ஆர்யன் தினேஷ் தன்னைப் பற்றி புறம் பேசியனார் என்பதுதான் அசீம் குற்றச்சாட்டு. ஆனால் சம்பவ இடத்தில் மூன்றாம் நபர் இல்லாதபோது அது எப்படி புறம் பேசியதாகும் என்ற ஆர்யன் தினேஷின் வாதத்தை அசீம் உள்வாங்கவே இல்லை. வெறுத்துப்போன ஆர்யன் தினேஷ் ’சாப்பிடும் நேரம் பார்த்து வேண்டுமென்று வம்பிழுக்கிறாயே’ என்று சாப்பாட்டை துறந்தார். ஆனால் ஆர்யனின் பதட்டத்தை அவரது தோல்வியாக முன்னிறுத்தி தனது அடாவடி வெற்றியை முரசரைத்தார் அசீம்.

ஆர்யன் தினேஷ்

கடைசிவரை தன்னுடைய குற்றச்சாட்டான ’புறம் பேசல்’ என்பதன் பின்னிருந்த அபத்த தர்க்கத்தை அசீம் உள்வாங்கவே இல்லை. கையில் அள்ளிய கவளத்தோடு சாப்பாட்டை துறந்த ஆர்யன் தினேஷ், கசப்பின் உச்சியில் ‘உன்னோடு இனி ஒட்டோ உறவோ இல்லை’ என பிரகடனம் செய்தார். அதையெல்லாம் அசீம் பொருட்படுத்தவே இல்லை. அதே இரவில் ’பப்பரக்கா எனப் படுத்திருக்கும் தளபதியை பாருங்கள்’ என்று அசீம் குறித்து சக போட்டியாளர்கள் நக்கல் அடித்தது நல்லவேளையாக அவர் காதில் விழுந்திருக்கவில்லை. அப்படி நேர்ந்திருப்பின் வீடு ரெண்டுபட்டிருக்கும்.

அசீம்

அசீமின் போக்கை கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி மிகச்சரியாக கணித்தார். ‘ஒரு நாயகனாக தான் மட்டுமே இங்கே திறமையை காட்ட வந்திருப்பதாகவும், இதரர் அனைவரையும் அதற்கு உதவும் துணை நடிகர்களாக அசீம் பாவிப்பதாக’ ராம் குறிப்பிட்டது சரியான கணிப்பு. ஆனால் அசீம் பாணியில், சுயத்தை தாழ்த்திக்கொண்டு தங்கள் இருப்பை முன்னிறுத்த முடியாததன் ஏக்கமும் அதில் வெளிப்பட்டது.

அசீமுக்கும் அப்பாலான வில்லத்தனங்களும் பிக்பாஸ் இல்லத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன. போட்டியாளர்கள் மத்தியில் கண்ணியம் மிக்கவர்களாக காட்சியளித்தவர்களும், இறுதி சுற்று வரை தாக்குபிடிப்பதற்கான எதிர்பார்ப்புக்கு உரியவர்களுமான விக்ரமன் - ஜனனி இடையேயும் நேற்று வில்லத்தனம் எட்டிப்பார்த்தது. ஒன்றுமில்லாததை முன்னிறுத்தி எழுந்த ஈகோ மோதல், ராபர்ட் - ரச்சிதா முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டியும் தீர்வு எட்டப்படவில்லை.

ராபர்ட் - ரச்சிதா

பிக்பாஸ் படத் தொகுப்பாளர்களும் இந்த வில்லத்தனத்தில் சிலவேளை இறங்குகிறார்கள். இழுவையான காட்சிகளை தொகுத்து படையிலிடுபவர்கள், சுவாரசியமான காட்சிகளில் கோட்டை விடுகிறார்கள். போட்டியாளர்கள் மத்தியில் ரச்சிதாவிடம் தனி ஈர்ப்பில் வழியும் ராபர்ட்டும், அவரது அசட்டு ரொமான்ஸும் சுவாரசியமானவை. ராஜா - ராணி இணையராக வேடமிட்ட வாய்ப்பை ராபர்ட் தவறவிடவே இல்லை. அவற்றில் ஒன்றாக ரச்சிதாவுடன் ஜோடியிட்டு அவர் நடனமிடும் அசத்தல் காட்சிகளை ஒரு நிமிடம்கூட முழுதாக ஒளிபரப்பவில்லை.

ஷிவின்

மற்றுமொரு விநோத வில்லத்தனம் ஷிவின் கணேசன் மீது நிகழ்த்தப்பட்டது. அரச அருங்காட்சியகம் டாஸ்க்கின் குளறுபடிகள் எல்லாவற்றுக்குமான பழியை எளிதில் ஷிவின் மீதே அனைவரும் சுமத்தினார்கள். நல்லவேளையாக ஷிவினை அழைத்து பாராட்டி அந்த தவறுகளை பிக்பாஸ் நேர் செய்தார்.

பால் புதுமையர் மத்தியில் தங்கள் பாலின வெறுமையை இட்டு நிரப்பும் நோக்கில், ஆடை அலங்காரத்தில் மிகையாக கவனம் செலுத்துவது வழக்கம். அப்படி தனக்கே உரிய அலங்காரம் கலையாது வளைய வந்த ஷிவின் மீது சக போட்டியாளர்கள் தங்களை அறியாது வன்மம் பாய்ச்சினார்கள். அரசவை நாடகத்தின் அங்கமாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷிவினுக்கான தண்டனையாக அவரது ஒப்பனையை அழிக்க வேண்டும் என்று உத்தரவானது. தனது செயற்கை இமைப்பீலிகளை இழந்த ஷிவின் முகத்தின் பூச்சுக்கள் கேமரா முன்பாக வலிய அகற்றப்பட்டன.

ஷிவின் தனக்கே உரிய ஸ்போர்ட்டிவ் மனநிலையில் அந்த அரிதார இழப்பை இயல்பாக எடுத்துக்கொண்டார். ஆனால் இந்த காட்சியை பார்க்கும் பால் புதுமையருக்கு உறுத்தலையே தந்திருக்கும். சமூகத்தின் மாதிரியை பிரதிபலிக்கும் பிக்பாஸ் இல்லத்தில் ஷிவினை இடம்பெறச் செய்ததன் நோக்கமும் அடிபட்டிருக்கும். நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் முனைப்பில் பிக்பாஸ் வீட்டில் இன்னும் எத்தனை வில்லத்தனங்கள் காத்திருக்கின்றனவோ?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE