ஓடிடி உலா: துப்பறியும் பெண் புலியின் அடுத்த பாய்ச்சல்

By எஸ்.எஸ்.லெனின்

புகழ்பெற்ற துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை எனோலா ஹோம்ஸ் தனியாவர்த்தனம் செய்யும் எனோலா ஹோம்ஸ்-2 தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை என்ற அறிமுகமே எனோலா ஹோம்ஸ்-2 படத்துக்கு எதிரானது என்றளவுக்கு, துப்பறியும் கதையில் பெண்ணுரிமை, தன்னுரிமை எல்லாம் தனியாக பேசுகிறது புதிய எனோலா ஹோம்ஸ் திரைப்படம்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் கரோனா காலத்தில் வெளியான திரைப்படம் எனோலா ஹோம்ஸ். ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை என்ற அறிமுகத்துடன் ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் துடிப்பான வாழ்க்கை, அண்ணனைப் போல துப்பறிவாளராக முற்படும் அவரது ஆர்வக்கோளாறு, பெண்ணின் தனித்தன்மைக்கு காரணமாகும் தாயின் வளர்ப்பு ஆகியவற்றை அங்கதத்தில் நனைத்து பரிமாறியது.

நூற்றாண்டுக்கு முந்தைய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் மற்றும் தொடர்கள் தற்காலத் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பிழந்து போகையில், எனோலா ஹோம்ஸ் கதைகள் ஆர்ப்பாட்டமாய் எழுந்து வந்தன. நான்ஸி ஸ்பிரிங்கர் எழுதிய எனோலா ஹோம்ஸ் கதைகளை தழுவியதாய், எனோலா ஹோம்ஸ் திரைப்பட வரிசையின் முதல் படைப்பு அமைந்திருந்தது. அதற்கு கிடைத்த வர்வேற்பை அடுத்து தற்போது எனோலா ஹோம்ஸ் இரண்டாம் திரைப்படம் வெளியாகி உள்ளது.

வழக்கமாய் திரைப்பட வரிசையில் முதல் பாகம் உருவாக்கிய எதிர்பார்ப்பினை அதன் அடுத்த பாகம் நேர்செய்வது பெரும் சவாலாகும். ஆனால் எனோலா ஹோம்ஸ் முந்தைய கதையைவிட பாய்ச்சல் காட்டியுள்ளது. முதல் கதை முடிந்த இடத்திலிருந்தே எனோலா ஹோன்ஸ்-2 தொடங்குகிறது. தனது பெயரில் தனி துப்பறிவாளர் அலுவலகத்தை திறக்கிறார் எனோலா. ஆனால் ஒரு பெண் துப்பறிவாளரா என்ற ஏகடியமும், சின்னப் பெண்ணுக்கு இதெல்லாம் தேவையா என்ற இலவச அறிவுரையுமே எனோலாவுக்கு கிடைக்கிறது.

எட்டிப்பார்க்கும் ஓரிருவரும், அண்ணன் ஷெர்லாக் ஹோம்ஸ் சந்திப்புக்கு சிபாரிசு கேட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ஈயாடும் அலுவலகத்தை மூடும் முடிவை எனோலா எடுக்கும் நாளில் ஒரு சிறுமியின் வாயிலாக புதிய வழக்கு கதவைத் தட்டுகிறது. மெஸ்ஸி என்ற அந்த சிறுமி காணாமல் போன தனது அக்கா சாராவை கண்டுபிடித்து தருமாறு கோருகிறாள். எனோலா ஹோம்ஸ் பூரிப்புடன் களத்தில் இறங்குகிறார்.

முழுக்கவும் பெண்களை தொழிலாளர்களாக கொண்ட தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் எனோலாவின் துப்பறியும் படலம் தொடங்குகிறது. குவிந்து கிடக்கும் தீப்பெட்டி குச்சிகளுக்கு மத்தியில் பற்றிக்கொள்ளும் விறுவிறுப்பு கடைசி காட்சி வரை கணப்பு குறையாது தொடர்கிறது. காணாமல் போன பெண் உயிரோடு இருக்கிறாளா என்பதே அறியாது, பெரிதாய் எந்தவொரு துப்பும் கிட்டாது தவிக்கிறார் எனோலா ஹோம்ஸ்.

சாமானிய பெண்ணின் வழக்கை எனோலா கையில் எடுத்ததும், எங்கிருந்தோ புறப்படும் அதிகாரமிக்கவர்களின் துரத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் எனோலா ஆளாகிறார். இவையே எனோலாவின் ஆர்வத்தை அதிகரிக்க, வழக்கில் முழுதாய் கரைகிறாள். ஒரு கட்டத்தில் அண்ணன் ஷெர்லாக் ஹோம்ஸ் பிரத்யேகமாக துப்பறியும் வழக்கும் தங்கையின் முதல் வழக்கும் குறுக்கிட, இருவருமே இணைந்தும் பிரிந்துமாக கலக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஷெர்லாக் கதைகளின் அதே பாணியில் படிப்படியாக முடிச்சுகளை கோர்ப்பதும் சிலபல அதிரடி சம்பவங்களுக்குப் பின்னர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ப்பதுமாக எனோலா ஹோம்ஸ் கதையும் சுவாரசியமூட்டுகிறது. அதிலும் பதின்ம வயதின் தடுமாற்றங்கள், துடிப்பு, ஆர்வம் ஆகியவற்றை நகைச்சுவையில் கலந்து திரைப்படம் கலகலப்பாக செல்கிறது.

இந்த திரைப்படத்திலும் அவ்வப்போது எனோலா ஹோம்ஸ் பார்வையாளர்களிடம் அடிக்கடி உரையாடிய வகையில் நம்மையும் கதைக்குள் இழுத்துப்போடுகிறார். ஹோம்ஸ் கதைகளின் புதிர்கள் தனித்துவமானவை. இந்த கதையில் கணிதம், நடனம், இசை நுட்பங்கள் பொதிந்த அவற்றை தற்போதைய தலைமுறையினருக்காக நவீனமும், துரிதமும் தோய்த்து பரிமாறியிருப்பது திரைக்கதையின் வேகத்துக்கு காரணமாகிறது.

திரைப்படத்தின் இன்னொரு ஈர்ப்பு விக்டோரியா காலத்து லண்டன் மாநகரை கண்முன்பாக நிறுத்தியிருக்கும் மெனக்கிடல். கட்டிடங்கள், தெருக்கள், உடையலங்காரம் என சகலத்திலும் காட்டியிருக்கும் சிரத்தையும் கதைக்கு தனியாக கலர் கொடுக்கிறது. கூடவே அக்காலத்திய பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் சமூகத்தில் எதிர்கொண்ட நிராகரிப்புகளையும் பதிவு செய்கிறது புதிய எனோலா ஹோம்ஸ். வரலாற்றில் இடம்பிடித்த லண்டன் தீப்பெட்டி தொழிற்சாலை பெண் தொழிலாளர்களின் 1888-ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்தை லாவகமாய் கதைக்குள் கொண்டு வந்திருப்பதும் சுவாரசியம் சேர்க்கிறது.

படம் நெடுக பெண்ணுரிமையும், தன்னுரிமையும் மறைமுகமாகவும், நேரிடையாகவும் அலசப்படுகின்றன. எனோலாவின் வளர்ச்சியில் அவரது தாயின் பங்கு தூக்கலாக காண்பிக்கப்படுகிறது. அண்ணன் நிழலிலிருந்து விடுபட்டு தனி ராஜபாட்டையில் தனக்கான அபாயங்களை எதிர்கொள்ளும் எனோலா ஹோம்ஸின் துணிவு, கதையின் எதிர்மறை கதாப்பாத்திரம் ஒன்றின் வில்லத்தனத்துக்கு அக்காலத்திய பால்பேதத்தை காரணமாக்கியது உள்ளிட்டவை பொழுதுபோக்குக்கு அப்பாலும் த்ரில்லர் கதையில் ஆழம் சேர்க்கின்றன.

’ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ நெட்ஃபிளிக்ஸ் தொடரில் சிறுமியாக ரசிக மனங்களை கொள்ளை கொண்ட மில்லி பாபி பிரவுன் இதில் குமரியாகவும் ஈர்க்கிறார். கதையின் போக்கில் மெல்லிழையாக வந்து செல்லும் ரொமான்ஸ் காட்சிகள் அத்தனை அழகு. முந்தைய திரைப்படத்தைவிட அதிக காட்சிகளிலும் இடம்பெற்றாலும், ஷெர்லாக் ஹோம்ஸாக தோன்றும் ஹென்ரி கேவில் வழக்கம்போல அடக்கி வாசிக்கிறார். எனோலாவின் தாயாக வரும் ஹெலெனா பொன்ஹாம் கார்டர் பிளாஷ்பேக் மட்டுமன்றி நடப்பு கதையிலும் அதிரடி ஆக்‌ஷனுடன் ஊடாடுகிறார்.

ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை எனோலா ஹோம்ஸ் என்ற ஈர்ப்பு முதல் படத்தோடு செரித்துப் போனதில், அடுத்த பாகம் எனோலாவை முன்னிறுத்தியே உருவாகியிருக்கிறது. ஹார்ரி பிராட்பீர் இயக்கம் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. திரைவரிசை படைப்புகளில் முதல் பாகம் உருவாக்கிய எதிர்பார்ப்பை அடுத்த பாகத்தில் தக்கவைப்பதும், இயன்றால் அதனை விஞ்ச முற்படுவதும் எப்படி என்பதை எனோலா ஹோம்ஸ் நிரூபித்திருக்கிறது. கூடவே அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பையும் எனோலா ஹோம்ஸ்-2 விதைத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE