4 துடிப்பான தமிழ் இயக்குநர்களின் கைவண்ணத்திலான ஆந்தாலஜி திரைப்படமாக ’சோனி லிவ்’ தளத்தில் வெளியாகி உள்ளது ’விக்டிம்’. 4 தனி கதைகளையும் த்ரில்லர் பூச்சு ஒரே இழையில் கோர்க்க முயன்றபோதும் உள்ளடக்கத்திலும், கதைசொல்லலிலும் ஒவ்வொன்றும் தனி ரகம்.
சில்லுக்கருப்பட்டி, புத்தம்புது காலை, பாவக்கதைகள், கசடதபற என தமிழுக்கு பரிச்சயமான ஆந்தாலஜி படைப்புகளின் வரிசையில் ’விக்டிம்’ வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித், சிம்புதேவன், எம்.ராஜேஷ், வெங்கட்பிரபு என கலவையான இயக்குநர்கள் தந்திருக்கும் இந்த ஆந்தாலஜியில், ஒவ்வொரு படைப்பும் தலா சுமார் அரை மணி நேரத்துக்கு நீள்கின்றன.
ரௌத்திரமும் மனித நேயமும்
ஆந்தாலஜியின் முதலும் முத்தாய்ப்புமான படைப்பாக ‘தம்மம்’ தந்திருக்கிறார் பா.ரஞ்சித். செழிப்பான வயல்களை உள்ளடக்கிய கிராமத்தில் எளிய விவசாயி குரு சோமசுந்தரம். அவரது துண்டு நிலத்தை ஆதிக்க சமூகத்தினரின் பிரம்மாண்ட வயல்கள் சூழ்ந்திருக்கின்றன. வயலோரம் ஒற்றை ஆலமரம், அதையொட்டி சாய்வாக அமர்ந்திருக்கும் புத்தர், சிலை மீது தாவி தன்னை பறவையாக பாவிக்கும் பள்ளிச் சிறுமி என திறக்கும் முதல் காட்சியே எதிர்பார்ப்புகளை விதைக்கிறது.
சிறுமி பூர்வதாரணியும் ஆதிக்க சமூகத்தின் பிரதிநிதியான கலையரசனும் ஒரே வரப்பின் எதிரெதிர் திசைகளில் முன்னேறும்போது, எவர் வழிவிடுவது என்ற பூசல் வெடிக்கிறது. இதுவே மனித மனங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதிய வெறியை வயல்சேற்றில் ரத்தம் தெறிக்கச் செய்கின்றன.
புத்தரின் தம்மத்தை முன்வைத்து நகரும் கதையில், ரௌத்திரம் பழகலும், பகைவருக்கு அருள்வதும் கலந்திருக்கிறது. கதையின் முதல் பாதியில் வாய்க்காலில் சிறுமி மீன் பிடிக்கும் காட்சிகளில் கதையின் ஆதார படிமம் மடல் விரிக்கிறது. குறைவான வசனங்கள், திடமான காட்சிகள் என குறும்படத்தில் அழுத்தமும் ஆழமுமான சேதியை அலசுகிறார் பா.ரஞ்சித். நலித்த சமூகத்தின் பிரதிநிதியான குரு சோமசுந்தரத்தின் சதா பதைபதைப்புடனான உடல்மொழி அற்புதம். பள்ளிப் படிப்பு தந்த திடத்தில் தந்தையிடம் கேள்வி எழுப்புவதிலும், எதிராளிகள் மீதான சீறலுமாக வீச்சு காட்டும் சிறுமி பூர்வதாரணி, ஆடையில் வெண்மையும் உள்ளுக்குள் இருண்மையுமான கலையரசன் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர்.
துண்டு நிலத்தை சூழ்ந்திருக்கும் பசிய வயல்களை பருந்து பார்வையில் பதிவு செய்த தமிழ் அழகன், சேற்று வயலில் இயல்பான சண்டைக் காட்சியை வடிவமைத்த ஸ்டன்னர் சாம், துடிப்பான இசை தந்த தென்மா என திரைக்கு பின்னிருந்தும் செறிவான உழைப்பை நல்கியிக்கிறார்கள். கையாண்ட கருத்திலும் அதனை காட்சிப்படுத்தியதிலும் ஆந்தாலஜியின் ஆகச்சிறந்த படைப்பாக முன்நிற்கிறது ’தம்மம்’.
கானல் கதை
பெங்களூரு மென்பொருள் பணியாளரான பிரியா பவானி சங்கர் அலுவல் நிமித்தம் சென்னை வருகிறார். அலுவலக ஏற்பாட்டிலான புறநகர் தங்குமிடத்தில் அன்றைய தினத்தின் ஒற்றை இரவில் அவர் சந்திக்கும் திகில் சம்பவங்களும் எதிர்பாரா முடிவுமே ’மிராஜ்’ கதை. தனித்த தங்குமிடம் அதை சுற்றி நகரும் பயமுறுத்தல்கள் ஆகியவை கறுப்பு வெள்ளை காலத்து படங்களின் தொனியில் நீள்கின்றன.
தங்குமிடத்தின் நிர்வாகி மற்றும் பராமரிப்பாளரான நட்ராஜை சூழ்ந்திருக்கும் மர்மங்களும், அவற்றின் முடிச்சவிழ்ப்புகளும் பல படங்களில் இடம்பெற்றவை. கதையின் முடிவில் அசாத்தியமான மெசேஜ் வைத்திருக்கும் நம்பிக்கையில், முந்தைய காட்சிகளை போதிய அழுத்தமின்றி தந்திருக்கிறார்கள். மனநலன் விழிப்புணர்வுக்கான அந்த சேதியும் உரிய தாக்கத்தை உருவாக்காது கடந்துபோகிறது.
மர்ம வீடு அதில் புதைந்திருக்கும் திகில்கள் ஆகியவற்றில் புதுமை தென்படாத போதும், கதாபாத்திரங்களின் நடிப்பில் காட்சிகள் ஓரளவு துவளாது நகர்கின்றன. குறிப்பாக, பிரியா பவானி சங்கர் வெளிப்படுத்தும் நவீன யுவதிக்கான திடமும், உள்ளுறை அச்சமும் கலந்த நடிப்பை சொல்லலாம். மெட்ராஸ் உச்சரிப்பும், எகிறும் குரலுமாக வலம் வரும் நட்ராஜ் நிறைவுக் காட்சியில் காட்டும் வித்தியாசமும் பொருந்துகிறது.
இயக்குநர் எம்.ராஜேஷின் நகைச்சுவை பூச்சுக்கான முயற்சிகள் நமுத்தும் போகின்றன. கதையின் முடிவில் உணர்த்தப்படும் விழிப்புணர்வு திருப்பம் நடப்பு சமூகச் சூழலில் அதிமுக்கியமானது. ஆனால், அந்த மருத்துவ கருத்தினை தாக்கமின்றி தந்ததில் ஆந்தாலஜியின் சோர்வான படைப்பாகிறது மிராஜ்.
தத்தளிக்கும் சித்தர்
இயக்குநர் சிம்புதேவனுக்கே உரித்தான ஃபாண்டஸி கதையாக வருகிறது ’கொட்டப்பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்’ கதை. பெருந்தொற்று காலத்தின் பொதுமுடக்கத்தின் மையத்தில் கதை நடக்கிறது. ஆட்குறைப்பு காரணமாக ஊசலாடும் பணியை தக்க வைத்துக்கொள்வதற்காக, வித்தியாசமான கட்டுரையை தந்தாகும் நெருக்கடியில் தவிக்கிறார் வார இதழ் உதவி ஆசிரியரான தம்பி ராமையா.
இதற்காக மிக அரிதாக காட்சியளிக்கும் 400 வயது அபூர்வ சித்தர் ஒருவரை பேட்டி காண விழைகிறார். சித்தரை வரவழைப்பதற்கான வழிமுறைகளும் எதேச்சையாய் தம்பி ராமையாவுக்கு சித்தியாகின்றன. ஒருவழியாக சித்தர் நாசரை வரவழைத்து, அவரது விசித்திரமான விதிமுறைகளுக்கு உட்பட்டு பேட்டியையும் நிறைவு செய்கிறார். ஆனால், பார்வையாளர் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளுடன் சுவாரசிய முடிவு காண்கிறது கொ.பா.வ.மொ.மா.சி கதை.
ஃபாண்டஸி கதைசொல்லலை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் அவலத்தையும், மனித மனங்களின் சிறுமையையும் உரசும் வசனங்களில் கதைப்போக்கு தொய்வடைவதை தவிர்த்திருக்கலாம். இதனால் விறுவிறுப்பான தொடக்கம், எதிர்பார்ப்புகளை கிளறும் கிளைமாக்ஸ் இவற்றுக்கு இடையிலான காட்சிகள் இழுவையில் வீழ்கின்றன.
தம்பி ராமையா, நாசர் என்று நம்பிக்கையானவர்களைக் கொண்டு நகரும் கதையில் நகைச்சுவையும் பெயராதது இன்னொரு சோகம். ஆர்ஜே.விக்னேஷ்காந்தை உள்ளடக்கி ஒன்றுக்கு இரண்டாக நீளும் கிளைமாக்ஸ் காட்சிகளும் அதனை த்ரில்லராக விவரித்ததிலும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
வாக்குத் தவறும் துப்பாக்கி
பெற்றோர் அறியாது கணவராக வரிந்துகொண்ட கிருஷ் வெளிநாட்டில் பணிபுரிய, இங்கே தாபத்துடன் உழலும் இளம் மனைவி அமலா பால் வசம் ’கன்ஃபெஷன்’ கதை தொடங்குகிறது. தன்னையும் வெளிநாட்டுக்கே கூட்டிச் செல்லுமாறு கணவனை போனில் நச்சரிக்கும் அமாலா பாலை, இன்னொரு பன்மாடி அடுக்ககத்திலிருந்து ஸ்னைப்பரில் குறிபார்க்கிறார் கூலி கொலையாளியான பிரசன்னா.
தொலைதூர துப்பாக்கி துப்பத் தயாராகும் தோட்டா முன்னிலையில், தான் இழைத்த குற்றங்களை பட்டியலிடும் நிர்பந்தத்துக்கும் ஆளாகிறார் அமலா பால். அப்படி அவர் விவரிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் இறுதியில் பிரசன்னாவின் துப்பாக்கி வெடிக்கிறது.
பணி முடித்து வீட்டில் தனியாளாய் புகையும் குடியுமாக உருளும் நவ யுவதி, மனைவியுடனான இரவு உணவுடன் நைட் ஷிஃப்ட் பெயரில் உயிர் பறிக்கக் கிளம்பும் கூலி கொலையாளி என இரு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகள் கதைக்குள் இழுக்கின்றன. ஆனால், அமலா பால் தொடர்பான அறிமுகம் மற்றும் அதீத விவரணைகள் இழுவையாகின்றன.
தொலைதூர துப்பாக்கி முன்னிலையில் அமாலா பால் அளிக்கும் வாக்குமூலத்தைவிட அதன் நிறைவில் காத்திருக்கும் திருப்பம் பார்வையாளரை நிமிர அமர்த்துகிறது. கிளைமாக்ஸில் திருப்தியடையாத இயக்குநர் வெங்கட் பிரபு, தனது ’மங்காத்தா’ பட பாணியில் அவிழ்க்கும் இன்னொரு முடிச்சும் த்ரில்லருக்கு முழுமை சேர்க்கின்றன. பிரேம்ஜி அமரனின் இசை, சக்தி சரவணனின் ஒளிப்பதிவு ஆகியவையும் கதைக்கு தேவையானதை தருகின்றன.
முதலும் கடைசியுமான இருவேறு படைப்புகளில் ஈர்க்கும் இந்த ஆந்தாலஜி, இடைப்பட்ட இரு படைப்புகளில் ஒப்பேற்றுகிறது.