ஓடிடி உலா வசீகரிப்பில் பிசகிய ‘வட்டம்’!

By எஸ்.எஸ்.லெனின்

மாநகரின் இருவேறு மூலைகளில் அரங்கேறும் பணயக் கடத்தல்கள், ஓரிரவில் ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. இந்த ஹைப்பர் லிங்க் பாணியிலான கடத்தல்களின் ஊடே, காதல் துரோகத்தின் பெயரால் பெண்கள் சுமக்கும் பழியை அவர்களின் தரப்பிலிருந்து கூராய்கிறது ’டிஸ்னி+ஹாட்ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கும் ’வட்டம்’ திரைப்படம்.

துரோகம் என்பதன் மறுபக்கம்

உயிருக்கு உயிராய் காதலித்தவனை கழற்றிவிட்டு பசையானவனை மணந்துகொள்வதாக, பெண்கள் மீது வெகுஜன சினிமாக்கள் சுமத்திய வன்மமும் வசையும் சொல்லில் அடங்காது. காதலித்தவனுக்கு துரோகம் செய்யும் பெண்களை பழிதீர்ப்பதான கதைகளும் ஏராளம். திரைக்கு வெளியே பெண்களுக்கு எதிராக நீண்ட அமில வீச்சு, கொலைத் தாக்குதல்களுக்கும் இந்த திரைப்படங்கள் தூண்டியதுண்டு.

ஆனால், அப்படியான துரோகத்தின் பின்னே உறைந்திருக்கும் நிதர்சனத்தை ஆராயும் துணிவு வணிக சினிமாவுக்கு வந்ததில்லை. அதிகம் பேசப்படாத அந்த புள்ளியை ‘வட்டம்’ திரைப்படம் ஆராய முயன்றிருக்கிறது. அதையும் அந்த பெண்களின் தரப்பிலிருந்தே பேசி இருக்கிறார்கள். காலம் காலமாக செவிமெடுக்கப்படாத இந்த தீனக்குரலை பதிவு செய்த வகையில் வட்டம் திரைப்படம் கவனம் பெறுகிறது.

’ஹைப்பர் லிங்க்’ கதை

வேலையிழந்த மென்பொருள் பட்டதாரிகள் நால்வர், தொழிலதிபர் மகனை கடத்தி பணம் பறிப்பதன் மூலம் வாழ்க்கையில் செட்டிலாக திட்டமிடுகிறார்கள். ஒரு பெண்ணையும் உள்ளடக்கிய அந்த குழு, தங்கள் வாழ்க்கையில் அறிந்திராத ஆள் கடத்தலை முன்னெடுக்கிறது. சில பல சொதப்பல்களுடன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுவதுடன், பணயத் தொகையான ஒரு கோடியை அடைவதில் பாதிக் கிணறும் தாண்டுகிறார்கள்.

இவை இப்படியிருக்க, மாநகரின் இன்னொரு திசையில் குடிகார இளைஞன் ஒருவன் தன் வழியில் குறுக்கிட்ட பணக்காரனை துப்பாக்கி முனையில் கடத்துகிறான். கர்ப்பவதியான அவன் மனைவியிடம் கணவனை விடுவிக்கப் பேரம் பேசுகிறான். எல்லாம் தகைந்து வருகையில் சிறுவனைக் கடத்திய கும்பல் குறுக்கிட, ஏக களேபரமாகிறது. ஹைப்பர் லிங்க் பாணியிலான இருவேறு பணயக் கடத்தல்களும், ஒரே இரவில் தொடங்கி முடியும் த்ரில்லர் டிராமாவுக்குத் தோதாகின்றன.

குறுக்கிடும் கடத்தல்கள்

சைத்ரா ரெட்டியை உள்ளடக்கிய குழு குழந்தைக் கடத்தலை திட்டமிடுகிறது. கடத்தல் குழுவில் ஒருவன் வசிக்கும் அபார்ட்மென்ட் வீட்டில், கடத்தல் சிறுவனை அடைத்து வைக்கிறார்கள். அங்கிருந்தபடி சிறுவனின் பெற்றோரிடம் மிரட்டல் பேரத்தை தொடங்குகிறார்கள். முன்பின் பரிச்சயமற்ற ஆள் கடத்தலுக்கு வாழ்க்கையின் நடைமுறை நிர்பந்தம் காரணமாக துணிகிறார்கள். மென்பொருள் அறிவு மட்டுமே துணையிருக்க, ஏகப்பட்ட தடுமாற்றங்களுடன் கடத்தல் நாடகத்தை நிறைவேற்றுகிறார்கள். கடத்தலுக்கு ஆளான சிறுவன் மாற்றுத்திறனாளி என்பது கடத்தல்காரர்களுக்கு உதவியாகிறது.

இன்னொரு மூலையில் நிறைபோதையில் தடுமாறும் சிபிராஜ், சாலையில் குறுக்கிடும் காரை மடக்கி தொழிலதிபர் வம்சி கிருஷ்ணாவை கடத்துகிறார். சிபிராஜ் நிர்பந்திக்கும் தொகையை திரட்டும் இடைவெளியில் மனைவி ஆண்ட்ரியாவை பணயமாக வம்சி கிருஷ்ணா ஒப்படைக்க வேண்டியதாகிறது. இந்த இடத்தில் ஆண்ட்ரியா - சிபிராஜ் இடையிலான உரையாடல்களும் கருத்து மோதல்களுமே வட்டம் திரைப்படத்தின் மையமாகின்றன.

’ஒத்துவரவில்லை’

காதல் துரோகம் என்பதன் எதிரெதிர் திசைகளின் ஆண் - பெண் பிரதிநிதிகளாக சிபிராஜ் - ஆண்ட்ரியா உரையாடல்கள் அங்கே சூடுபிடிக்கின்றன. ‘ஒத்துவரல’ என்ற ஒரே வார்த்தையில் முறித்துக்கொண்ட முன்னாள் காதலி மீது வன்மம் கொண்டலைகிறார் சிபிராஜ். அதே வார்த்தையில் காதலனை துறந்ததுடன், இன்னொருவனை மணந்து நிறை வாழ்க்கைக்கு முயற்சிக்கிறார் ஆண்ட்ரியா.

இருவேறு துருவங்களில் இருந்தபடி தத்தம் தரப்பு நியாயங்களுடன் இருவரும் மோதிக்கொள்கிறார்கள். வெளியே தொடரும் பணயக் கடத்தல்களும், உள்ளூர நீடிக்கும் கருத்துமோதலும் கதையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. எதார்த்தத்தை உணராத காதலனை உதறி பசையானவனை கரம்பிடிக்கும் பெண்களின் தரப்பாக முன்வைக்கப்படும் வசனங்கள் பொதுப்புத்திக்கு உதைக்கக் கூடும்.

சிபிராஜ் - ஆண்ட்ரியா

சூழ்நிலையின் கைதியாக காதலை இழந்து பணயக் கடத்தலை மேற்கொள்ளும் அபாக்கிய இளைஞனாக சிபிராஜ். மேலாக வில்லனுக்குரிய எதிர்மறை பூச்சும் உள்ளுறையாக இழந்த காதலின் தவிப்புமாக சிபிராஜுக்கு மற்றுமொரு சவாலான வேடம். தந்தை சத்யராஜின் அலட்சிய பாவனைகளும், கொங்கு உச்சரிப்பின் எகத்தாளமுமாக சமாளிக்க முயல்கிறார். சிபிராஜைவிட சற்று வீரியமான பாத்திரத்தில் வருகிறர் ஆண்ட்ரியா.

காதலையும் காதலனையும் மறந்து இன்னொருவனின் மனைவியாக உலவும் பெண், சூழல் காரணமாக இழந்ததை மீண்டும் நினைவுகூர்கிறார். கூடவே, தன் தரப்பு நியாயத்தையும் முன் வைக்கிறார். கொண்ட காதலில் தடம்புரளும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக பேசுகிறார். இந்த கதாபாத்திரமும் அதன் குரல்களும் திரைவெளியில் அதிகம் சித்தரிக்கப்படாதவை. வட்டம் திரைப்படத்திலும் அவற்றை அரைகுறையாகவே அணுகிய போதும் வரவேற்கத்தக்க முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.

கனவுகளை துரத்தும் பெண்கள்

ஆண்ட்ரியா மட்டுமன்றி ரேணுகா மற்றும் அதுல்யா ரவி ஆகியோரின் கதாபாத்திரங்களும் பெண்ணிய பார்வையில் முன்நிற்கின்றன. படிப்பு, வேலை என்று தாங்கள் நேசிப்புக்குரிய கனவுகளைத் துரத்தும் இந்தப் பெண்களில், சமசரமும் நிராசையுமான தாயாக உலவுகிறார் ரேணுகா. தான் இழந்த கனவுகளின் ஈரத்தை உள்வாங்காது, வளர்ந்த மகன் உதாசீனத்தோடு கடந்து போவதைச் சுலபமாக செரித்துக்கொள்கிறார் ரேணுகா.

ஆனால், அடுத்த தலைமுறை பெண் அப்படியல்ல என்கிறார் அதுல்யா ரவி. தொழில் முனைவோராக வேண்டும் என்ற தனது தவிப்பை அலட்சியப்படுத்தும் காதலனையும், அதற்கு இடம்கொடாத அவனது சூழலையும் சட்டென்று துறக்கிறார். நடைமுறையில் அதிகம் அரங்கேறும் இந்த நிதர்சனங்களை, பாவனையின்றி திரையில் சேர்த்ததில் இயக்குநர் கமலக்கண்ணன் தடம் பதித்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்னர் ‘மதுபானக்கடை’ மூலம் தமிழ் ரசிர்களை திரும்பி பார்க்க வைத்த கமலக்கண்ணன், மற்றுமொரு வித்தியாசமான கதையுடன் ’வட்டம்’ வரைந்திருக்கிறார். ஆனால், ஒரு திரைச் சித்திரமாக அதில் முழுமை எட்டாத சோகமும் நேர்ந்திருக்கிறது.

வசீகரிப்பில் பிசகிய வட்டம்

கதாபாத்திரங்களை எழுதி வடிவமைத்ததிலும் திரைக்கதைக்கு உழைத்ததிலும் போதாமை சேர்ந்ததில், ’வட்டம்’ முழுமையாக வசீகரிப்பதில் பிசகி இருக்கிறது. சாமானிய ரசிகருக்கு திரைப்படத்தின் போக்கில் சொல்ல வந்ததை உணர்த்த முடியாது ஆங்காங்கே கதையின் போக்கு துண்டாடப்பட்டிருக்கிறது. மேடை நாடக பாணியில் மேலாக விரையும் திரைக்கதையும், காட்சிகளை பின்தள்ளி விளக்கும் வசனங்களும் சோதிக்கின்றன. பெண்மையக் கதாபாத்திரங்களை அவற்றின் தாக்கம் முழுமையாக வெளிப்படும் வகையில் இன்னும் செதுக்கியிருக்கலாம்.

ஹைப்பர் லிங்க் கதையாடலில் வெவ்வேறு தடங்களில் பயணிக்கும் தனிக் கதைகள் ஓரிடத்தில் குறுக்கிடும்போது நிகழும் மேஜிக் இதில் மிஸ்ஸிங். வம்சி கிருஷ்ணாவை சிபிராஜ் இழுத்தடிக்கும் இடங்களும், இயக்குநர் தன்னுடைய கருத்துகளை வம்சியின் பார்வையில் உணர்த்த முற்படும் இடங்களும் கதைக்கு அநாவசியமாக நீள்கின்றன. ’நக்கலைட்ஸ்’ சசி உள்ளிட்ட ஒரு சில யூடியூபர்களும் தங்களது திறமையைப் பறைசாற்றுகிறார்கள். பாடல்களிலும் பின்னணி இசையிலும் நிவாஸ் கே.பிரசன்னா கதைக்கு தேவையானதைத் தந்திருக்கிறார்.

பட்ஜெட்டை தளர்த்தி, அலைபாயும் காட்சிகளை சற்றே இறுக்கியிருப்பின் ’வட்டம்’ அதன் தாக்கத்தை தீவிரமாக வரைந்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE