ஓடிடி உலா: அடடே ரொமான்டிக் காமெடி!

By எஸ்.எஸ்.லெனின்

3 மணி நேரத்துக்கு முறுவலித்த முகத்துடன் பொழுதுபோக்க விரும்பினால் தாராளமாக ’அன்டே சுந்தரானிகி’ திரைப்படத்தை டிக் செய்யலாம். நெட்ஃப்ளிக்ஸில் அடைக்கலமாகி உள்ள இந்த தெலுங்கு திரைப்படம் ’அடடே சுந்தரா’வாக தமிழிலும் காணக் கிடைக்கிறது.

அடடே காமெடி!

இருவேறு மதங்களின் ஆச்சார குடும்பங்களில் பிறந்து வளரும் ஆண் - பெண் இடையே வழமைபோல காதல் பற்றிக்கொள்கிறது. மதவேறுபாடுகளை களைந்து கைத்தலம் பற்றவேண்டி இருவரும் தத்தம் குடும்பத்தாரிடம் தலா ஒரு பொய் சொல்கிறார்கள். பின்னர் அந்த பொய்யின் ஆயுளை தக்கவைக்க சங்கிலித் தொடராய் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட வேண்டியதாகிறது. இவை ஒரு கட்டத்தில் அவர்களின் காதல், கல்யாணம் மட்டுமன்றி குடும்பங்களின் மதிப்புக்குமே வேட்டு வைக்கிறது. தொடர் சவால்களை வென்று இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா, குடும்பங்களை இணைத்தார்களா என்பதே ’அடடே சுந்தரா’ கதை.

ஆயிரம் சினிமாக்களில் அடித்துத்துவைத்த அரதப் பழசான கதையை, திரைக்கதை லாவகத்தின் மூலம் ரசிக்கும்படி சொல்லியதில் ’அடடே’ போட வைத்திருக்கிறார்கள். ஃபேமிலி டிராமா, ரொமான்டிக் காமெடி, ஃபீல் குட் மூவி என்று எந்த வகைமையிலும் எளிதில் உட்காரும் இதன் திரைக்கதையும், காட்சிகள் தோறும் மனத்தையும், முகத்தையும் மலரச் செய்யும் நகைச்சுவையும் 3 மணி நேர சினிமாவை அலுக்காமல் கொண்டு செல்கிறது.

காதல் செய்யும் மாயம்

பிராமண குடும்பத்தின் ஒரே வாரிசு சுந்தரம். நித்தம் நடைபெறும் பூஜை புனஸ்காரங்கள், ஹோமங்களுக்கு அப்பால், அவனது அன்றாடங்கள் அனைத்தும் ஜோசிய பரிகாரங்கள் படியே நடக்கின்றன. ஆண்களுக்கான சைக்கிளால் மகனின் ஆண்மைக்கு குந்தகம் நேரும் என்று பெண்களுக்கான சைக்கிள் வாங்கித் தருமளவுக்கு அக்கறையும் கண்டிப்பும் கொண்டிருக்கிறார் சுந்தரத்தின் அப்பா. இறுக்கமான குடும்ப வளர்ப்பால் பள்ளியில் தனித்து நிற்கிறான் சுந்தரம்.

அதே போன்ற வளர்ப்பு காரணமாக தோழமைகள் எவரும் ஒட்டாது பள்ளியில் வாடும் இன்னொரு ஜீவன் லீலா. இந்த இருவரும் பரஸ்பரம் ஆறுதலாக, இன்னெதென்று புரியாது உள்ளுக்குள் பூக்கிறார்கள். சூழல் காரணமாக வெவ்வேறு பாதைகளில் பிரிந்தாலும், பெரியவர்களான சுந்தரம் - லீலாவை காதல் ஒன்று சேர்க்கிறது. தங்கள் காதலுக்கு நியாயம் சேர்க்கவும், மதத்தால் பிரிந்த குடும்பத்தினரை சம்மதிக்கச் செய்யவும் இருவரும் தடுமாறுகிறார்கள். காதல் கதையைவிட இந்த குடும்ப டிராமா திரைப்படத்தின் தூணாக நிற்கிறது.

தோதான ததாஸ்து தேவர்கள்

ஆச்சாரம் காப்பதில் இந்து பிராமணர்களுக்கு நிகராக கிறுஸ்துவ மதத்திலும் இருக்கிறார்கள் என்ற அதிகம் அறியப்படாத தகவலை திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. அதற்காக மருத்துவமனை அனுமதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர் ஆகியவற்றில்கூட தத்தம் மதத்தவர்களை நாடுவது கொஞ்சம் ஓவர். காதலால் மத வேறுபாட்டினை கரைக்க முயலும் காதலர்களின் போராட்டமே கதை என்றபோதும், அவற்றை பொய்களின் வழியாக நிரப்புவதும் அதையொட்டிய களேபரங்களும் கலகலவென செல்கின்றன.

தாங்கள் பின்னிய பொய்களின் வலையில் தாங்களே சிக்குவதும், அதற்காக ’ததாஸ்து தேவர்கள்’ வரை திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதும் சுவாரசியமூட்டுகின்றன. திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்கள் ஒரு கட்டத்தில் உண்மையாகும் என்பதை ஆன்மிகமும், மனோதத்துவமும் கலந்து சொல்லியிருக்கிறார்கள். சிறிதும் பெரிதுமாய் திரைப்படத்தின் கடைசி காட்சி வரை பட்டாசாய் தொடரும் பொய் வரிசை, அவற்றின் நோக்கத்துக்கு ஏற்ப அச்சுறுத்தவும், நகைக்கவும் வைக்கின்றன.

கிரேஸி மோகன் பாணி

தங்களது காதல் கல்யாணத்துக்கு பெற்றோர்களை சம்மதிக்க வைக்க பலவித பொய்களை காதல் ஜோடி ஆலோசிக்கிறது. ’பையனுக்கு ஆண்மையில்லை; பெண் திடீர் கர்ப்பம்’ என்று இரு பொய்களை பரிசீலித்து, கடைசியில் இரண்டையும் அரங்கேற்றுகிறார்கள். அதுவரை ரன்வேயில் ஓடும் சினிமா விமானம் அதன் பின்னர் ஆகாயத்துக்குத் தாவுகிறது. குழப்படியான காட்சிகளை காமெடியில் தோய்த்துப் பரிமாறும் கிரேஸி மோகன் பாணியிலான வசனங்கள் குபீர் ரகம். நகைச்சுவை கதையோட்டத்தை த்ரில்லருக்கு இணையாக வழங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. முன்னும் பின்னுமாக பெண்டுலமாக நகரும் கதையை குழப்பமின்றி பரிமாறியதில் ஆத்ரேயா தேறுகிறார். அதிலும் சுந்தரம் தனது மேனேஜருடன் ஒரு மணி நேரம் ஒதுக்கி கதையளக்கும் காட்சிகள் அனைத்துமே பார்வையாளர்களை நகைச்சுவையால் தெளிய வைத்து அடிக்கின்றன.

நானி - நஸ்ரியா கெமிஸ்ட்ரி

இதே நகைச்சுவை உதவியால் சர்ச்சைக்குரிய காட்சிகளை சுலபமாய் தாண்டி விடுகிறார்கள். அதற்காக சமூக அவலம் ஒளிந்த காட்சிகளை பொறுப்பின்றி கடந்திருப்பது உறுத்துகிறது. மத நம்பிக்கைகள், மலடு, ஆண்மை உள்ளிட்டவை தொடர்பான காட்சிகள் பார்வையாளருக்கு தரும் தாக்கம் எதிர்மறையாக ஆகவும் வாய்ப்பிருக்கிறது. நாயகன் நானிக்கு பழகிய வேடம். காமெடி அவருக்கு துரிதமாக வருகிறது. வேகமான தெலுங்கு சாயல் டப்பிங் மட்டுமே சில இடங்களில் படுத்துகிறது. நாயகி நஸ்ரியாவுக்கு இது முதல் தெலுங்கு திரைப்படம். அவரது தனித்துவமான முகபாவங்கள் அவை அவசியப்படும் கதையில் ஏனோ காணோம். மற்றபடி நானி - நஸ்ரியா இடையிலான கெமிஸ்ட்ரி அலாதி ரகம்.

நானியின் அப்பாவாக தோன்றும் வி.கே.நரேஷும் நஸ்ரியா பெற்றோராக வரும் அழகம் பெருமாள் - நதியா ஜோடியும் தத்தம் பக்குவப்பட்ட நடிப்பால் மற்றுமொரு ’காதலுக்கு மரியாதை’ செய்கிறார்கள். பல அடுக்குகளில் விரியும் வி.கே.நரேஷின் நடிப்புக்கு எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரல் கனம் சேர்க்கிறது. இரு பெண்களின் தாயாக கிடந்து தவிப்பதும், பொறுப்பான புலம்பலுமாக நடிப்பில் முதிர்ச்சி காட்டுகிறார் நதியா. தீர்க்கமான மெசேஜ் நவில்வதோடு அபர்ணா பரமேஸ்வரன் வந்து செல்கிறார். சுந்தரத்தின் மேனேஜராக வரும் ஹர்ஷவர்தனின் கதாபாத்திரம் சுவையாக எழுதப்பட்டிருக்கிறது. வீணை பாட்டியாக தோன்றும் அருணா, மருத்துவராக ராகுல் ராமகிருஷ்ணன் போன்றோரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

சோதிக்கும் நீளம்

திரைப்படத்தின் பலம் பலவீனம் இரண்டுமே அதன் நீளம்தான். வலைத்தொடர் அல்ல, மெகாத்தொடருக்கு உவப்பான கதையை சினிமாவுக்குள் முடக்கி இருக்கிறார்கள். இதனால் பல காட்சிகள் போதிய தாக்கமின்றி கடந்து செல்கின்றன. பார்வையாளர்களின் மனக்குரலை முன்கூட்டியே படித்ததுபோல, ’நேராக விஷயத்து வர முடியாததன் தவிப்பை’ மேனேஜர் கதாபாத்திரம் மூலமாக சுய பகடி செய்திருக்கிறார்கள். தெலுங்கு உச்சரிப்பின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் தவிப்பில் தமிழ் வசனங்கள் அடிக்கடி தடுமாறுகின்றன. திடமாக நேரம் ஒதுக்க முடிந்தவர்களால் மட்டுமே ’அடடே சுந்தரா’வை நிதானமாக ரசிக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE