ஓடிடி உலா

By எஸ்.எஸ்.லெனின்

கோடை வாசஸ்தலமான முசோரி நகரில் எதிர்பாரா கொலைகள் அரங்கேறுகின்றன. பத்து வயதை கடக்கும் சிறுமிகள் திடீரென காணாமல் போவதும் சடலமாக மீட்கப்படுவதும் ஊரே திகிலில் ஆழ்கிறது. புலனாய்வில் இறங்கும் பெண் போலீஸ் அதிகாரி, கொலைகளின் பின்னணியில் இருக்கும் சீரியல் கில்லரை அடையாளம் காண வழியின்றி தவிக்கிறார். அவருக்கு உதவ தடயவியல் சூரர் ஒருவர் அனுப்பப்படுகிறார். இருவருமாக சேர்ந்து சீரியல் கில்லரையும், அதன் பின்னணியில் ஒளித்திருக்கும் மர்மங்களையும் கண்டடைவதே ஃபாரன்சிக் (Forensic) திரைப்படம்.

போலீஸ் அதிகாரியாக ராதிகா ஆப்தே மற்றும் தடயவியல் நிபுணராக விக்ராந்த் மாசே நடித்துள்ளனர். முன்னாள் காதலர்களான இருவரும் கடமையின் நிமித்தம் மீண்டும் ஒரே பாதையில் இணைகிறார்கள். அவர்களை பிரித்துபோட்ட உடன் பிறப்புகளின் திருமண வாழ்க்கை மற்றும் துன்பியல் சம்பவங்கள் இன்னொரு திசையிலிருந்து கிளறப்படுகின்றன. ஊரில் அரங்கேறும் கொலை அச்சுறுத்தலின் நிழல் அவர்கள் குடும்பத்தையும் தொட்டுத் தொடர்கிறது.

திரைப்படத்தின் முதல் பாதி மிரட்டல் ரகம் எனில் அடுத்த பாதி அதற்கு ஈடுகொடுக்க வழியின்றி திணறுகிறது. காக்கி விரைப்புக்கு பொருந்தாத ராதிகா ஆப்தே, நடிப்பால் அதனை நேர் செய்கிறார். துள்ளும் இளமையும் துடிப்பான பணி வேகமுமாக ஃபோரன்சிக் அதிகாரி வேடத்தில் தோன்றும் காட்சியில் எல்லாம் திரையை ஆட்கொள்கிறார் விக்ராந்த் மாசே.

மலையாள ஃபோரன்சிக்

2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தலைப்பில் மம்தா மோகன்தாஸ், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படத்தை, ரீ மேக் பெயரில் ஆங்காங்கே பிராய்ந்து இந்தியில் தந்திருக்கிறார்கள். மலையாள ஃபோரன்சிக் திரைப்படத்தின் மைய சரடு, சுவாரசியமான திருப்பங்கள், அறிவியல் புனைவு ஆகியவற்றை மட்டும் இந்தி ஃபோரன்சிக்-கில் பார்க்க முடிகிறது. 2 மொழி தயாரிப்பிலும் 30 ஆண்டுகள் முன்னர் வெளியான ’சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தின் தாக்கம் தென்படுகிறது.

மலை முகடுகளை தழுவும் மேகங்களும், நினைத்து நினைத்து பெய்யும் சாரலுமாக முசோரியின் இயற்கை அழகு க்ரைம் திரில்லருக்கு பாந்தமாகிறது. கொலையாளி இவரா அவரா என கதை நெடுக அலைபாய விடுவதில் இயக்குநர் விஷால் ஃபரியா சாதித்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்தான் கொலையாளியென கைது படலமும், கோப்புகள் மூடலும் முடிந்த பின்னர் திடும்மென கொலைகள் தொடர்வதும், பிறந்தநாளன்று சிறுமிகள் கடத்தப்படுவதுமாக திகில் சரம் சேர்க்கிறார்கள்.

காவல்துறை புலனாய்வைவிட, தடயவியல் துறையை முன்னிறுத்தி முன்னேறும் விசாரணையின் கூறுகள் ரசனைக்கு உரியவை. ராதிகா ஆப்தே, விக்ராந்த் மாசே இருவரையும் சேர்க்கும் குடும்ப பின்னணியில் கதையோட்டத்துக்கு ஒவ்வாத குழப்பம் மண்டியிருக்கிறது. கொலையாளி இவரென முடிச்சவிழ்ந்த பிறகும் அரைமணி நேரத்துக்குப் படத்தை இழுத்திருப்பதை குறைத்திருக்கலாம்.

இந்தி ஃபோரன்சிக்

மலையாள ஃபோரன்சிக் திரைப்படத்துடன் ஒப்பிடுவதை தவிர்க்க, இந்தி ஃபோரன்சிக் படத்தை இன்னொரு தளத்தில் பயணிக்கச் செய்திருக்கிறார்கள். அதிலும் கொலையாளியை முன்வைத்து பிணையபட்டிருக்கும் பின்புலமும், அம்பலத்துக்கு வந்த பிறகு அவர் நடத்தும் ஆட்டுவிப்பும் ரகளை சேர்க்கின்றன. திரைப்படம் முழுக்க ஒரு அவசரமும், ஆழம் பாவாத மேலோட்டமும் தொனிக்கிறது. அதுவே பல காட்சிகளில் ஒன்ற முடியாது குழப்பவும் செய்கிறது.

மலையாள ஃபோரன்சிக் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம். அதன் இந்தி டப்பிங் மற்றும் தற்போது வெளியாகி இருக்கும் இந்தி ரீ மேக் ஆகியவை ஜீ 5 தளத்தில் காணலாம்.

ஈ உடன் மோதும் ரோவன்

’மிஸ்டர் பீன்’ தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக 2 தலைமுறைகளாக குழந்தைகளையும், குழந்தை மனம் படைத்தவர்களையும் குதூகலிக்கச் செய்பவர் ரோவன் அட்கின்சன். வில்லியம் டேவிஸ் உடன் இணைந்து இவர் எழுதி உருவாக்கிய ’மேன் Vs பீ’ (Man Vs Bee) என்ற புதிய தொடர் நெட்ஃப்ளிக்ஸில் இந்த வாரம் வெளியாகி உள்ளது.

மேற்கு நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்களின் நிபந்தனைபடி குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் உரியவர்கள் இல்லாது போனால், அசம்பாவிதங்களுக்கு ஆளாகும் வீட்டுக்கான காப்பீட்டில் உரிமை கோர முடியாது. இதன் பொருட்டும் வீட்டிலிருக்கும் வளர்ப்பு பிராணிகளை பராமரிக்க வேண்டியும், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக தற்கால பணியாளரை நியமித்து விடுமுறை காலத்து வீட்டின் பாதுகாப்பை உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்வார்கள்.

அப்படி செல்வச்செழிப்பு மிக்க தம்பதியரின் மாட மாளிகையை பராமரிக்க ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். அன்றுதான் பணியில் சேர்ந்திருக்கும் அந்த அனுபவக் குறைவும் ஆர்வக் கோளாறுமான பணியாளருடன், அழையா விருந்தாளியாக இன்னொருவரும் மாளிகை வீட்டுக்குள் நுழைகிறார். அந்த விருந்தாளி ஒரு ஈ.

இந்த பணியாளருக்கும் ஈ-க்கும் இடையே மூளும் மோதல்களே திரைக்கதையை நிறைக்கின்றன. பூச்சிக்கொல்லி முதல் வெடிகுண்டு வரை சகல உபாயங்களையும் பயன்படுத்தி ஈ-க்கு எதிரான யுத்தம் தொடுக்கப்படுகிறது. இதையொட்டி அந்த வீட்டில் நடந்தேறும் கலகலப்பான களேபரங்களை தலா பத்து சொச்ச நிமிடங்களில் விரியும் 9 அத்தியாயங்கள் விவரிக்கின்றன. ’மிஸ்டர் பீன்’ பாணியிலான கதாபாத்திரம் என்பதால் ரோவன் பின்னியிருக்கிறார். 67 வயதிலும் தனது பிரத்யேக நடிப்பு மற்றும் முகபாவனைகளை அலுப்பூட்டாது வெளிப்படுத்துகிறார்.

ராஜமௌலி இயக்கத்தில் தலைப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ’நான் ஈ’ திரைப்படத்தில், ஒரு ஈ நிகழ்த்தும் சாகசங்கள் ஹாலிவுட் பாணியில் சொல்லப்பட்டிருக்கும். அந்த ஈ-யை ரசித்தவர்களுக்கு ரோவனின் ஈ, தொடக்க அத்தியாயங்களில் பெரிதாய் ஈர்க்காது. ஆனால், எலியும் பூனையுமான அடுத்தடுத்த சுற்று வேட்டைகளில், ரோவனும் ஈயும் பார்வையாளர்களைச் சாய்த்து விடுகின்றனர்.

ஸ்லாப்ஸ்டிக் காமெடிக்கான தருணங்களை வழக்கம்போல சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ரோவன். முக்கியமாய் வீட்டு வாசலில் அடிக்கடி விசாரணைக்கு வரும் போலீஸ்காரரை சமாளிக்கும் இடங்களில் ரோவன் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. வீடியோ அழைப்பில் தோன்றும் வீட்டு உரிமையாளரை அடுக்கடுக்கான பொய்களில் சமாளிப்பதும், மகளிடம் கெஞ்சல் கொஞ்சலில் கனிவதுமாக ரசிக்க வைக்கிறார். விரைந்து முடிந்தாலும் அத்தியாயம் ஒவ்வொன்றிலும் சுவாரசிய திருப்பங்கள் வரிசை கட்டுகின்றன.

வீட்டின் நாய்க்குட்டி முதல் திருடர்கள் வரை ரோவனின் எதிர்கொள்ளல்கள் அனைத்தும் ’மிஸ்டர் பீன்’ மறுபதிப்பாகவே வருகின்றன. அதன் பின்னரான இடைப்பட்ட வருடங்களில் இதே பாணியிலும் மிஞ்சியதுமாக ஏராளமான காமெடிகள் தோன்றி மறைந்திருப்பதால், ரோவன் ரசிகர்கள் அளவுக்கு மற்றவர்களால் தொடரை ரசிப்பதும் கடினம். ரோவன் விசித்திர கதாபாத்திரத்தின் பின்னணி, வீட்டுக்குள் பிரவேசிக்கும் ஈயை அவர் எதிர்ப்பதற்கான காரணங்கள் உள்ளிட்டவை கதையில் திடமாக இல்லை. தொடரின் முடிவு திருப்பமும் ஏக பழசு. ஆனபோதும் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப சகிதமாய், தரிசிக்க உகந்த வலைத்தொடர் என்ற உத்திரவாதம் அளிக்கிறது ’மேன் Vs பீ’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE