ஓடிடி உலா: புதைந்த பேருந்தில் உயிர்வளிக்காக ஒரு போராட்டம்!

By எஸ்.எஸ்.லெனின்

பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக தேசமே ஆலாய் பறந்ததெல்லாம் சுலபத்தில் மறக்ககூடியதா? மறந்து போனவர்களுக்கு அந்த ஆக்ஸிஜனுக்கான தவிப்பையும், அதற்கு அடிப்படையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் நினைவூட்ட வந்திருக்கிறது ’ஓ2’ தமிழ் திரைப்படம்.

நிபந்தனையற்ற அன்பை பொழியும் ஒரு தாய் தன் குழந்தையை காப்பாற்ற எந்த விளிம்புக்கெல்லாம் செல்கிறாள் என்பதை, உயிர்களை பெருங்கருணையுடன் அரவணைக்கும் இயற்கையை சீண்டுவது அந்த உயிர்களுக்கே எதிராகத் திரும்பும் என்ற மெசேஜ் கலந்து பரிமாறியிருக்கிறது ’ஓ2’ (O2 /ஆக்ஸிஜன்) திரைப்படம். டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி இருக்கும் இந்த ’ஓ2’, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்னொரு சுற்று திரைவலத்துக்கு தயார் என்கிறது.

சதா ஆக்ஸிஜன் சிலிண்டரோடு அலையச் செய்யும் ’சிஸ்டிக் பைப்ரோசிஸ்’ பாதிப்புக்கு ஆளான மகன் வீராவை (ரித்விக்), அதே போன்ற பாதிப்புக்கு கணவனை பறிகொடுத்த தாய் பார்வதி (நயன்தாரா) பரிதவிப்புடன் வளர்க்கிறாள். 7 வயது மகனின் நுரையீரல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கும் அறுவை சிகிச்சைக்காக, அவனுடன் கோவையிலிருந்து கொச்சிக்கு கிளம்புகிறாள். ஆனால், அவர்கள் பயணிக்கும் பேருந்து எதிர்பாரா இயற்கைப் பேரிடரில் சிக்கி மண்ணில் புதைகிறது. பேருந்தினுள் தட்டுப்பாடாகும் உயிர்வளியால், நோயுற்ற சிறுவன் வீராவுக்கு இணையாக பயணிகள் அனைவருக்கும் ஆக்ஸிஜன் அவசியமாகிறது.

ஆனால், வீராவிடம் மட்டுமே தேவையான ஆக்ஸிஜன் இருக்க, அதற்கு காவலாக அவன் தாயும் விழிப்போடிருக்கிறாள். நேரம் கரைகிறது. அளவில் பெரிய சவப்பெட்டியாக மாறிக்கொண்டிருக்கும் அந்த புதையுண்ட பேருந்தில் ஆக்ஸிஜனுக்கான போராட்டங்கள் வெடிக்கின்றன. தற்காலிகத் தேவையான ஆக்ஸிஜனுக்காகவும், நிரந்தர தீர்வான தப்பித்தலுக்காகவும் அவர்கள் குணமும், மனமும் சிதைகிறார்கள். பேருந்தினுள் தொடரும் இந்த போராட்டத்தினூடே அவர்களை மீட்பதற்கான வெளியில் இருப்போரின் தடுமாற்றமுமாக, சில்லிடும் சர்வைவல் த்ரில்லராக நீடிக்கிறது ’ஓ2’ திரைப்படம்.

குழந்தைகளுக்கான நன்னெறியாக விரியும் திரைப்படத்தின் தொடக்க அனிமேஷன் காட்சிகள் அழகு. தொடர்ந்து கதாபாத்திரங்கள் துண்டுதுண்டாய் அறிமுகமாவதும், அம்மா - மகன் பாசத்தை பறைசாற்றும் பாட்டுமாக சற்றே எதிர்பார்ப்பை தூண்டுவதுடன் பொறுமையையும் சோதிக்கிறது. அதற்கெல்லாம் சேர்த்தார்போல அதன் பின்னரான கதை வேகம் பிடிக்கிறது. இப்படி படம் தொடங்கிய அரை மணி நேரத்தில் க்ளைமாக்ஸ் வந்து விடுகிறது. தொடரும் நிமிடங்களை விறுவிறுப்பு குறையாது, மிச்ச ஒன்றரை மணி நேரத்துக்கு நீட்டித்ததில் அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் சாதித்திருக்கிறார்.

அடைபட்ட இடத்தினுள் உயிர் பிழைத்திருக்க போராடுவதை ஒட்டி ஏராளமான த்ரில்லர்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிரெஞ்சு அறிவியல் புதினமான ‘ஆக்ஸிஜன்’ அவற்றில் ஒன்று. இந்த வரிசையில் ரியான் ரெனால்ட்ஸ் நடித்த பரிட் (Buried/2010), அன்னா பென் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஹெலன் (Helen/2019) ஆகிய திரைப்படங்களையும் சேர்க்கலாம்.

இந்த வரிசையில் இடம்பெறக் கூடிய ’ஓ2’ திரைப்படத்தில் கேரள மண்ணுக்கே உரிய இயற்கைப் பேரிடரின் வீரியம், அதையொட்டிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றையும் நெருக்கமாகத் தந்திருக்கிறார்கள். அதிலும், எதிர்பாரா நிலச்சரிவால் மலையிலிருந்து விழும் கல்லும் மண்ணுமாய் ஒரு ஆம்னி பேருந்தை ஆழப்புதைக்கும் காட்சிகள் அச்சுறுத்துகின்றன. பேருந்திலிருந்து தப்பிக்கும் முனைப்பில், மூழ்கடித்த மண்திரளினுள் சிலர் ஊர்ந்து உயிருக்குப் போராடும் இடங்களில் பார்வையாளர்களும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உணரலாம்.

கதை மொத்தத்தையும் முதுகில் சுமக்கும் நயன்தாரா மிகை நடிப்பின்றி வளைய வருகிறார். மகனுக்காக சுயநலன் பேணும் தாய் இக்கட்டின் ஊடே அதனை மறைப்பதும், மகனுக்கு ஆபத்து என்றதும் பூவொன்று புயலாவதுமாக பல பரிமாணங்களில் பரிணமிக்கிறார். யூடியூப் குட்டி நட்சத்திரமாக அண்மையில் புகழடைந்த ’ரித்து ராக்ஸ்’ ரித்விக் நுரையீரல் நோயாளியாக பரிவை அள்ளுகிறார். நயன்தாரா - ரித்விக் இடையிலான தாய் மகன் கெமிஸ்ட்ரி படத்துக்குப் பெரும்பலம்.

செல்வாக்கு இழந்த அரசியல்வாதி, முன்னாள் சிறைக்கைதி, காதலுக்கு சம்மதிக்காத தந்தை மற்றும் ஓடும் திட்டத்துடனான காதலன் இடையே தவிக்கும் பெண், போதைப்பொருள் கடத்தும் போலீஸ் அதிகாரி என கலவையான சக பயணி பாத்திரங்கள் த்ரில்லர் கதைக்குத் தோதாகின்றன. வில்லனாக வரும் இயக்குநர் பரத் நீலகண்டன் அறிமுக காட்சிகளில் அச்சமூட்டுகிறார்; பின்னர் இழுவை பாத்திரப்படைப்பால் எரிச்சலூட்டவும் செய்கிறார். ஆர்என்ஆர் மனோகர், ஜாபர் இடுக்கி, சாரா உள்ளிட்ட பலர் உடன் நடித்திருப்பதில் ஆடுகளம் முருகதாசுக்கு திறமை காட்டுவதில் கூடுதல் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

நிலத்தடியில் புதைந்த பேருந்தில் உயிருக்கு போராடுவோரை மீட்க களமிறங்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை தொடர்பான காட்சிகள் கணிசமான போதாமைகளுடன் வருகின்றன. முக்கியமாய் மீட்புக் குழுவின் அதிகாரியாக வரும் பெண்ணின் நடிப்பில் தாக்கம் குறைவு. பேருந்தினுள் சிக்கியவர்களின் பின்னணி சொல்லப்பட்ட அளவுக்கு, உயிருக்குப் போராடுவோர் மத்தியிலான அவரவரின் அந்த நேரத்து நியாயங்களைச் சித்தரித்ததில் ஆழம் போதவில்லை. ஓடிடிக்கான த்ரில்லர் என்பதால் நீளம் துண்டாடப்பட்டிருப்பதும் துறுத்தலாகத் தெரிகிறது.

ஆக்ஸிஜன் குறையும் உலகின் அவலம், மனிதனின் பேராசையால் சூறையாடப்படும் சுற்றுச்சூழல், குழந்தையைக் காக்கத் தடுமாறும் தாய்மையின் சாதுரியம், தாய்மையையும் இயற்கையும் ஓரிழையில் பிணைக்கும் உள்ளடுக்குகள் ஆகியவை ’ஓ2’ திரைப்படத்தை தனித்துவமாய் முன்னிறுத்துகின்றன. அதிலும் சதா ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் சிறுவன் தனது சிநேகிதனாய் தொட்டிச் செடியொன்றைப் பராமரிப்பதும், ஒரு கேரக்டருக்கு இணையான முக்கியத்துவம் அதற்கு தந்திருப்பதும் அருமை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிப்படும் மனிதர்களை சித்தரித்ததில் உடலுக்கு இணையான மனோதத்துவ கூறுகளையும் சேர்த்திருப்பது படத்துடன் ஒன்றச் செய்கிறது.

பாடல்களில் ஒட்டாத விஷால் சந்திரசேகரின் இசை த்ரில்லர் பின்னணிக்கு தோதாகிறது. தமிழ் அழகன் ஒளிப்பதிவு மற்றும் செல்வா.ஆர்.கே-வின் படத்தொகுப்பு ஆகியவை தேவையானதை அளவோடு தந்திருக்கிறது. சுவாசிக்கத் தடுமாறும் மனிதர்களின் குணங்கள் மாறுவதை உரிய வண்ணங்களுடன் பாவித்திருப்பதில் இயக்குநரின் மெனக்கிடல் பளிச்சிடுகிறது. இயற்கை பேரிடரின் பிரம்மாண்ட அவலத்தை பதிவு செய்வதற்கான கிராஃபிக்ஸ் உத்திகள், சற்றே மாற்றுக் குறையானதைத் தவிர்த்திருக்கலாம். கதையோட்டத்தின் கூர்மைக்கு உதவியிருக்க வேண்டிய வசனங்கள் மேலோட்டமாய் செல்வது திரைப்படத்தின் பலவீனங்களில் ஒன்று.

இயல்பான மனிதர்களாக அறிமுகமாகும் பாத்திரங்கள் சூழ்நிலை கைதிகளாக முற்றிலும் வேறாக மாறும் இடங்கள், சக மனிதர்களின் அன்பும் ஈரமும் நிபந்தனைக்கு உட்பட்டவையே என்ற நிதர்சனம் ஆகியவை ’ஓ2’ திரைப்படத்தின் ரசனையான இடங்கள். அதேசமயம், அறிவியல் புதினம், த்ரில்லர், சமூகக் கருத்து, அம்மா மகன் சென்டிமென்ட் என மண்ணின் ரசிகர்களை மனதில் வைத்து கலவையாக்கியதில் முழுதாய் எதுவும் முன்நிற்காது பல இடங்களில் திரைப்படம் துவள்கிறது. கருத்தும் சொல்ல வேண்டும், கமர்ஷியலாகவும் ஜெயிக்க வேண்டும் என்ற சமரசத்திலான லாஜிக் தடுமாற்றங்கள் மற்றும் போதாமைகளும் படத்தில் உண்டு.

தாயின் நிபந்தனையற்ற நேசத்துக்கு நிகரான இயற்கையின் கருணையை உள்வாங்கவும், அளவின்றி இயற்கையைச் சிதைத்தால் அதுவே எமனாக மாறும் அச்சுறுத்தலை விதைப்பதிலும் ’ஓ2’ ஜெயித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE