ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By எஸ்.எஸ்.லெனின்

சேத்துமான்: தமிழ் திரைப்படம்

நாட்டுநடப்பில் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் உணவு அரசியலின் தோலை உரிக்கிறது சேத்துமான் திரைப்படம். மேற்கு தமிழகத்தில் பன்றிக்கறியை சுட்டும் சொல் ’சேத்துமான்’. வயிற்றுப் பசிக்காக அல்லாடும் எளிய மக்களின் உணவுத் தட்டினை அரசியல் அதிகாரப் பசிகள் தட்டிவிடும் சுயநலத்தை செய்திகளாக கடந்திருப்போம். அப்படியொரு அவலத்தின் பின்னணியில் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் திரைப்படத்தை அவரது பட்டறையை சேர்ந்த தமிழ் இயக்கியிருக்கிறார். எழுத்தாளர் பெருமாள் முருகனின் ’வறுகறி’ உள்ளிட்ட ஒரு சில சிறுகதைகளில் இருந்து சேத்துமானுக்கான திரைக்கதையை நெய்திருக்கிறார்கள்.

கொங்கு கிராமம் ஒன்றில் பள்ளியில் பயிலும் பேரனை தனது உலகமாக கொண்டு வாழ்கிறார் பெரியவர் பூச்சியப்பன். மாட்டுக்கறி விவகாரத்தில் குடும்பத்தின் இதர உறுப்பினர்களை பலி கொடுத்திருக்கும் பூச்சியப்பன் வாழ்க்கையில் பன்றிக் கறியின் உருவில் அடுத்த இக்கட்டு குறுக்கிடுகிறது. உணவு அரசியலை மையமாகக் கொண்ட கதையில் கல்வி, வர்க்கம், சாதி என இதர அரசியல் கூறுகளும், அவற்றின் அதிகம் பேசப்படாத பக்கங்களும் வந்து போகின்றன. பொதுசமூகத்தில் பூசிப் புனையப்படும் அரசியல் கூறுகளை, நிஜத்தின் உக்கிரத்தோடு நெருக்கமாக தரிசிக்க உதவும் படங்களில் சேத்துமானும் சேர்கிறது. சோனி லிவ் தளத்தில் சேத்துமான் திரைப்படத்தை காணலாம்.

போத்தனூர் தபால் நிலையம்: தமிழ் திரைப்படம்

போத்தனூர் தபால் நிலையத்தின் பெட்டகத்துக்கு வரும் பல லட்சம் ரொக்கம் திடீரென களவு போகிறது. அடுத்த ஒரே நாளில் அதனை மீட்டாக வேண்டிய கட்டாயத்தை, பணத்தை பறிகொடுத்த அஞ்சல் நிலைய போஸ்ட் மாஸ்டரின் மகன் எதிர்கொள்கிறார். களவில் சூழ்ந்திருக்கும் மர்மம் என்ன, அது எப்படி வெளிப்படுகிறது என்பதை ரசனையான காதல் மற்றும் எடுபடாத நகைச்சுவையுடன் இந்தத் திரைப்படம் பரிமாறுகிறது. மிக எளிமையான கதை என்றபோதும் அதை தொண்ணூறுகளின் பீரியட் படமாக செதுக்கியதில் வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்க முயற்சித்திருக்கிறார்கள். அக்காலத்தை பிரதிபலிக்கும் வாகனங்கள், வீடுகள், தபால் அலுவலகம் மட்டுமன்றி, ரேடியோ பெட்டி, தந்தி அனுப்பும் கருவி உள்ளிட்ட சிறு உபகரணங்களிலும் காலத்தின் சாயலைத் தோய்த்திருக்கிறார்கள்.

ஓரிருவர் தவிர்த்து முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்திருப்பதும், அவர்களின் பலரை மண்ணின் மைந்தர்களாக சேர்த்திருப்பதும் அழகு. அடுத்த டி.ராஜேந்தர் என்னும் அளவுக்கு படத்தை இயக்கி நடித்திருக்கும் பிரவீண், எடிட்டிங், கலை உட்பட இதர பல பங்களிப்புகளிலும் நிறைந்திருக்கிறார். தொண்ணூறுகளில் புழங்கிய மர்மக் கதைகளின் முலாம் பூசிய திரைப்படம், அதே கால வேகத்தில் நகர்கிறது. புதிய அனுபவங்கள் நிறைந்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படத்தை ’ஆஹா தமிழ்’ தளத்தில் ரசிக்கலாம்.

நிர்மல் பதக் கி கர் வாப்ஸி: இந்தி வலைத்தொடர்

நிர்மலுக்கு 3 வயதிருக்கும்போது அவனது தந்தை பூர்விக கிராமத்திலிருந்து டெல்லி மாநகரத்துக்கு இடம்பெயர்கிறார். ஆனபோதும் நிர்மலின் நினைவில் கிராமம் குறித்த ஏக்கங்கள் நிறைந்திருக்கின்றன. தனது 24 வயதில் உறவினர் திருமணத்துக்காக பிஹாரின் அந்த அழகிய கிராமத்தில் தனது வேர்களைத் தேடி விரைகிறான் நிர்மல். பல தலைமுறை வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் கிராமத்தின் அழுக்கேறாத அழகையும், வெள்ளந்தி மனிதர்களையும் ரசித்து மகிழ்கிறான்.

எல்லாம் சில தினங்கள்தான். அவனுடைய தந்தை கிராமத்தை புறந்தள்ளி மாநகருக்கு ஓடியதன் சங்கடங்களை அனுபவபூர்வமாக அறிகிறான். இந்த சூழலில் நிர்மல் என்ன முடிவெடுக்கிறான் என்பதை நிதானமாக விவரிக்கிறது, சோனி லிவ் தளத்தில் வெளியாகி இருக்கும் ‘நிர்மல் பதக் கி கர் வாப்ஸி’ (Nirmal Pathak Ki Ghar Wapsi) என்ற இந்தி வலைத்தொடர். பிழைப்புக்காக நகரங்களுக்கு ஓடியவர்களின் நினைவுகளில் மீந்திருக்கும் ஏக்கங்கள், கிராமத்தின் வரமும் சாபமுமான விவகாரங்கள் ஆகியவற்றை 5 அத்தியாயங்களாக விவரிக்கிறது இந்த வலைத்தொடர்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்: அமானுஷ்ய வலைத்தொடர்

நெட்ஃப்ளிக்ஸின் பிரபல வலைத்தொடர்களில் ஒன்று ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ (Stranger Things). குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிப்பதற்கு ஏதுவான இந்த அமானுஷ்ய வலைத்தொடரின் முதல் சீஸன் 2016-ல் வெளியானது. தொடர்ந்து 2017 மற்றும் 2019-ல் அடுத்தடுத்த சீஸன்கள் வெளியாக, தொடரின் நான்காவது சீஸன் தற்போது வெளியாகி உள்ளது. பார்க்க ஆரம்பித்தால் பற்றிக்கொள்ளும் இந்த வலைத்தொடருக்கு உலகம் நெடுக ரசிகர்கள் உண்டு. இதனால் தமிழிலும் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸை’ ரசிக்க நெட்ஃப்ளிக்ஸ் வாய்ப்பளித்திருக்கிறது.

முந்தைய சீஸன்களின் கதைச் சுருக்கத்தை ஆர்.ஜே.பாலாஜியை கொண்டு, தனது யூடியூப் சேனலில் ’ரீகேப்’ வீடியோவாக நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் முந்தைய அத்தியாயங்களை நினைவுகூர விரும்புவோர் மற்றும் நேரடியாக தற்போதைய நான்காவது சீஸனைப் பார்க்க விரும்புவோருக்கு இந்த வீடியோ உதவும். நான்காவது சீஸன் 2 தொகுதிகளாக வெளியாகிறது. 7 அத்தியாயங்கள் அடங்கிய முதல் தொகுதி மே 27 அன்று வெளியானது. இரண்டாவது தொகுதி ஜூலை 1 அன்று வெளியாக உள்ளது.

இதர நேரடி ஓடிடி படைப்புகள்

இந்திய பிரிவினையின் இன்னொரு துயர பக்கத்தை புரட்டியிருக்கும் ’தி மினியேச்சரிஸ்ட் ஆஃப் ஜுனாகட்’(The Miniaturist Of Junagadh) என்ற குறும்படத்தை தற்போது இலவசமாக யூடியூபில் பார்க்கலாம்.

ஆழமான கதையம்சம் கொண்ட அனிமேஷன் குறும்படமான ‘லார்வா பென்டன்ட்’ (Larva Pendant) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. உலகின் பெருநகரங்களை வலம் வந்து அரிதான உணவு ரகங்களை சுவைத்து விவரிக்கும் ’சம்படி ஃபீட் ஃபில்’ (Somebody Feed Phil) ஆவணத்தொடரின் 5வது சீஸனையும் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

ஸ்டார் வார்ஸ் ரசிகர்களுக்காக அதன் முன்கதையின் அங்கமாக, ’ஓபி-வான் கெனோபி’ (Obi-Wan Kenobi) கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட அதே தலைப்பிலான திரைப்படத்தை, டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தமிழிலும் காணலாம்.

சினிமா மற்றும் வலைத்தொடர்களாக குழந்தைகளை ஈர்த்திருக்கும் ‘மை லிட்டில் போனி’ அனிமேஷன் படைப்புகளின் வரிசையில், ’மை லிட்டில் போனி: மேக் யுவர் மார்க்’ (My Little Pony: Make Your Mark) என்ற திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை தற்போது ஹாட்ஸ்டாரில் காணலாம். ’பைடூ லவ்’ (Bytwo Love) என்ற கன்னட காதல் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் தளத்திலும், ஜான் ஆபிரகாம், ரகுல் ப்ரீத் சிங் நடித்த அறிவியல் புனைவு ஆக்‌ஷன் த்ரில்லரான ’அட்டாக்’ இந்தி திரைப்படத்தை ’ஜீ 5’ தளத்திலும் பார்க்கலாம்

மலையாள ’ஜோசப்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ’விசித்திரன்’, ’கதா காஞ்சிகி மனம் இந்திகி’ என்ற தெலுங்கு திகில் படம், டைகர் ஷெராஃப், நவாசுதீன் சித்திக் நடித்த ’ஹீரோபந்தி-2’ என்ற இந்தி ஆக்‌ஷன் திரைப்படம், அறிவியல் புனைவு ஆக்‌ஷன் திரில்லரான ’இன்ஃபினைட்’ (Infinite) என்ற ஹாலிவுட் திரைப்படம், தென்கொரிய திரில்லர் திரைப்படமான ’மிட்நைட்’ ஆகியவற்றை அமேசானில் காணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE