ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By எஸ்.எஸ்.லெனின்

ட்வெல்த் மேன்: மலையாள திரைப்படம்

புதிதாய் திருமணமானோர் மற்றும் அதற்காக காத்திருப்போர் என கல்லூரி பருவத்து நண்பர்களை உள்ளடக்கிய 11 பேர் மலைவாசஸ்தலம் ஒன்றுக்குச் செல்கிறார்கள். அங்கே அழையா விருந்தாளியாக குடிகாரர் ஒருவர் 12-வது நபராக இந்த குழுவில் இணைய முற்படுகிறார். அவரை பொருட்படுத்தாத இளஞ்சோடிகள், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் விநோத விளையாட்டு ஒன்றையும் மேற்கொள்கிறார்கள். அவரவர் மறைத்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு விபரீதத்துக்கு இட்டுச் செல்ல, அவற்றினூடே எதிர்பாரா மரணம் ஒன்றும் சம்பவிக்கிறது. கொலையாளி யார் என்பதையும் கொலையின் பின்னணியையும் மிச்சக் கதையில் மெல்ல முடிச்சவிழ்ப்பதே ’ட்வெல்த் மேன்’(12th Man) திரைப்படம்.

த்ரிஷ்யம் வரிசை திரைப்படங்களின் வெற்றிகர கூட்டணியான இயக்குநர் ஜீத்து ஜோசப், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட திரைக்குழுவினர் இப்படம் வாயிலாக மீண்டும் சேர்ந்துள்ளனர். அதே பாணியிலான த்ரில்லரில் தோய்த்த கதை என்ற போதும் த்ரிஷ்யத்தைவிட குறைவான அனுபவத்தையே ’ட்வெல்த் மேன்’ வழங்கும். அகதா கிறிஸ்டி கதைகளை விரும்புவோருக்கு இதன் திரைக்கதை பிடித்துப்போக வாய்ப்புள்ளது. ’பர்ஃபெக்ட் ஸ்ட்ராஞ்சர்ஸ்’ என்ற இத்தாலிய திரைப்படத்தின் அதிகாரபூர்வமற்ற பதிப்பான ’ட்வெல்த் மேன்’ மலையாள திரைப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம்.

குத்துக்கு பத்து: தமிழ் வலைத்தொடர்

பிரபல தமிழ் யூடியூப் சானல்களில் ஒன்றான ’டெம்பிள் மங்கிஸ்’ குழுவினர், தங்களது ஜாலி அட்ராசிடியை வலைத்தொடர் பக்கம் திருப்பியதில் ’குத்துக்கு பத்து’ உருவாகியுள்ளது. இவர்களின் வழக்கமான சர்காஸம் மற்றும் வசை வசனங்களுடனான ‘இந்த வலைத்தொடரின் முதல் சீஸன் ’ஆஹா தமிழ்’ தளத்தில் வெளியாகி உள்ளது. புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக வலைத்தொடரின் முதல் அத்தியாயத்தை தங்களது யூடியூப் சானலில் இலவசமாக காண வழிசெய்திருக்கிறார்கள்.

இந்த முதல் அத்தியாயம் முழுக்க டெம்பிள் மங்கிஸ் குழுவின் முத்திரைகள் நிறைந்திருப்பதுடன், தலைப்புக்கேற்ப காட்சிதோறும் ஆளாளுக்கு குத்துகளை பறக்க விடுகிறார்கள். காதல் தம்பதியர் இடையிலான தகராறை தீர்த்துவைப்பதற்கான நண்பர்களின் முயற்சியில், தாதாக்கள் சிலர் நுழைந்ததும் அரங்கேறும் களேபரமே ’குத்துக்கு பத்து’ வலைத்தொடரின் கதை. டெம்பிள் மங்கிஸ் யூடியூப் ரசிகர்கள் மற்றும் டார்க் காமெடி ரசனையாளர்களும் இந்த வலைத்தொடரை பரிசீலிக்கலாம். டெம்பிள் மங்கிஸ் குழுவினரோடு சம்யுக்தா, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கெட் உள்ளிட்ட பலரும் வலைத்தொடரில் நடித்துள்ளனர்.

எஸ்கேப் லைவ்: இந்தி வலைத்தொடர்

பங்கேற்பாளர்களின் தனித்திறமைக்கு களம் அமைத்துத் தரும் சமூக ஊடக செயலி ஒன்றை, மக்கள் மத்தியில் பிரபலமாக்க அதன் தயாரிப்பு நிறுவனம் குயுக்தியாய் திட்டமிடுகிறது. அதன்படி அறிவிப்பாகும் போட்டியில் வெல்வோருக்கு கோடீஸ்வரராகும் வாய்ப்பு என அறிவிக்கிறார்கள். தனித்திறன் போட்டியாளர்களில் 6 பேரைச் சுற்றி கதை சுழல்கிறது. வெற்றிக்காக போட்டியாளர்கள் எதையும் செய்யத் துணிவதையும், அவற்றை ரசிக்கத் துணியும் பார்வையாளர்களின் ரசனைக் கேட்டினையும் வலைத்தொடர் வெளிச்சமிடுகிறது. இந்த வகையில் சமூக ஊடகங்களின் கோரமான மறுபக்கத்தை தோலுரிக்கும் படைப்புகளின் வரிசையில் சேர்கிறது ’எஸ்கேப் லைவ்’ (Escaype Live) வலைத்தொடர்.

பரிசுத் தொகைக்கு அப்பால் சமூக ஊடக போதையான அற்ப புகழுக்காக மனிதர்கள் எப்படி ஆலாய் பறக்கிறார்கள் என்பதையும், அவற்றை தம் வணிக நோக்குக்காக சமூக ஊடக செயலிகள் எப்படியெல்லாம் தூண்டிவிடுகின்றன என்பதையும் பட்டவர்த்தனமாய் காட்டுகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ’பிளாக் மிரர்’ வலைத்தொடரின் பாதிப்புகளோடு, அதன் இந்திய பதிப்பாக நீள்கிறது ’எஸ்கேப் லைவ்’. போட்டியாளர்கள் அறிமுகமாகும் ஆரம்ப அத்தியாயங்கள் போரடித்தாலும், இலக்கை அடையத் துடிக்கும் இறுதி அத்தியாயங்கள் விறுவிறுப்பு ஊட்டவும், பகீரிடவும் செய்கின்றன. 7 எபிசோடுகள் நிறைந்த ’எஸ்கேப் லைவ்’ வலைத்தொடரை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம்.

தி டைம் டிராவலர்ஸ் ஒய்ஃப்: ஆங்கில வலைத்தொடர்

காலவெளியில் முன்னும் பின்னுமாய் பயணிப்பவர்களை சூப்பர் ஹீரோக்களாக முன்னிறுத்தும் கதைகளே அதிகம். இங்கே ஒருவனுக்கு மரபு ரீதியிலான குறைபாடாக டைம் டிராவல் சாத்தியங்கள் சித்திக்கின்றன. தன்னிச்சையாக காலவெளியில் ஊடாடித் திரும்பும் தனது பிரச்சினையிலிருந்து விடுபட வழியின்றி மருள்கிறான். அவனது வாழ்க்கைத் துணையாக வாய்ப்பவளின் வாயிலாக இந்த காலப் பயணியின் கோளாறுகளும் வரங்களும் காட்சியாகின்றன.

’தி டைம் டிராவல்ர்ஸ் ஒய்ஃப்’ (the time traveler's wife) என்ற தலைப்பில் நாவலாக வெளியாகி வரவேற்பு பெற்ற கதை, அதே தலைப்பிலான வலைத்தொடராக தற்போது வெளியாகி உள்ளது. அறிவியல் புனைவும், ஃபாண்டசியும் பின்னிய கதையில் காதலும், நகைச்சுவையும் கலந்து பரிமாறுகிறது இந்த வலைத்தொடர். ஹெச்பிஓ தளத்தில் மே 15 முதல் திங்கள் கிழமை தோறும் ஓர் அத்தியாயமாக வெளியாகும் இந்த தொடரை இந்தியாவில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம்.

இதர நேரடி ஓடிடி படைப்புகள்

நகைச்சுவை இந்தி வலைத்தொடராக வரவேற்பு பெற்ற பஞ்சாயத் (Panchayat) தொடரின் இரண்டாம் சீஸன் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. திகில் ரசிகர்களுக்காக இந்தி ’ஜோம்பிவ்லி’ (Zombivli), கொரிய ’உம்மா’ (Umma) ஆகிய திரைப்படங்கள் 'ஜீ 5' தளத்தில் காத்திருக்கின்றன.

காதல், காமெடி, ஃபீல் குட் என பலதரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும் நோக்கில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது 'எ பர்ஃபெக்ட் பேரிங்' (A Perfect Pairing) என்ற ஆங்கில திரைப்படம். இதே போன்ற இன்னொரு ஃபீல்குட் திரைப்படமான ’டாஸ்கேனா’ (Toscana)வையும் நெட்ஃப்ளிக்ஸில் ரசிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலரையும் கவர்ந்த ’தி பாஸ் பேபி’ அனிமேஷன் வலைத்தொடர் டஜன் அத்தியாயங்களுடன் நெட்ஃப்ளிக்ஸில் வலையேறி இருக்கிறது.

பாலியல் கொடூர வீடியோக்களை இணையத்தில் சுற்றுக்கு விடுவோரை, கல்லூரி மாணவிகள் உதவியுடன் புலனாய்வு பத்திரிகையாளர்கள் துணிந்து வளைத்த தென் கொரிய உண்மை சம்பவத்தை, ‘சைபர் ஹெல்’ (Cyber Hell: Exposing an Internet Horror) என்ற ஆவணப்படமாக தொகுத்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா வெளியீடான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ 5 தளங்களில் காணலாம். ஷாகித் கபூர், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ’ஜெர்சி’ இந்தி திரைப்படத்தையும் நெட்ஃப்ளிக்ஸில் ரசிக்கலாம்.

சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மெகா பட்ஜெட் தெலுங்கு திரைப்படமான ’ஆசார்யா’ தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் அடைக்கலமாகி இருக்கிறது. சத்யராஜ் நடிப்பில் சென்ற வருடத்தின் கடைசி தமிழ் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியான ’தீர்ப்புகள் விசாரிக்கப்படும்’ மற்றும் மோகன்பாபு, மீனா நடிப்பில் வெளியான ’சன் ஆஃப் இந்தியா’ தெலுங்கு திரைப்படம் ஆகியவற்றையும் அமேசான் ப்ரைமில் காணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE