ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By எஸ்.எஸ்.லெனின்

புழு - மலையாள திரைப்படம்

குட்டன் ஒரு போலீஸ் அதிகாரி. பதின்மத்தில் பிரவேசிக்கும் ஒரே மகனை வளர்ப்பதில், ஒற்றை பெற்றோராய் ஏககெடுபிடி காட்டுகிறார் குட்டன். தந்தைக்கு கேடு நேரட்டும் என்று மகன் ஏங்கும் அளவுக்கு அப்பாவின் கண்டிப்பு நீள்கிறது. இதனிடையே தன்னை எவரோ கொலை செய்ய முயல்வதாய் ஊகிக்கும் குட்டன், அதனை எதிர்கொள்ள தீவிரமாகிறார். படுத்தபடுக்கையாக இருக்கும் வயதான தாயார், சாதி மீறி மணந்ததற்காக பிரிந்த தங்கை மீண்டும் அண்ணனை நெருங்குவது என குட்டனின் உள்வட்டத்தில் மாற்றங்கள் அரங்கேறுகின்றன.

புழு

அதேசமயம், வெளிவட்டத்தில் அடையாளம் பிடிபடாத கொலையச்சம் சூழ்கிறது. இவற்றின் மத்தியில் குட்டனும் அவரை சூழ்ந்தவர்களும் எந்த கட்டங்களுக்கு நகர்கிறார்கள் என்பதும், அவற்றால் என்ன நடக்கிறது என்பதுமே ‘புழு’ திரைப்படம்.

மம்மூட்டி, பார்வதி திருவொத்து, நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்க, அறிமுக இயக்குநர் ரதீனா இயக்கி உள்ளார். படத்துக்கு படம் தனது கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டும் மம்மூட்டி, அந்த வகையில் இந்தப்படத்தில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்த்தி இருப்பதும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ‘புழு’வை ரசிக்க வைக்கும். சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ள ’புழு’ மலையாள திரைப்படம் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.

மாடர்ன் லவ் மும்பை- ஆந்தாலஜி தொடர்

வெற்றிகரமான அமெரிக்க ஆந்தாலஜி தொடரான ’மாடர்ன் லவ்’ பாதிப்பில், மும்பையை மையமாக கொண்ட இந்திய ஸ்பின் ஆஃப் தொடராக வெளியாகி இருக்கிறது ’மாடர்ன் லவ் மும்பை’ (Modern Love Mumbai). ஆறு கதைகளை உள்ளடக்கிய இந்த ஆந்தாலஜி தொடரில், காதலே பிரதானம். காதலுக்கு கண் மட்டுமல்ல, சாதி மதம், வயது மற்றும் பாலின பேதம்கூட கிடையாது என்கிறது இந்திய மாடர்ன் லவ் ஆந்தாலஜி. விஷால் பரத்வாஜ், துருவ் சேகல் உள்ளிட்ட 6 இயக்குநர்களின் படைப்புகள், காதலுக்கு அப்பால், நட்பு, கனவு, குடும்ப உறவுகள், சுயத்தை மதித்தல் என பல திசைகளில் நேசத்தின் ஈரம் பாராட்டுகின்றன.

மாடர்ன் லவ் மும்பை

காஷ்மீர் தம்பதியர் காதலுக்கு நேரும் சவால்கள், வயோதிகத்தின் தோல் சுருக்கத்தை மீறும் காதல், தனக்கானவனை தேடும் நவீன யுவதியின் எதிர்பாரா கண்டடைதல், பழமைவாதம் மிதமிஞ்சிய குடும்பங்களில் கிளர்ந்தெழும் தன்பாலீர்ப்பு போராட்டம், மகனின் நேசத்தை பங்கிட வரும் அவனது காதலியை விசித்திரமாய் எதிர்கொள்ளும் தாயின் தவிப்பு என கதைகள் ஒவ்வொன்றும் தனி ரகம். அனுராக் காஷ்யப், நசீருதின் ஷா, சரிகா, ஃபாத்திமா சனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ’மாடர்ன் லவ் மும்பை’ ஆந்தாலஜி தொடரின் முதல் சீஸனை அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்போது பார்க்கலாம்.

அவர் ஃபாதர் - அமெரிக்க ஆவணப் படம்

செயற்கை கருத்தரிப்பின் பின்னணியில் உலகம் கண்டிராத பெரும் மருத்துவ மோசடியை தோலுரிக்கிறது ’அவர் ஃபாதர்' (Our Father) என்கிற அமெரிக்க ஆவணப்படம். உயிரணு தானம் மூலம் தான் பிறந்ததை தாய் வாயிலாக அறிந்துகொள்ளும் அமெரிக்க பெண்ணொருவர், அதையொட்டிய தேடலில் தனக்கு எண்ணற்ற உடன்பிறப்புகள் இருப்பதை அறிய நேர்கிறார். இது தொடர்பாக பலரிடம் மேற்கொள்ளப்படும் டிஎன்ஏ ஆய்வு மற்றும் மருத்துவத் துறை புலனாய்வுகள், பகீரிடும் உண்மையை வெளிச்சமிடுகின்றன. பிரபல செயற்கை கருத்தரிப்பு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில், குழந்தை வேண்டி அனுமதிக்கப்படும் பெண்கள் அனைவருக்கும் அங்குள்ள மருத்துவர் ஒருவரே முறைகேடாக உயிரணு தானம் செய்திருக்கிறார்.

அவர் ஃபாதர்

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இந்த உண்மையை மறைக்கிறார். அப்பெண்களின் கணவர்கள் அளித்த உயிரணுவை புறக்கணித்ததோடு, மருத்துவமனையில் விதைக்கப்பட்ட கருக்கள் அனைத்துக்கும் உயிரியல் தந்தையாக அவதாரமெடுக்கிறார். அமெரிக்காவை உலுக்கிய இந்த மருத்துவ மோசடியின் பின்னணி, அதன் பிற்கால விளைவுகள், குற்றமிழைத்த மருத்துவரின் நியாயங்கள், அவரின் ’குழந்தைகள்’ தம் சகோதர சகோதரிகளைத் தேடியலைந்தது என விநோதமான உண்மைச் சம்பவங்களைச் சித்தரிப்பு ஆவணமாக தொகுத்துள்ளனர். அமெரிக்காவில் இன்றைக்கும் பேசப்படும் இந்த முறைகேட்டை மையமாகக் கொண்ட’அவர் ஃபாதர்’ ஆவணப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.

மகாபாரத் மர்டர்ஸ் - வங்காள வலைத்தொடர்

கொல்கத்தாவில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளில் மகாபாரத கதையும் அதன் கதாபாத்திரங்களும் ஒளிந்திருப்பதை ஊடகங்களும், காவல்துறையும் தாமதமாக மோப்பமிடுகிறார்கள். தன்னை துரியோதனனாக பாவிக்கும் மர்ம நபர், திரௌபதியில் தொடங்கி நகுலன், சகாதேவன் ஆகியோரை பிரதிபலிக்கும் நபர்களைத் தேடிக் கொல்கிறான்.

மகாபாரத் மர்டர்ஸ்

இதர பாண்டவர்களையும் குறிவைக்கும் அவனது இலக்கு நிறைவேறியதா, அவனது கொலைவேட்டையின் பின்னணி என்ன என்பதே ’மகாபாரத் மர்டர்ஸ்’ (Mahabharat Murders) என்ற வங்காள வலைத்தொடரின் கதை. ஹோய்சாய் தளத்தில் வாரம் 3 அத்தியாயங்களாக இந்த தொடர் வெளியாகிறது.

இதர ஓடிடி படைப்புகள்

17 வயது பள்ளி மாணவி வளாக விபத்தில் அடிபட்டு கோமாவில் ஆழ்கிறாள். 20 வருடம் கழித்து நினைவு திரும்பும் அவள், தற்போதைய 37 வயதில் பாதியில் விட்ட பள்ளி படிப்பை தொடர முனைகிறாள். இதையொட்டி நிகழும் காமெடி களேபரங்களை ‘சீனியர் இயர்’ (Senior Year) என்ற திரைப்படமாக நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

தி கொஸ்ட்

பதின்மத்தினர் ரசனைக்கான டிஸ்னியின் ’தி கொஸ்ட்’ (The Quest) வலைத்தொடர் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இதே போன்று இளைஞர்களுக்கான ‘மேவ்ரிக்ஸ்’ (MaveriX) வலைத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம். ‘ஆதா இஷ்க்’ (Aadha Ishq) என்ற இந்தி வலைத்தொடரை வூட் செலக்ட் தளத்தில் தமிழிலும் காணலாம்.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு

தமிழ் புத்தாண்டுக்கு வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்களில் காணலாம்.

பீஸ்ட்

மேட்ரிக்ஸ் திரைப்பட வரிசையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சொதப்பிய, ‘தி மேட்ரிக்ஸ் ரிசரக்‌ஷன்ஸ்’ (The Matrix Resurrections) திரைப்படம் அமேசான் ப்ரைமில் அடைக்கலமாகி உள்ளது. ’புக் ஆஃப் லவ்’ (Book of Love) என்ற ஸ்பானிஷ் காமெடி காதல் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் ஆங்கிலத்திலும் ரசிக்கலாம்.

தி மேட்ரிக்ஸ் ரிசரக்‌ஷன்ஸ்

ஆபரணத் தங்கத்தில் மெழுகு சேர்த்து நகைக்கடைகள் நிகழ்த்தும் மோசடியை தழுவி உருவான ’ஒருத்தி’ என்ற மலையாள திரைப்படத்தை மனோரமாமேக்ஸ் தளத்தில் பார்க்கலாம். கரு.பழனியப்பன் உள்ளிட்டோரின் நடிப்பு மற்றும் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் வெளியான ‘கள்ளன்’ தமிழ் திரைப்படத்தை தற்போது ’ஜீ 5’ தளத்தில் காணலாம்.

கள்ளன்

அண்மையில் அரசியல் களத்திலும் சர்ச்சையை கிளப்பிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ (The Kashmir Files) திரைப்படத்தை தற்போது ’ஜீ 5’ தளத்தில் காணலாம். இந்திய ஓடிடி வரலாற்றில் முதல் முறையாக, மாற்றுத்திறனாளி பார்வையாளர்களுக்காக சைகை மொழியிலான இடையீட்டு விவரணையுடன் இந்த திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE