‘பொருத்தமான நபரை இன்னும் சந்திக்கவில்லை’ - திருமணம் குறித்த கேள்விக்கு ரம்யா பாண்டியன் பதில்!

By ஆதிரா

நடிகை ரம்யா பாண்டியன் தனது திருமணம், காதல் மற்றும் பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் இரண்டாவது ‘ரன்னர் அப்’- ஆக வந்தார். இதன் பிறகு தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் ரம்யாவின் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ரம்யா பாண்டியன், ‘எனக்குத் திருமணம் செய்துகொள்ள பொருத்தமான நபர் என்று யாரும் தோன்றவில்லை. திருமண உறவுக்குள் நுழைய இரண்டு பக்கமும் ஒத்த கருத்துடைய ஒருவரைச் சந்தித்தால் நிச்சயம் அப்போது அது குறித்து பேசுவேன்’ எனப் பதிலளித்திருக்கிறார்.

இன்னொருவர் 'சிங்கிளா கமிட்டடா?' என கேட்ட கேள்விக்கு, ‘சிங்கிளாக இருந்தால் வேலையுடன் கமிட் ஆகுங்கள், கமிட்டடாக இருந்தால் வேலையும் காதலையும் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என அறிவுரை வழங்கியிருக்கிறார்.

கடந்த பிக் பாஸ் நான்காவது சீஸனில் ரம்யா கலந்துகொண்டபோதும் இரண்டாவது ‘ரன்னர் அப்’-ஆகவே வந்தார். இந்த முறை பிக் பாஸ் ஓடிடியில் கலந்துகொண்டபோதும் அதே இடமே அவருக்குக் கிடைத்தது. ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டுக்குள் ரம்யா நுழைந்த பின்பு ஆட்டம் சூடுபிடித்தது என்பதை மறுக்க முடியாது. ரம்யா அல்டிமேட் சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாகவே நுழைந்தார். பிக் பாஸ் அல்டிமேட் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அந்த விளையாட்டு அனுபவம் குறித்தும் கேட்டுள்ள கேள்விக்கு ரம்யா பதிலளித்துள்ளார். அதில் ஒருவர், 'பிக் பாஸ் விளையாட்டில் உங்கள் பொறுமையைச் சோதிக்கும் பல விஷயங்கள் நடந்தும் பொறுமையாக இருந்தது எப்படி?' என கேட்டுள்ளார்.

‘நான் இயல்பிலேயே பொறுமையான நபர்தான். நீங்கள் சொன்னது போல அங்கு நடந்த பல சூழ்நிலைகளில் பொறுமையாக இருந்து இருந்து ‘பேஷன்ட்டா’கவே திரும்ப வந்தேன்' என ரம்யா வெளியே வந்தபோது அவருக்குக் கால் உடைந்திருந்த விஷயத்தையும் நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்.

மேலும் எதிர்மறைக் கருத்துகளுக்கு எல்லாம் மதிப்பளித்து கவலைப்பட்டுக் கொண்டு இருப்பதில்லை எனவும் தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

'ஜோக்கர்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். அடுத்து மலையாளம், தமிழ் எனப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE