2 லட்சம் சந்தாதாரர்களை 100 நாட்களுக்குள் இழந்த நெட்ஃப்ளிக்ஸ்: என்ன காரணம்?

By காமதேனு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தங்களுக்கு 221.6 மில்லியன் சந்தாதாரர்கள் இருப்பதாக, புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கூறியிருக்கிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிட குறைவு என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.6 பில்லியன் டாலர் நிகர வருமானத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இது 1.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சந்தாதாரர்கள் நிலவரம் குறித்த அறிக்கையை நேற்று அந்நிறுவனம் வெளியிட்டது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக பெருமளவிலான சந்தாதாரர்களை இழந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. 100 நாட்களுக்குள் 2 லட்சம் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழந்திருக்கிறது. ‘நாங்கள் விரும்பியதைப் போல எங்கள் வருவாய் அதிகரிக்கவில்லை’ என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவில் நெட்ஃப்ளிக்ஸ் தனது சேவையை கடந்த மாதம் நிறுத்திக்கொண்டுவிட்டது. இதையடுத்து கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது அந்நிறுவனம். ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், பிராண்ட்பேண்ட் இணைய சேவை என விரிவடைந்த தளத்தில் நெட்ஃப்ளிக்ஸ் செயல்பட்டு வருகிறது.

இதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் தங்கள் இழப்புகளுக்குக் காரணம் என்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இந்த ஓடிடி தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள், இதில் வரும் படங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்ப்பதற்கு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கணக்கைப் பகிர்ந்துகொள்ள வசதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், அதில் ஏற்பட்டிருக்கும் நடைமுறைச் சிக்கலால் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சுணக்கம் காணப்படுகிறது.

ஆப்பிள், டிஸ்னி போன்ற நிறுவனங்கள் ஓடிடி சந்தையில் கடும் போட்டிச் சூழலை உருவாக்கியிருப்பதும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களை இழந்திருப்பதற்கு இன்னொரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE