ஓடிடி உலகம்: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By எஸ்.எஸ்.லெனின்

டாணாக்காரன்: தமிழ் திரைப்படம்

காவல்துறை குறித்த பல்வேறு கோணங்களிலான திரைப்படங்களின் வரிசையில், காவல் பணியில் சேருவோருக்கான பயிற்சிக் காலத்தை மையமாகக் கொண்ட அரிதான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது ’டாணாக்காரன்’ திரைப்படம்.

தொண்ணூறுகளின் இறுதியில் திருநெல்வேலியில், காவலர் பயிற்சி பள்ளி ஒன்றில் சேரும் இளம் காவலர்களைச் சுற்றி கதை நடக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் அடக்குமுறைக்காக அறிமுகம் செய்யப்பட்ட காவலர் பயிற்சியின் அடாவடி நோக்கங்கள் சுதந்திர தேசத்திலும் தொடர்வதை கேள்விக்குள்ளாக்குகிறது டாணாக்காரன். பயிற்சியளிக்கும் மூத்த போலீஸ்காரர்களால் நசுக்கப்படும் இளம் காவலர்களின் அவலத்தையும், அநீதிக்கு எதிராக அவர்கள் கிளந்தெழுவதையும் பதிவு செய்கிறது. காவல்துறையின் பின்னணியில் இப்படியும் ஓர் உலகம் இயங்குகிறதா என்ற விசனத்துடனான நிதர்சனத்தையும் இந்த திரைப்படம் முகத்திலறைகிறது.

’விசாரணை’ போன்ற படங்களில் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த தமிழ், டாணாக்காரனை எழுதி இயக்கி இருக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக நிஜ போலீஸ்காரராக பணிபுரிந்தவரும், ‘ஜெய் பீம்' திரைப்படத்தின் சர்ச்சைக்கு ஆளான எஸ்.ஐ குருமூர்த்தி வேடத்தில் கவனிக்க வைத்தவருமான தமிழ், தனது காவல்துறை அனுபவத்தின் அடிப்படையிலும் டாணாக்காரனை செதுக்கி இருக்கிறார். இவரது வசனங்களுடன், ஜிப்ரானின் பின்னணி இசையும், மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரும் பலம். விக்ரம் பிரபு உடன் அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லாலின் அனுபவ நடிப்பு படத்துக்கு உயிர் சேர்த்திருக்கிறது. காதல் காட்சிகளும், ஒரு சில பாடல்களும் படத்தில் துறுத்தலாக தென்பட்டாலும், வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை ‘டாணாக்காரன்’ உறுதி செய்கிறது. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படத்தை ரசிக்கலாம்.

தஸ்வி: இந்தி நகைச்சுவை திரைப்படம்

ஆசிரியர்களைப் பணிக்கு நியமித்ததில் ஊழல் செய்ததாக மாநிலத்தின் முதல்வர் கைது செய்யப்படுகிறார். தனது மனைவியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு சிறை செல்லும் அவருக்கு அங்கே விநோத சவால்கள் எழுகின்றன. படிப்பறிவில்லாத இவர், சிறையில் இருந்தபடியே பத்தாம் வகுப்பு பாஸ் செய்ய முயல்கிறார். அதற்காக ஓர் அரசியல்வாதியாகவும் தான் கற்ற அரசியல் வித்தைகளை அரங்கேற்றுகிறார். அரசியல்வாதியின் கல்வி கற்கும் ஆசையும், அவரது முதல்வர் நாற்காலியும் என்னவானது என்பதே ’தஸ்வி’ (Dasvi) நகைச்சுவை இந்தி திரைப்படத்தின் கதை.

தஸ்வி

ஹரியாணாவின் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலாவின் வாழ்க்கைச் சம்பவங்களை அடியொற்றி எடுக்கப்பட்ட கலகலப்பான இந்த இந்தி திரைப்படம், கல்வியின் முக்கியத்துவத்தையும் உரக்கப் பேசுகிறது. அபிஷேக் பச்சன், யாமி கௌதம், நிம்ரத் கௌர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் தஸ்வி திரைப்படத்தை ஜியோ சினிமா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்களில் காணலாம்.

ஆல் தி ஓல்ட் நைவ்ஸ்: ஹாலிவுட் த்ரில்லர் திரைப்படம்

வியன்னாவில் அரங்கேறும் விமானக் கடத்தலில், தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க அங்குள்ள சிஐஏ அலுவலகம் முயல்கிறது. ஆனால், சிஐஏ அதிகாரிகளுக்குள் ஒளிந்திருக்கும் கறுப்பாடு காரணமாக நூற்றுக்கும் மேலான பணயக் கைதிகள் உயிரிழக்கின்றனர்.

ஆல் தி ஓல்ட் நைவ்ஸ்

இந்த விவகாரம் குறித்து 8 ஆண்டுகள் கழித்து விசாரிக்கப் புறப்படும் சிஐஏ அதிகாரி, தனது முன்னாள் காதலியும் சக அதிகாரியுமான இன்னொரு உளவாளியுடன் இணைந்து பழைய மர்மங்களை துழாவுவதே ‘ஆல் தி ஓல்ட் நைவ்ஸ்’ (All the Old Knives) திரைப்படம். இதே தலைப்பில் வெளியான ஸ்பை த்ரில்லர் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த அமெரிக்க திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.

ரிட்டர்ன் டு ஸ்பேஸ்: அமெரிக்க ஆவணப்படம்

அமெரிக்காவின் விண்வெளி கனவை ஈடேற்றிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முன்னெடுப்புகளையும், அதன் நிறுவனர் எலான் மஸ்கின் கனவுகளையும் பதிவு செய்திருக்கும் ஆவணப் படம் ‘ரிட்டர்ன் டு ஸ்பேஸ்’ (Return to Space). சர்வதேச விண்வெளி மையத்துக்கான ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர்களின் கடும் உழைப்பையும், தோல்விகளில் இருந்து வெற்றிக்கான பாதையை முன்னெடுத்த எலான் மஸ்கின் முயற்சிகளையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.

ரிட்டர்ன் டு ஸ்பேஸ்

சுமார் 2 மணி நேரத்துக்கு நீளும் ரிட்டர்ன் டு ஸ்பேஸ், ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்தோடு அமெரிக்காவின் விண்வெளி கனவு நனவானதை காட்டுகிறது. அறிவியல் ஆர்வம் கொண்டோர் மட்டுமன்றி சுயமுன்னேற்ற படைப்புகளை விரும்புவோருக்கும் சுவாரசியமூட்டும் இந்த ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

இதர ஓடிடி படைப்புகள்

நேரடி ஓடிடி படைப்புகளின் வரிசையில் கொரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ’யாக்‌ஷா: ரூத்லெஸ் ஆபரேஷன்ஸ்’ (Yaksha: Ruthless Operations), ஜப்பானிய காமெடி ஆக்‌ஷன் அனிமேஷன் தொடரான ’டைகர் & பண்ணி’ (Tiger & Bunny) தொடரின் இரண்டாவது சீஸன், எண்பதுகளின் பிற்பகுதியில் தொலைபேசி வழியாக பொங்கி வழிந்த சரச உரையாடல் கலை மற்றும் போதையுலகு சீரழித்த டச்சு சமூகத்தின் பின்னணியிலான ‘டர்ட்டி லைன்ஸ்’ (Dirty Lines) வலைத்தொடர் ஆகியவற்றை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

எலைட் 5

இளசுகளின் கவனம் கவர்ந்த எலைட் வலைத்தொடரின் 5-வது சீஸன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்பானிஷ் தொடரை தற்போது தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் காணலாம். காமெடி மற்றும் இசைக்கு முக்கியத்துவம் தந்து, பள்ளிக்கூட பின்புலத்தில் உருவாகி இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ் திரைப்படமான மெட்டல் லார்ட்ஸ் (Metal Lords). குற்றப் புலனாய்வு இந்தி வலைத்தொடரான ’அபய்’ (Abhay) மூன்றாவது சீஸன், ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு..

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் வெளியாகி உள்ளது. டிஆர்பி-க்காக அல்லாடும் தற்காலத்திய செய்தி சேனல்களின் கோதாவில், அர்னாப் கோஸ்வாமி போன்ற ஒரு பத்திரிகையாளர் மேற்கொள்ளும் அதிரடியான, ’நாரதன்’ மலையாள திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். காதல் திரைப்படங்களின் வரிசையில் ’ஸ்டாண்ட் அப் ராகுல்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா தளத்திலும், ‘ஏக் லவ் யா’ என்ற கன்னட திரைப்படம் ஜீ5 தளத்திலும் வெளியாகி உள்ளது.

நாரதன்

உக்ரைன் போர்ச்சூழலில் உதாரணம் காட்டப்பட்ட ’கிங்ஸ் மேன்’ திரைப்பட வரிசையின் மூன்றாவது படைப்பும், முந்தைய படங்களின் ஸ்பின் ஆஃப் முன்கதையுமான ’தி கிங்ஸ் மேன்’ (The King's Man) டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. அறிவியல் புனைவும், காதல் உருக்கமும் கலந்த ’தி இன் பிட்வின்’ (The In Between) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE