தி வொன்டர்ஃபுல் ஸ்பிரிங் ஆஃப் மிக்கி மவுஸ்: அனிமேஷன் தொடர்
தலைமுறைகளைத் தாண்டி குழந்தைகளை மகிழ்வித்து வரும் அனிமேஷன் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் தோன்றி 94 வருடமாகிறது. ஆனபோதும் குழந்தைகளையும், குழந்தை மனம் கொண்டவர்களையும், மிக்கியும் அதன் நண்பர்களும் தொடர்ந்து குதூகலிக்கச் செய்து வருகிறார்கள். இதர ஓடிடி தளங்களிலும் இந்த அனிமேஷன் தொடர்களில் ஒன்றிரண்டை ரசிக்கலாம் என்ற போதும், டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக சங்கமித்துள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இதுபோன்ற அனிமேஷன் படைப்புகளில் முத்துக் குளிக்கலாம்.
2013-ல் எம்மி விருது பெற்ற மிக்கி மவுஸ் குறும் படைப்புகளின் வரிசையில், அதையொத்த குறுந்தொடர் கரோனா கடுமையைத் தணிக்கும் வகையில் 2020-ல் வெளியானது. இதன் அடுத்த சீஸன் வரிசையில் ’தி வொன்டர்ஃபுல் வின்டர் ஆஃப் மிக்கி மவுஸ்’ என்ற அனிமேஷன் படைப்பு, பிப்.18 அன்று வெளியானது. இதன் தொடர்ச்சியாக ’தி வொன்டர்ஃபுல் ஸ்பிரிங் ஆஃப் மிக்கி மவுஸ்’ (The Wonderful Spring of Mickey Mouse) மார்ச் 25 அன்று வெளியாகி உள்ளது. மிக்கியும் அதன் நண்பர்களும் வசந்த காலத்தை முன்னிறுத்தி அடிக்கும் கொட்டங்களை இந்த அனிமேஷன் படைப்பில் காணலாம். அடுத்த கட்டமாக ’தி வொன்டர்ஃபுல் ஸ்பிரிங் ஆஃப் மிக்கி மவுஸ்’, மே 20 அன்று வெளியாக உள்ளது.
கோடை விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் இருந்து காக்கவும், குடும்பத்தினர் குழந்தைகளோடு மகிழ்ந்திருக்கவும் இந்த மிக்கி மவுஸ் வரிசை உதவக்கூடும். இதில் தொடங்கி, டிஸ்னி+ தொகுப்பின் கீழ் ஏராளமான குழந்தைகள் உலகோடு ஊடாடும் அனிமேஷன் படைப்புகளை ’டிஸ்னி+ஹாட்ஸ்டார்’ தளம் அடுக்கி வைத்திருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அவற்றையும் குழந்தைகளோடு சேர்ந்து தரிசிக்கலாம்.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு: தமிழ் திரைப்படம்
பெண்களையும் அவர்களின் உலகையும் தீர்மானிக்கும் ஆண்களின் துலாக்கோல்கள் முறிந்துவரும் காலத்தில் மற்றுமொரு முற்போக்குத் திரைப்படமாக முன்வந்திருக்கிறது ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’. அக்ஷரா ஹாசன் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், பெண்கள் சுயமாக முடிவெடுப்பதை பேசுகிறது. ஆனால், போதிய புரிதலின்றி வழக்கம்போல ஆண்களின் பார்வையில் அணுகியதில், மனதில் பதியாது செல்கிறது திரைக்கதை.
அக்ஷரா துணிச்சலான பாத்திரத்தில் பொருந்திப்போனாலும் அவரது சித்தரிப்பு முழுமையடையாது துருத்தி நிற்கிறது. அக்ஷராவைவிட அவருடைய தோழியராக வரும் அஞ்சனா, ஜெசிகா ஆகியோர் கவனிக்கச் செய்கின்றனர். ஆணாதிக்க பழைமைவாதங்களை உடைக்க முற்பட்ட வகையில், ஓடிடிக்கு உரிய சுதந்திரத்தை தாராளமாய் திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கலாம். பாலியல் சார்ந்த பெண்களின் உணர்வுகள் மற்றும் உரிமைகளைப் பேசும் முன்னுதாரண திரை படைப்புகள் என்ற வகையில் ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ தனித்து நிற்கிறது. ஆனால், ஒரு படைப்பாக தன்னளவில் தடுமாறியும் இருக்கிறது.
நோ உமன் நோ ட்ரை: ஸ்போர்ட்ஸ் ஆவணப் படம்
எப்பேர்பட்ட விளையாட்டு வீரரானாலும் களத்தில் இல்லாத எதிரியை எதிர்கொள்வது சவாலுக்கு உரியதே! விளையாட்டு வீரர்களில் பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த கசப்பனுபவங்கள் வாய்த்திருக்கும். பாலின பாகுபாடு மட்டுமன்றி, இனம், மதம், நிறம் உள்ளிட்ட உலகளாவிய வேறுபாடுகளையும் இந்த வீராங்கனைகள் விளையாட்டு களத்தில் சமாளித்தாக வேண்டும்.
அப்படி ரக்பி விளையாட்டில் ஈடுபடும் பெண்களை மையமாகக் கொண்ட ஆவணப்படமே ’நோ உமன் நோ ட்ரை’. மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் இந்த ரக்பியை, பெண்கள் விளையாட முன்வந்தபோது எழுந்த சவால்களும், அந்த பெண்கள் மத்தியிலும் துளிர்விட்ட பாகுபாடுகளும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெயரளவில், ரக்பியை முன்வைத்து உருவான ஆவணம் என்றபோதும், எந்த விளையாட்டுக்கும் பொருந்திப்போகும் போராட்டங்களை இந்த ஸ்போர்ட்ஸ் ஆவணப் படத்தில் அடையாளம் காணலாம். அமேசான் ப்ரைம் வீடியோவில் ’நோ உமன் நோ ட்ரை’ வெளியாகி இருக்கிறது.
800 மீட்டர்ஸ்: க்ரைம் ஆவணத்தொடர்
2017, ஆகஸ்டில் ஸ்பெயினை உலுக்கிய 2 பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆவணத்தொடரின் முதல் சீஸன் நெட்ஃப்ளிக்ஸில் தற்போது வெளியாகி உள்ளது. பார்சிலோனாவில் சாலையில் குழுமியிருந்த மக்கள் திரளுக்குள் அசுர வேகத்தில் பாய்ந்த வாகனத்தால், உயிர்ச் சேதங்களோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமும் அடைந்தனர். மனித உயிர்களை காவுவாங்கும் வெறியோடு இந்த வாகனம் பாய்ச்சலெடுத்த 800 மீட்டர் தொலைவை மையப்படுத்தி ’800 மீட்டர்’ க்ரைம் ஆவணத்தொடர் தயாராகி உள்ளது.
இந்த பார்சிலோனா தாக்குதலை அடுத்து 9 மணி நேர இடைவெளியில் அதே பயங்கரவாத குழுவைச் சேர்ந்த வேறு சிலர், கேம்பிரில்ஸ் பகுதியில் மற்றுமொரு மக்கள் திரளின் மீது வாகனத்தைச் செலுத்தி ஸ்பெயினை அதிர வைத்தனர். அந்நாட்டை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த புலனாய்வுகள் இன்று வரை சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாதம் என்பதன் இருட்டு மூலைகளில் வெளிச்சமடிக்க முயல்கிறது நெட்ஃப்ளிக்ஸின் ’800 மீட்டர்ஸ்’ க்ரைம் ஆவணத்தொடர்.
இந்த வாரத்தின் இதர வெளியீடுகள்
திரையரங்குகள் திறப்பு காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் அருகியுள்ளன. அதே வேளையில் திரையரங்கில் வெளியான ஒரே மாதத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் ஓடிடியில் தஞ்சமடைந்தும் விடுகின்றன. இந்த வகையில் அஜித் குமாரின் ‘வலிமை’ திரைப்படம், திரையரங்க வெளியீடுக்காக நீக்கப்பட்ட காட்சிகளையும் உள்ளடக்கியதாய் ’ஜீ5’ தளத்தில் வெளியாகி இருக்கிறது.
பவன் கல்யாண், ராணா, சமுத்திரக்கனி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த தெலுங்கு ஆக்ஷன் திரைப்படமான ’பீம்லா நாயக்’ டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மலையாள நகைச்சுவை திரைப்படமான ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’, மனோரமா மேக்ஸ் தளத்தில் தஞ்சமடைந்துள்ளது. தெலுங்கு ரொமான்ஸ் படைப்பான ‘சூப்பர் மச்சி’யை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
1983 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கதையைச் சொல்லும், ’83’ திரைப்படம் டிசம்பர் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்களில் தற்போது தரிசிக்கலாம்.
ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட தலைப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட ’டியூன்’ (Dune) திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் டப்பிங்கிலும் காணலாம். சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான இந்த ஆக்ஷன், அறிவியல் புனைவு திரைப்படம், இவ்வாரத்தின் ஓடிடி படைப்புகளில் தவற விடக்கூடாததாகும்.