புலனாய்வு த்ரில்லர் தொடர்களைப் படைப்பது எளிது. அதிரவைக்கும் ஒரு கொலை, அதற்குப் பின்னிருக்கும் மர்மம், அதை அவிழ்க்க களம் இறங்கும் காவல் அதிகாரி, தனிப்பட்ட சோகத்தை மீறி அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவர் அவிழ்க்கும் முறை, இறுதியில் அதிர்ச்சியடைய வைக்கும் திருப்பத்துடன் கூடிய முடிவு போன்ற கூறுகள் இருந்தால்போதும், ஒரு புலனாய்வு சஸ்பென்ஸ் த்ரில்லர் ரெடி. ஆனால், அந்த த்ரில்லர் நம்மை எவ்வளவு ஈடுபாட்டுடன், பதைபதைப்புடன் பார்க்கச்செய்யும் என்பதை அந்தக் கூறுகளின் நம்பகத்தன்மையும், அவற்றை இணைக்கும் நுண்ணிய இழையின் நேர்த்தியுமே தீர்மானிக்கும். படைப்பாளியின் திறனும் ஆக்க நேர்த்தியும் தீர்மானிக்கும் அம்சங்கள் இவை.
இந்தியாவில் புலனாய்வுத் தொடர்கள்
உலகின் பல நாடுகளில், பல மொழிகளில் புலனாய்வுத் தொடர்கள் எடுக்கப்பட்டாலும், ஸ்காண்டிநேவிய நாடுகளில் தயாராகும் தொடர்களே பிரசித்தி பெற்றவை. இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்த பாணியிலான தொடர்கள் பெருமளவில் வரவில்லை; வெளிவந்தவையும் போதுமான ஆக்க நேர்த்தியைக் கொண்டிருக்கவில்லை. அந்தக் குறையைப் போக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ஆரண்யக்’, ஜீ5-ல் வெளியான ‘ஆட்டோ சங்கர்’, தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ போன்ற படைப்புகள் பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியானபோதும், போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில், தற்போது ஜீ5 தளத்தில் ‘விலங்கு’ எனும் புலனாய்வு வெப் தொடர் வெளியாகி இருக்கிறது.
நேர்த்தியான தொழில்நுட்பம்
மொத்தம் ஏழு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்தத் தொடரை ‘ப்ரூஸ் லீ’ திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். கதையின் நாயகன் விமல். திருச்சிக்கு அருகில் உள்ள வேம்பூர் என்கிற சிறிய கிராமத்தின் காவல் நிலையத்தில்தான் பெரும்பாலான காட்சிகள் அமைந்திருக்கின்றன. எனினும், தினேஷ்குமார், புருஷோத்தமன் இணையரின் ஒளிப்பதிவுத் திறனும், அனீஸின் நேர்த்தியான பின்னணி இசையும், கச்சிதமான எடிட்டிங்கும் நம்மைச் சலிப்படைய விடாமல் பார்த்துக்கொள்கின்றன.
கதைக்களம்
வேம்பூர் காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் காட்டில் ஒளிரும் ஃப்ளாஷ்லைட்டை, ஒரு காவலர் உற்றுக் கவனிப்பதாக இந்தத் தொடர் தொடங்குகிறது. சிறிது நேரத்தில் அங்கே அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது. அந்த இடம் காவல் துறையினரால் சூழப்படுகிறது. இந்த நிலையில் அந்தச் சடலத்தின் தலை காணாமல் போகிறது. அதிர்ந்துபோகும் காவல் துறையினர் தலையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, இன்னொரு சடலம் கிடைக்கிறது. அந்தப் பகுதி எம்எல்ஏவின் காணாமல் போன மைத்துனரின் உடல் அது. இந்தக் கொலைகள் ஏன் நிகழ்ந்தன, அவற்றைச் செய்தது யார், அந்தத் தலை எப்படிக் காணாமல் போனது என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் பயணமே இந்தத் தொடர்.
மர்ம முடிச்சுகளின் வேகம்
காவல் நிலையத்துக்கு உள்ளிருப்பவர்களின் பார்வையில், இந்தத் தொடரை இயக்குநர் அணுகியிருப்பது நமக்குப் புதுவித அனுபவத்தைத் தரும் விதமாக இருக்கிறது. இந்தத் தொடருக்காக அவர் உருவாக்கியிருக்கும் வேம்பூர் காவல் நிலையம் செட், தொடரின் நம்பகத்தன்மைக்கு முக்கியக் காரணம். அச்சு அசலாக ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை அது பிரதிபலிக்கிறது. அங்கே பணிபுரியும் காவலர்களும், அதன் அன்றாட நிகழ்வுகளும் மிகவும் யதார்த்தமாக இருப்பது கூடுதல் சிறப்பு. நவீனத் தொழில்நுட்பத்தின் சுவடே இன்றி இருக்கும் அந்தச் சாதாரண கட்டிடத்தில் இருக்கும் மேஜை, நாற்காலிகள்கூட உடையக்கூடிய நிலையில் உள்ளன. அவ்வளவு எதார்த்தம்!
அங்கே இருக்கும் காவலர்கள் புலனாய்வுக்கு அறிவியலையோ, தொழில்நுட்பத்தையோ நம்பியிருக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்கள் தொடர்புகளையும், உள்ளுணர்வையும், குறிப்பாக லாக்-அப் சித்திரவதைகளையும் நம்பி இருக்கின்றனர். காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பரிதியை (விமல்) பின்தொடரும் கேமராவின் வழியே, அந்தக் காவல் நிலையத்தில் அரங்கேறும் அன்றாட நிகழ்வுகள் நமக்கு உணர்த்தப்படுகின்றன. எவ்வித மிகை உணர்வுமின்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுடன் மெதுவாகத் தொடங்கும் இந்தத் தொடர், அடுத்தடுத்து நிகழும் மர்ம முடிச்சுகளால் வேகமெடுத்துப் பரபரவெனச் செல்லத் தொடங்குகிறது.
சரடுகளை இணைக்கும் லாவகம்
சாதாரண கதையைப் போலத் தோன்றும் இந்தக் கதை, வெவ்வேறான சரடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆதாரக் கதைக்குச் சற்றும் தொடர்பில்லாத குற்றங்களும், அதனால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தக் காவல் நிலையத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். அடர்த்தியாகத் தொடரும் அந்த நிகழ்வுகளினூடே, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற அந்த நிகழ்வுகளை இணைத்து, கொலைக்கான புதிரை இயக்குநர் அவிழ்ப்பது பெருமளவு ஏற்புடையதாகவே இருக்கிறது.
ஓடிடி தொடர் என்பதால், வசனங்கள் எனும் போர்வையில் எவ்வித தணிக்கையும் இன்றி வரும் வசவுச் சொற்கள் நம்மை நெளியவைக்கின்றன. உண்மையைக் கண்டறிவதற்குக் காவல் துறையினர் வன்முறை அத்துமீறல்களையே நம்பியிருப்பதாகக் காட்டும் போக்கு, எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. எது சரி, எது தவறு, சமூக மேன்மைக்கு எத்தகைய போக்கு நல்லது என்பன போன்ற நியாய தர்ம கருத்தியல்களில் இயக்குநர் சிக்கிக்கொள்ளவில்லை. மாறாக, அவர் கடுமையான வன்முறையை எதார்த்தம் என முன்வைக்கிறார். காவல் நிலையங்களுக்குள் நடக்கும் சித்ரவதைகள், காவலர்களின் பார்வையிலிருந்து மிகச் சாதாரணமான விஷயமாகக் காட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்தக் கதையில், வேறென்ன செய்ய முடியும் என்று இயக்குநர் நினைத்திருக்கக்கூடும்.
பாந்தமான நடிப்பு
‘வாகை சூடவா’ படத்துக்குப் பின்னர், விமல் மிகுந்த உழைப்பைக் கொட்டி நடித்திருக்கும் படைப்பு இதுவாகவே இருக்கும். மனிதநேயம் மிக்க காவல் உதவி ஆய்வாளர் பாத்திரத்தில் அவர் பாந்தமாகப் பொருந்தியும் இருக்கிறார். இருப்பினும், முந்தைய படங்களின் சாயல் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். விமலின் மனைவியாக நடித்திருக்கும் இனியா, தனது நடிப்பாலும் பேசும் விழிகளாலும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
‘கிச்சா’ எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி, புதுமுகம் என்பதை நம்பவே முடியவில்லை. தன்னுடைய நடிப்பால் அவர் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார். ‘கருப்பு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் பால சரவணன், முற்றிலும் வேறான பரிமாணத்தில் மிளிர்கிறார். இந்தத் தொடரின் மூலம் அவருக்குப் புதிய பாதை திறக்கலாம். காவல் துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் ஆர்என்ஆர் மனோகர், சக்ரவர்த்தி, முனீஷ் காந்த் ஆகியோரும் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றனர்.
செல்ல வேண்டிய தொலைவு
கதைக்கு எந்தவிதத்திலும் உதவாத தேவையற்ற பல காட்சிகள், அயர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நீண்டுகொண்டே செல்கின்றன. இயக்குநரும் எடிட்டரும் இதைத் தவிர்த்திருக்கலாம். முதல் பாதியில் வெளிப்படும் ஆக்க நேர்த்தி பிற்பாதியிலும் இருந்திருந்தால், நமக்கு நல்ல த்ரில்லர் கிடைத்திருக்கும். இருப்பினும், ஒரு காவல் அதிகாரியையும் அவர் பணியாற்றும் காவல் நிலையத்தையும் சுற்றிவரும் இந்தக் கதை, நமக்கு ஒரு திருப்தியான அனுபவத்தையே அளிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் இந்த மர்மம் நிறைந்த புலனாய்வு விளையாட்டில், குற்றவாளி யார் என்பது எளிதில் ஊகிக்க முடியாத ஒன்றாகவே இறுதிவரை செல்கிறது. இயக்குநர் தன்னால் முடிந்த அளவு சிறந்த படைப்பையே அளித்திருக்கிறார். இருப்பினும், புலனாய்வு சஸ்பென்ஸ் த்ரில்லர்களைப் பொறுத்தவரை, நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் அதிகம் என்பதை இந்தத் தொடரும் உணர்த்துகிறது!