பிக்பாஸுக்குப் போட்டியாக கங்கனாவின் புதிய ரியாலிட்டி ஷோ?

By ஆதிரா

நடிகை கங்கனா ரானவத், புதிய ஓடிடி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களம் இறங்கும் செய்தி சினிமா, சின்னத்திரை மற்றும் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியில் 13 சீசன்களும், தமிழ் மற்றும் தெலுங்கில் 5 சீசன்களுமாக, வெற்றிநடை போட்ட பிக்பாஸின் ஓடிடி வடிவமும் இந்தி மற்றும் தமிழில் கவனம் ஈர்த்துவருகிறது. இவற்றில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற தமிழ் ஓடிடி வடிவம் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே பிக்பாஸ் பார்வையாளர்களை தக்கவைத்திருக்கிறது. இதையடுத்து தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடியை களமிறக்க இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிகளின் வடிவிலேயே, இன்னொரு நிகழ்ச்சியும் ஓடிடியில் உதயமாக இருக்கிறது. ‘லாக் அப்(Lock Upp)’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க உள்ளார். பாலிவுட் பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க இருக்கிறார்.

72 நாட்கள் நடக்க இருக்கும் இந்த ஷோவில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஜெயில் போன்று அமைத்திருக்கும் செட்டுக்குள் போட்டியாளர்கள் இருப்பார்கள். இந்தச் சிறைகளில் அடைபட்டிருக்கும் போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தடங்கல்கள், மனவலிமையை சோதிக்கும் பிரச்சினைகள் ஆகியவையே புதிய ரியாலிட்டி ஷோவின் மையமாக இருக்கும் என்கிறார்கள்.

இந்த ‘லாக் அப்’ நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தரும் என நிகழ்ச்சி தயாரிப்பாளரான ஏக்தா கபூர் உத்திரவாதம் தருகிறார். கங்கனா கைவிலங்குடனும் காட்சியளிக்க, பின்னணியில் ‘லாக்கப்’ நிகழ்ச்சியின் செட் இருக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஏக்தா கபூர் இதை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, போட்டியாளர்களை வெளியேற்றவும் நிகழ்ச்சியில் தொடரச் செய்யவுமாக முடிவெடுக்கும் அதிகாரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளரான கங்கனாவுக்கு வாய்த்திருக்கும். இந்த மாதம் அதாவது பிப்.27 முதல் எம்எக்ஸ் பிளேயர் (MX Player) மற்றும் ஆல்ட் பாலாஜி (ALT Balaji) ஆகிய ஓடிடி தளங்களில் 24 மணிநேரமும் ’லாக் அப்’ ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறது.

லாக் அப் நிகழ்ச்சி குறித்து கேள்வியுற்ற பலரும், இதை பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், லாக் அப் ஆரம்பித்த பிறகே அவர்களின் கணிப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் உறுதிசெய்ய முடியும். லாக் அப் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனபோதும் சுஷ்மிதா சென், பூனம் பாண்டே, மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட ரகளையான பெயர்களை ரசிகர்கள் உச்சரித்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோலவே, இந்த நடிகையர் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் கசியவிட்டு வருகிறது.

சர்ச்சைகளுக்கும், கன்டென்டுக்கும் பெயர் போன கங்கனா, ‘லாக் அப்’ மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, அதற்கு எந்த அளவுக்கு பலம் சேர்க்கும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். இதனிடையே 'லாக் அப்' நிகழ்ச்சிக்கான ட்ரெய்லர் நாளை(பிப்.11) வெளியாகுமென அறிவித்திருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE