கடந்த வாரம் வெளியாகி கவனம் ஈர்த்த ஓடிடி படைப்புகள்

By முகமது ஹுசைன்

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளிவருவது போன்று, தற்போது புதிய தொடர்களும் திரைப்படங்களும் ஓடிடியில் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது. இரு வாரங்களுக்கு முன்னர், ‘ஹம்பிள் பொலிட்டிசியன் நோக்ராஜ்’, ‘அன்பறிவு’, ‘க்யூபிகல்ஸ் சீசன் 2’, ‘கவுன் பனேகி ஷிகர்வதி’ போன்ற படங்கள், வெப் தொடர்கள் உட்படப் பல படைப்புகள் ஓடிடியில் வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றன. அதேபோல், கடந்த வாரமும் சில ஓடிடி திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் கவனம் ஈர்த்த சில படைப்புகளின் பட்டியல் இது.

ரஞ்சிஷ் ஹீ சஹீ (வூட், ஜனவரி 13 முதல்)

பாகிஸ்தானைச் சேர்ந்த உருதுக் கவிஞர் அஹமது ஃபராஸ் எழுதிய ‘ரஞ்சிஷ் ஹீ சஹீ’ எனும் கஜல் பாடல், மிகவும் புகழ்பெற்றது. பிரசித்தி பெற்ற கஜல் பாடகி இக்பால் பானோ இந்தப் பாடலைப் பாடியிருந்தார். பின்னர், மெஹ்தி ஹசனின் குரலில் இந்தப் பாடல் மேலும் சிறப்பு பெற்றது. இந்தப் பாடலின் முதல் வரியைத் தலைப்பாக்கி, உருவாகியிருக்கும் வலைத்தொடர் இது.

இந்தித் திரையுலகின் முக்கிய ஆளுமையும் இந்தியாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவருமான மகேஷ் பட் இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறார். 1970-களின் பாலிவுட் திரை உலகமே இதன் கதைக்களம். அந்தக் காலகட்டத்தின் மூத்த இயக்குநராகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும் ஷங்கர் வாட்ஸ் இந்தக் கதையின் நாயகன். அவருக்கும், சர்ச்சைக்குப் பெயர் போன சூப்பர் ஸ்டார் நடிகைக்கும் இடையிலான திருமணத்தை மீறிய பந்தமும், அது ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால் நேரும் பிரச்சினைகளும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும் என நீளும் இந்தத் தொடர், நிகழ்காலத்து நிகழ்வுகளையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தத் தொடரில் அமலாபால், அம்ரிதா பூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

அமலாபாலின் நடிப்பின் மீதான எதிர்பார்ப்பு ட்ரெய்லர் வெளியானபோதே உருவாகிவிட்டது. மனைவியை விட்டுவிட்டுத் தன்னை மணந்துகொள்ளுமாறு நாயகனை வற்புறுத்தும் நடிகையாக நடித்திருக்கும் அமலாபாலின் முகபாவனையும் உடல்மொழியும் அத்தனை நேர்த்தி.

புத்தம் புது காலை விடியாதா (அமேசான் ப்ரைம்)

2020-ல் கரோனாவின் முதல் அலையின்போது அமேசான் ப்ரைமில் வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்ற ‘புத்தம் புது காலை’ எனும் தமிழ்க் குறும்படத் தொகுப்பின் தொடர்ச்சி இது. காதல், நேசம், மனிதநேயம், நம்பிக்கை போன்ற மனித நல் இயல்புகளைக் கருப்பொருளாகக்கொண்டு, நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக இந்தத் தொகுப்பும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நதியா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், லிஜோமோல் ஜோஸ் போன்றோர் நடித்திருக்கும் இந்தப் படம் 5 குறும்படங்களின் தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. குறும்படங்களை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோனி, சூர்யா கிருஷ்ணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இதன் ஒவ்வொரு கதையும் கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஹியூமன் (டிஸ்னி ஹாட் ஸ்டார்)

மருந்துகளின் சோதனைக்கு உள்ளாக்கப்படும் மனிதர்கள் குறித்து பெரிய அளவில் படைப்புகள் எதுவும் வெளிவரவில்லை. மிகக் குறைந்த அளவே அதுகுறித்து பேசப்பட்டும் உள்ளது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகி இருக்கும் மருத்துவ திகில் தொடர் இது.

புகழ்பெற்ற நடிகை ஷெஃபாலி ஷா, டாக்டர் கவுரி நாத் எனும் பழம்பெரும் அறுவை சிகிச்சை நிபுணராகவும், கீர்த்தி குல்ஹாரி அவரது வாரிசாக விளங்கும் டாக்டர் சைரா சபர்வால் எனும் பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இந்தத் தொடரை விபுல் அம்ருத்லால் ஷா, மோசெஸ் சிங் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

யே காலி காலி ஆங்கேன் (நெட்ஃப்ளிக்ஸ்)

இதுவும் புகழ்பெற்ற பாடல் ஒன்றின் முதல் வரியைத் தலைப்பாகக் கொண்டதுதான். ஷாருக்கான் நடித்த ‘பாஸிகர்’ படத்தில் இடம்பெற்ற , ‘யே காலி காலி ஆங்கேன்’ எனும் புகழ்பெற்ற பாடல் வரியைத் தலைப்பாகப் பெற்றிருக்கும் இந்தத் தொடர், நம்மை மிகுந்த பதைபதைப்புக்கு உள்ளாக்கும் உளவியல் தொடர். செல்வாக்கு மிக்க அரசியல்வாதியின் மகள், சிறிய நகரத்துச் சாமானிய மனிதனைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அதற்காக அவள் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறாள். அந்தப் பெண்ணின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தன்னுடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சாமானிய மனிதன் முன்னெடுக்கும் போராட்ட முயற்சிகளே இந்தத் தொடர்.

அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிரான குரலாக, போராட்டமாக விரியும் இந்தத் தொடரில், சாமானியனின் வலியும் இயலாமையும் தத்ரூபமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தாஹிர் ராஜ் பஸீன் (‘மர்தானி’ புகழ்), ஸ்வேதா திரிபாதி (‘மிர்சாபூர்’ புகழ்), அஞ்சல் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கருட கமன விருஷப வாகனா (ஜீ5)

கன்னட மொழியில் வெளியாகியிருக்கும் க்ரைம் த்ரில்லர் இது. ஆத்ம தோழர்களான ஹரி (ரிஷப் ஷெட்டி), ஷிவா (ராஜ் பி. ஷெட்டி) ஆகியோர் இந்தத் திரைப்படத்தின் 2 முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் களமாக நவீன கால மங்களூரு அமைந்துள்ளது.

ஹரியும், சிவாவும் மங்களூருவில் இரக்கமற்ற, கொடிய குற்றவாளிகளாக எப்படி உருவெடுக்கிறார்கள். சூழ்நிலைகளும் காலவோட்டமும் அவர்களை ஒருவருக்கொருவர் எப்படி எதிராக நிலைநிறுத்துகின்றன என்பதை ரத்தமும் சதையுமாக இந்தப் படம் காட்சிப்படுத்தி இருக்கிறது. கேங்க்ஸ்டர் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் விருந்தாக அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE