ஓடிடி உலா: எம்ஜிஆர் கதையில் ஹிப்ஹாப் ஆதி

By எஸ்.எஸ்.லெனின்

எம்ஜிஆர் நடித்த வெற்றிகரமான திரைப்படங்களின் கதையை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு குழைத்துப் படமெடுக்க முயற்சித்தால் எப்படியிருக்கும்? ‘அன்பறிவு’ திரைப்படத்தில் அதையே முயன்றிருக்கிறார்கள். எக்காலத்திலும் சோடை போகாத ஃபேமிலி டிராமாவுக்கான கதை இருந்தும், அதை ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளுடன் திரைக்கதை செய்ததில், தோசை மாவில் பீட்சா பரிமாறி இருக்கிறார்கள்.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், நேரடி வெளியீடாக அன்பறிவு திரைப்படம் காணக்கிடைக்கிறது.

பார்த்துச் சலித்த கதை

மதுரை பக்கத்தில் அரசபுரம், ஆண்டியாபுரம் என மண் மணக்கும் 2 கிராமங்கள். இரண்டையும் சாதியோ என்னவோ பிரித்துப் போட்டிருக்கிறது. அரசபுரத்தில் நிலபுலனிலும், சமூக அடுக்கிலும் கோலோச்சும் பெரிய மனிதர் முனியாண்டி(நெப்போலியன்). இவரது மகள் லட்சுமி (ஆஷா சரத்) உடன் படிக்கும் பிரகாசத்துடன்(சாய் குமார்) காதல் வயப்படுகிறார். வீட்டோடு மாப்பிள்ளை என்ற நிபந்தனையோடு, மகள் திருமணத்துக்கு அரைமனதாய் ஒத்துக்கொள்கிறார் முனியாண்டி.

மகளுக்குப் பிறக்கும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அன்பழகன், அறிவழகன் (இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி) எனப் பெயர் சூட்டி மகிழ்கிறார் தாத்தா முனியாண்டி. அவரது வீட்டு எடுபிடியும், பிரகாசத்தின் சிநேகிதனுமான பசுபதி (வித்தார்த்) தனது சுயநலத்துக்காக, நன்றாக இருக்கும் குடும்பத்தில் விஷ விதைகளை தூவுகிறார். இதன் விளைவாக லட்சுமி - பிரகாசம் தம்பதி ஆளுக்கொரு குழந்தையுடன் பிரிகிறார்கள். தாய் மற்றும் தாத்தாவுடன் பட்டிக்காட்டானாக வளர்கிறான் அன்பு. வெளிநாடு சென்று தொழிலதிபராகும் தந்தையுடன், அறிவோடு வளர்கிறான் அறிவு. 25 வருடங்கள் கழித்து இந்த அன்பு - அறிவு வாயிலாக, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் ‘அன்பறிவு’ திரைப்படம்.

லாஜிக் என்ன விலை?

எத்தனைத் திரைப்படங்களில் இந்தக் கதையைப் பார்த்திருப்போம் என்று தோன்றுகிறதா? கதை மட்டுமல்ல திரைக்கதையின் காட்சிதோறும் ஏதோவொரு திரைப்படத்தின் சாயல் கடந்து போகவே செய்யும். வெற்றிகர திரைப்படத்துக்கான மசாலாக்களை மிதமிஞ்சி சேர்த்து, கூட்டாஞ்சோறாக வலிய வாயில் திணிக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ் கதை இலாகா. கற்பனை கிராமத்தின் அதிபுனைவு கதாபாத்திரங்கள், லாஜிக் கவலையே இல்லாத திரைக்கதை, சொதப்பலான திருப்பங்கள் இவற்றைக்கொண்டு ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை வார்க்க முயற்சித்திருக்கிறார்கள். நடிகர்கள், ஒளிப்பதிவு, வசனம் ஆகியவற்றின் மூலம், அதையும் ஓரளவுக்கு ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள்.

அன்பு -அறிவு வித்தியாசம்

இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி. கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மெனக்கிட்டிருக்கிறார். சில காட்சிகளில் அதை நிறைவேற்றவும் செய்திருக்கிறார். முந்தையப் படங்களை விட மெருகேறியும் இருக்கிறார். ’நான் சிரித்தால்..’ திரைப்படத்துக்காக திறந்த வாயை, இந்த படத்திலும் மூட மறந்தவர் போல, வாய் கொள்ளா செயற்கைச் சிரிப்புடன் வலம் வருகிறார். அவரது அன்பு பாத்திர சித்தரிப்பு அத்தனை துறுத்தல்.

அதேபோல இரட்டையருக்கு இடையிலான வித்தியாசத்தை உணர்ந்த எம்ஜியார் பட பாணியில், ஒரு மச்சத்தையேனும் ஒட்ட வைத்திருக்கலாம். மதுரை பாணியில் இழுத்துப் பேசினால் அன்பு; இங்கிலீஷ் பீட்டர்களை ஆங்காங்கே தூவினால் அறிவு, அவ்வளவுதான் வித்தியாசம். இருவருக்கும் ஜோடியாக தோன்றும் கஷ்மிரா, ஷிவானி ஆகியோரில் முதலாமவர் மட்டுமே கூடுதல் காட்சிகள் மூலம் கவனம் கவர்கிறார். பெரும்பாலான காட்சிகளில் திரைகொள்ளாத நடிகர்கள் வலம்வருவது, ஒட்டுமொத்தமாய் திரைப்படத்துக்கே ஒரு திருவிழா உணர்வை தருகிறது. படத்தின் ரசிக்கத்தக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.

நெப்போலியன் - விதார்த்

அன்பறிவின் பெற்றோராக தோன்றும் ஆஷா -சாய் ஜோடி பொருத்தமான தேர்வு. வசனங்களுக்கு அவசியமின்றி, தம்பதியர் மத்தியிலான காதலை தங்களின் முதிர்ச்சியான நடிப்பால் வெளிப்படுத்தி விடுகிறார்கள். படத்தின் ஹீரோ என்றால், அது கெத்தான தாத்தாவாக வரும் நெப்போலியன்தான். மகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்வதாகட்டும், பேரனை சண்டைக்காரனாக வளர்ப்பதாகட்டும், முரட்டுப் பாசத்தில் உருகுவதாகட்டும்.. முனியாண்டியாக மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவரது கதாபாத்திர சித்தரிப்பிலும் சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங்கை புகுத்தி வீணடித்திருக்கிறார்கள்.

நெப்போலியனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஈர்த்திருப்பவர், வில்லனாக வரும் விதார்த். இந்தத் திரைப்படத்துக்குப் பிறகு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நிச்சயம் ஒரு சுற்று வருவார் என்ற உறுதி அவரது நடிப்பில் பளிச்சிடுகிறது. மாரிமுத்து, ரேணுகா, ஆடுகளம் நரேன் உட்பட அரை டஜன் நடிகர்களை அன்பறிவு வீணடித்திருக்கிறது. விஜய் டிவியில் திரும்பிப் பார்க்க வைத்த தீனாவின் வாயாடலுக்கும் இதில் வாய்ப்பில்லை.

வெற்றிப்படங்களின் சாயல்

யதார்த்தம் தொலைத்த கற்பனை கிராமங்கள் என்றபோதும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. பாடல் எது பின்னணி இசை எது என்று பிரித்துப்பார்க்க வாய்ப்பில்லாத ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை திகட்டச் செய்கிறது. ஹீரோயினுடனான கெமிஸ்ட்ரியை விட தாய், தந்தை, தாத்தா என அன்பு-அறிவு இரட்டையரின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. சென்டிமென்ட் காட்சிகளில், தாய்க்குலத்தை கண்கலங்க வைத்தே ஆகணும் என்று கங்கணத்தோடு வசனம் வைத்திருக்கிறார்கள். ஜனரஞ்சக திரைப்படத்துக்கு அடிப்படையான வசனங்களாக பார்த்து தீட்டி இருக்கிறார் பொன்.பார்த்திபன். திரைப்படத்தின் முத்தாய்ப்பான காட்சிகள் பலதும் ஏதோவொரு வெற்றிகரமான திரைப்படத்தின் சாயலை ஒத்திருக்கின்றன. திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வின் ராம், அட்லியின் உதவியாளராக இருந்தவராம். ஆங்காங்கே தென்படும் அட்லியின் பாதிப்புகளும் அவற்றை உறுதி செய்கின்றன.

பொழுதுபோக்கு மட்டுமே

நாட்டுக் காளை, கார்ப்பரேட் சதி என ஹிப்ஹாப் ஆதிக்கு என்றே உருவாக்கப்பட்ட கதை வார்ப்புகளும் சுவாரசியமூட்டுகின்றன. முழுக்கவும் இளைஞர்களை குறிவைத்து சித்தரிக்கப்பட்ட மேலோட்டமான கருத்துகள், போலி நம்பிக்கைகள், சாதி-வர்க்கபேதங்களை பொறுப்பின்றி கடந்துபோவது போன்றவை திரைப்படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன. அதிலும் இரு கிராமங்களும் என்ன பிரச்சினையால் பிரிந்து கிடக்கின்றன என்பதைத் துணிச்சலாகச் சொல்லமுடியாத ஒரு திரைப்படத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும். கிராமத்து மக்களை மூடர்களாகச் சித்தரிப்பதை அடுத்த நூற்றாண்டிலாவது தமிழ் திரைப்படங்கள் நிறுத்திக்கொள்ளலாம்.

அதிலும் புதுமைக்கும், புதிய முயற்சிகளுக்கும் களம் அமைத்து தரும், ஓடிடி தளங்களிலும் இப்படியான முயற்சிகள் தென்படுவது சோதனை! படத்தின் 2.45 மணி நேர நீளத்தை விட, லாஜிக் ஓட்டைகள் சற்று அதிகம். அதிலும் திரைப்படத்துக்கு சுபம் போட்டு முடிக்கவேண்டும் என்பதற்காக ஒப்பேற்றிய காட்சிகளும், வசனங்களும் துறுத்தல். இவை எதைப் பற்றியும் கவலையில்லை; மேலோட்டமான முழுநீள பொழுதுபோக்கு மட்டுமே போதும் என்பவர்களுக்கான திரைப்படம் ‘அன்பறிவு’!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE