இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் ’முதல் நீ முடிவும் நீ’ என்ற திரைப்படம், ’ஜீ 5’ ஓடிடி தளத்தில் ஜன.21 அன்று வெளியாக உள்ளது.
’ராஜதந்திரம்’ படத்தில் நடிகராக அறிமுகமான தர்புகா சிவா, சசிகுமார் நடித்த ’கிடாரி’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து, ’பலே வெள்ளையத்தேவா’, ’எனை நோக்கி பாயும் தோட்டா’, ’நிமிர்’, ’ராக்கி’ படங்களுக்கு இசை அமைத்தார். இப்போது இவர், ’முதல் நீ முடிவும் நீ’என்ற படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
இதில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் தர்புகா சிவா, இசையும் அமைத்துள்ளார்.
சென்னையில் ’90களின் பிற்பகுதியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கண்ணோட்டத்தில் இந்தப் படத்தின் கதை விவரிக்கப்பட்டுள்ளது. பின்னர் வேறொரு இடத்திற்கு நகரும் கதை, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான திரைக்கதையை கொண்டுள்ளது.
நியூயார்க் திரைப்பட விழாவில், கௌரவ விருதை வென்ற இந்த திரைப்படம், மாசிடோனியாவில் நடைபெற்ற மற்றொரு விருது விழாவில் ‘சிறந்த இயக்குனர்' விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.