’புத்தம் புது காலை’ என்ற தலைப்பிலான ஆந்தாலஜி திரைப்படம், கரோனா தொற்றின் முதல் அலை காலத்தில், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. தற்போது கரோனா களேபரங்கள் விடியாத சூழலில், அதற்கேற்ப ’புத்தம் புது காலை விடியாதா..’ என்ற புதிய ஆந்தாலஜி திரைப்படம் அமேசானில் வெளியாக இருக்கிறது.
கரோனா பரவலின் தொடக்க காலத்தில் இந்தியாவில் 21 நாள் பொதுமுடக்கம் அமலானதன் பின்னணியில், வீட்டுக்குள் முடங்கிய மனிதர்கள் அவர்களுக்கு இடையிலான காதல், பாசம், பரிவு, நட்பு ஆகிய உணர்வுகளின் வெளிப்பாடுகள் என 5 குறும்படங்கள், முந்தைய ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜியில் இடம்பெற்றிருந்தன.
சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்எஸ்.பாஸ்கர், ரிது வர்மா, சுஹாசினி, அனு ஹசன், ஆண்ட்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நடித்திருந்தது. 2020, அக்டோபரில் இந்த ஆந்தாலஜி வெளியானபோதே, இதே பாணியிலான இரண்டாவது ஆந்தாலஜி ஒரு வருட இடைவெளியில் வெளியாகும் என பேசப்பட்டது.
தற்போது கரோனா மூன்றாவது அலையில் தொடக்கத்தில் சிக்கியிருக்கும் மக்களின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தலைப்புடன் புதிய ஆந்தாலஜி வெளியாக இருக்கிறது.
மதுமிதா, ஹலிதா ஷமீம், சூரிய கிருஷ்ணா, பாலாஜி மோகன், ரிச்சார்ட் ஆன்டனி ஆகியோர் இயக்கத்தில், நதியா, அர்ஜுன் தாஸ், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, லிஜோமோல் ஜோஸ், கௌரி கிஷன், விஜி சந்திரசேகரன், மணிகண்டன் உள்ளிட்டோர் புதிய ஆந்தாலஜியில் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி உள்ளது.
’புத்தம் புது காலை விடியாதா..’ ஆந்தாலஜி திரைப்படம் பொங்கலன்று(ஜன.14), அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.