தந்தை சமுத்திரக்கனியைப் பின்தொடர்ந்து, அவரது மகன் ஹரி விக்னேஷ்வரனும் திரை படைப்பில் பிரவேசித்திருக்கிறார்.
இயக்குநர் சமுத்திரக்கனி பரீட்சார்த்தமாய் நடிக்க ஆரம்பித்து, இன்று வெற்றிகரமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரைட்டர் திரைப்படம், அண்மையில் திரையரங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவரது மகன் ஹரி விக்னேஷ்வரன், தந்தை வழியில் திரை படைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் ‘அறியா திசைகள்’ என்ற குறும்படத்தை ஹரி விக்னேஷ்வரன் உருவாக்கியுள்ளார். 40 நிமிடங்கள் ஓடும், க்ரைம் திரில்லர் வகைமையிலான இந்தக் குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பதுடன், படத்தொகுப்பும் செய்திருக்கிறார் ஹரி விக்னேஷ்வரன்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தவிக்கும் இளைஞன் எதிர்பாரா வகையில் ஏமாற்றங்களை எதிர்கொள்கிறான். அவ்வாறு சிதறடிக்கப்படும் அந்த இளைஞனின் அறியா திசைகளின் பயணமே இந்தக் குறும்படம்.
சமுத்திரக்கனி தனது நாடோடிகள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் குறும்படத்தை தயாரித்திருக்கிறார். பிகைன்ட் வுட்ஸ் யூட்யூப் தளத்தில் அறியா திசைகள் வெளியாகி இருக்கிறது. குறும்படமாக அறியப்பட்டாலும், நீளம் மற்றும் உள்ளடக்கம் காரணமாக டெலிஃபிலிம் என்ற அறிவிப்போடு இந்தப் படைப்பு வெளியாகி இருக்கிறது. புத்தாண்டு தினத்தன்று வெளியாகிய அறியா திசைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது.