மதுரை: மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மரணங்களும், சிசு மரணங்களும் குறைந்துள்ளன.
தினந்தோறும் 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் வரவழைத்து சிகிச்சை வழங்குவதால், இந்த மரண விகிதம் குறைந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் 13 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் மற்றும் மாநில தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
கடந்த காலத்தில் இந்த ஆரம்ப சுகாதாரநிலையங்கள், நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அனைத்து மருத்துவமனைகளிலும் மகப்பேறு சிகிச்சைகள் கூட முழுமையாக கிடைக்கவில்லை. அதனால், மகப்பேறு சிகிச்சைகள் முதல் மற்ற சிகிச்சைகளுக்கு கூட, லேசான சிக்கல் என்று பதட்டப்பட்டால் கூட நோயாளிகள், அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த அலைக்கழிப்பால், கர்ப்பிணி பெண்கள், சிசு மரணங்கள் அதிகளவு ஏற்பட்டு வந்தன.
மதுரை அரசு மருத்துவமனை இறப்பு ஆய்வுக்கூட்டத்தில், நோயாளிகளுக்கு முறையான ஆரம்பகட்ட சிகிச்சை கூட அளிக்காமல் அரசு மருத்துமனைக்கு பரிந்துரை செய்யப்படுவதாக மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டன. ஒரு கட்டத்தல் இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டிற்கு முன் ஒரு நோயாளி சம்பந்தமான சர்ச்சையில் விசாரிக்க சென்ற மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி, மதுரை அரசு மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது, மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மோதலாக மாறி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா வரை பஞ்சாயத்து சென்றது.
» சர்க்கரை நோய்க்கும், மங்கலான பார்வைக்கும் தொடர்பு என்ன? - அலர்ட் குறிப்புகள்
» குணமடைந்த தொழுநோயாளிகள் காசி தீர்த்த யாத்திரைக்கு உதவிய தெற்கு ரயில்வே!
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், தற்போது நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களை, மகப்பேறு மருத்துவ சிகிச்சைகள் முதல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் வருகை வரை, அனைத்து வகை சிகிச்சைகளும் கிடைக்கக்கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக 9 நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தினந்தோறும் ஒரு சிறப்பு மருத்துவ சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் வரவழைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்போது மாநகராட்சிக்குட்பட்ட மகப்பேறு மரண விகிதம் மிகப்பெரியளவில் குறைந்தது.
2023-204ஆம் ஆண்டுகளில் 39.70 சதவீதம் இருந்த இந்த மரண விகிதம் 2024-2025ம் ஆண்டில் 21.60 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோல், மாநகராட்சிக்குட்பட்ட சிசு மரண விகிதம் 2023-204ம் ஆண்டுகளில் 7.8 சதவீதம் இருந்தது. தற்போது இந்த மரண விகிதம் 2024-2025ம் ஆண்டில் 6.18 சதவீதம் ஆக குறைந்துள்ளது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த 2018-19ம் ஆண்டு 7 மகப்பேறு மரணங்கள், 2019-20ம் ஆண்டு 9, 2020-21ம் ஆண்டு 17, 2021-2022ம் ஆண்டு 16, 2022-2023ம் ஆண்டு 9, 2023-2024ம் ஆண்டு 10, நடப்பு 2024-2025 ஜனவரி வரை, வெறும் 3 மரணங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
அதுபோல் சிசு மரணங்கள், 2021-2022ம் ஆண்டு 515, 2022-2023ம் ஆண்டு 509, 2023-2024ம் ஆண்டு 567, 2023-2024ம் ஆண்டு 385, தற்போது 2024-2025 ஜனவரி வரை 86 மட்டுமே ஏற்பட்டுள்ளன. போதுமான மருந்துகள், மருத்துவ சிகிச்சைகளுக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் வரழைத்து சிகிச்சை வழங்கப்படுவதாலே இந்த சிகிச்சை முன்னேற்றமும், மகப்பேறு, சிசு மரணங்களும் பெருமளவு குறைந்துள்ளன. இதனை 'ஜீரோ' சதவீதத்திற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'டெங்கு' பாதிப்பும் குறைந்தது: மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் பொது சுகாதாரப் பிரிவின் மூலம் 530 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி மேற்கொண்டதின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 2023-ம் ஆண்டு 835 ஆக இருந்த. 20204 ஆண்டு 348 ஆக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டு பாதிப்பில் 41.48 சதவீதமாகும்.
மாநகராட்சி மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 12,94,456 பேர் உள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மேற்கொண்ட பரிசோதனை முகாம்களில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு இரண்டும் உள்ளவர்கள், 8.5 சதவீதம் என கண்டறியப்பட்டு அவர்களையும் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு வரழைத்து சிகிச்சை வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.