நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் அவ்வப்போது தங்கள் கண் பார்வை மீது கவனம் செலுத்துவதும், கண் பார்வை திடீரென மங்கலாக தெரியத் தொடங்கினால் உடனடியாக சர்க்கரை அளவு டெஸ்ட் எடுத்துப் பார்ப்பதும் அவசியம் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.
அதாவது, ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்போது கண்ணில் உள்ள லென்ஸ் வீக்கமடைந்து பார்வை மங்கலாகத் தெரியும். சர்க்கரை அளவு சரியானதும் மங்கல் சரியாகிவிடும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கண் நீர் சுரக்கும் ‘மெய்போமியன்’ சுரப்பி அடைத்துக் கொள்வதால், கண் வறட்சி (டிரை ஐ) உண்டாகி, கண் உறுத்தல் ஏற்படக் கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கு கண்நீர் அழுத்த நோய் (குளுகோமா) வர வாய்ப்புள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை கண்நீர் அழுத்தப் பரிசோதனை அவசியம்.
கண் பார்வை பிரச்சினை வராமல் இருக்க, எப்போதும் சர்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு அளவு, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கண் புரை பாதிப்பு வருவதற்கு சாத்தியமுள்ளது. இதனால் பார்வை பாதிப்பு ஏற்படும்.
ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் கண் புரை பாதிப்பு விரைவில் நேராமல் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் கட்டுப்பாடு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.
» வேலூரில் சுத்திகரிக்கப்படாமல் குடிநீர் விநியோகம்: 2 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
நீரிழிவும் 10 கட்டளைகளும்:
> நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
> மாதம் ஒருமுறை ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
> சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
> அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
> மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிக்க வேண்டும்.
> பழங்களில் முக்கனியைத் தவிர்த்துக் கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.
> கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பாலக் கீரையைத் தவிர்க்கலாம்.
> சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண வேண்டும். கூழ், களி தவிர்க்கவும்.
> உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் இருப்பது மிக அவசியம்.
> தினசரி இரண்டு துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிட மாரடைப்பு, கொழுப்பைத் தவிர்க்கலாம். கொடியில் வளரும் அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடலாம்.