ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது ஏன்? - ஹெல்த் அலர்ட் குறிப்புகள்

By ப்ரியன்

நம் சமூகத்தில் ஆண்மைக் குறைவு என்பதையும், மலட்டுத் தன்மை என்பதையும் குழப்பிக்கொள்கின்றனர். ஆண்மைக் குறைவு என்பது, இல்லறத்தில் முழுவதுமாக ஈடுபட முடியாமல் போகும் நிலை. மலட்டுத்தன்மை (Infertility) என்பது விந்தணு தொடர்பில் உண்டாகும் பிரச்சினை.

மலட்டுத்தன்மை உள்ள ஆண்களால் இல்லறத்தில் முழுவதுமாக ஈடுபட முடியும். ஆனால், அவர்களால் குழந்தைப்பேறு கொடுக்க இயலாது. பொதுவாக, நவீன வாழ்க்கை முறையே இந்த மலட்டுத் தன்மைக்குக் காரணம்.

‘ஆண்களுக்கான விந்தணுக்கள் அதிர்ச்சி தரும் அளவில் குறைந்து வருகின்றன’ என்று 20 வருடங்களுக்கு முன்பே உலக ஆராய்ச்சிகள் எச்சரித்தன. அப்போது குழந்தையின்மைப் பிரச்சினைக்கு ஆண்களின் மலட்டுத்தன்மை 20% காரணம் என்றனர். இப்போது 50 சதவீதமாக அது உயர்ந்துவிட்டது என்கின்றனர்.

இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பி உண்ணும் துரித உணவுகளின் நிறம், மணம், சுவை எல்லாமே ரசாயனம் கக்கிய விஷங்கள். பருகும் பால்கூட ஹார்மோன் ஊசி போட்டுக் கறந்த பாலாகத்தான் இருக்கிறது. இப்படி, ரசாயனம் ஊட்டி வளர்த்த உணவுகள் அனைத்தும் விந்தணுக்களை அழிக்கிற அசுரர்கள்.

மேலும், விந்தணுக்களின் வளர்ச்சிக்குத் துத்தநாகம், தாமிரம், செலினியம், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் தேவை. துரித உணவுகளில் இவை குறைவாகவே இருக்கும்.

மாறாக, துரித உணவுகளில் மிதக்கும் கொழுப்பும் எண்ணெயும் நம் உடல் பருமனுக்கு காரணமாகும். பருத்த உடலானது பாலியல் ஹார்மோன்களைச் சிதைக்கும்; விந்தணுக்களைப் புதைக்கும்.

ஓய்வில்லாத உழைப்பு, அலுவலக நெருக்கடிகள் முதலான காரணங்களால் அதிகரிக்கும் மன அழுத்தங்களால் உடலில் ரத்த அழுத்தம் உயர்வது தொடங்கி இல்லற உறவுகளில் சிக்கல் ஏற்படுவது வரை பல பிரச்சினைகள் முளைவிடுகின்றன.

அதே மன அழுத்தங்கள்தான் ஆண்களுக்கு விந்தணுக்களையும் அழிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விந்தணுக்களின் உற்பத்திக் கூடங்கள் விரைகள் (Testes). அவற்றின் மூலப்பொருட்கள் செம்மையாகச் செயல்படுபவை ஹார்மோன்கள். மன அழுத்தமானது ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கிறது. அதுதான் ஆண்களை ‘அப்பா’ ஆக விடாமல் தடுக்கிறது.

ஆண்களின் விதைப்பை என்பது குளிர்ச்சியை விரும்பும் உறுப்பு. இதை உஷ்ணத்தால் உசுப்பக் கூடாது என்பதையும் இளைஞர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, இறுக்கமான உள்ளாடை - ஜீன்ஸ் ஆடை அணிந்தால், விதைப்பையில் உஷ்ணம் அதிகரித்து, விந்தணுக்களை அழித்துவிடும். எனவே, தளர்வான உள்ளாடைகளை அணிய வேண்டும்.

பலரும் தினமும் பல மணி நேரம் மடிக்கணினியை மடியில் கட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. இதனால், பலருக்கும் உஷ்ணம் கூடும் ஆபத்து உண்டு. அதுவும் விந்தணு விளைச்சல் குறைவுக்கு காரணம் ஆகிவிடும். செல்போனின் கதிர்வீச்சும் விந்தணுக்களுக்கு எதிரி.

வாகனப் புகை, பிளாஸ்டிக்கை எரித்தால் வரும் டயாக்ஸின், காற்றில் கலக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை நம் சுவாசத்தில் கலந்து, உடலுக்குள் புகுந்து, ‘செர்ட்டோலி’ செல்களைச் சிதைத்து, விந்தணு உற்பத்திக்குத் தடைபோடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இதேபோல் புகைப் பழக்கம், மதுப் பழக்கம், போதை மருந்துப் பழக்கம், வெப்பமான சூழலில் வேலை பார்ப்பது, மரபணுப் பிரச்சினை, கதிர்வீச்சுச் சிகிச்சை என விந்தணுக்களுக்கு எதிரிகள் ஏராளம் என்பதையும் அறிவீர்.

சிறுதானிய உணவுகளையும், புரத உணவுகளையும் அதிகப்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது, மன அழுத்தம் தவிர்ப்பது, போதிய ஓய்வு, நல்ல உறக்கம் ஆகிய வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

புகை, மது, போதை மருந்து முதலானவற்றை அணுகாமல் இருப்பதே தரமான விந்தணு விளைச்சலுக்குச் சரியான அணுகுமுறை.
மருத்துவம் தேவைப்படும் ஆண்கள் நிச்சயம் அறமும் அனுபவமும் மிகுந்த மருத்துவர்களை அணுகினால், மலட்டுத்தன்மை மறைந்து மழலைச் செல்வத்தைத் தோளில் சுமக்க முடியும் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE