சிறுநீரக பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்!

By ப்ரியன்

சிறுநீரகம் கெடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடிப்பது, மது அருந்துவது, சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது, உணவு நச்சுகள், ரத்தத்தில் ஏற்படும் நச்சுத்தொற்று (Septicemia), புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய், உலோகம் கலந்த மூலிகை மருந்துகள் போன்ற காரணங்களும் அடங்கும்.

இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி விட்டால், சிறுநீரகம் அவ்வளவாகப் பாதிக்கப்படாது. தவறினால், சிறுநீரகம் செயலிழப்பதைத் தவிர்க்க முடியாது. பொதுநல மருத்துவர்கள் பரிந்துரைப்படி, சிறுநீரகம் காக்க 10 கட்டளைகள் இதோ...

1. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதாமாதம் தங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

2. ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. உப்பு நிறைந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், சோடா தண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். உப்பு கூடுதலாக உள்ள பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

3. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான சர்க்கரை அளவு 120 மி.கி./டெசி லிட்டர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

4. ‘நிகோட்டின்’ நச்சுவானது ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, புகைப்பழக்கம் கூடவே கூடாது.

5. நாம் தினசரி 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் சீராக வெளியேறும். அதேபோல், சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும். குறிப்பாக, சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கட்டாயமாக மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.

6. மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரை மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் போன்ற வீரியமுள்ள மருந்துகளை அளவுக்கு மேல் பயன்படுத்துவது சிறுநீரகத்தைப் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு மருந்தையும் நீங்களாகவே வாங்கிச் சாப்பிடாதீர்கள். ஆக, சுய மருத்துவம் கூடவே கூடாது.

7. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், உடனே கழித்து விட வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி சிறுநீரகப் பாதை சுத்தமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது.

8. தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

9. மதுபானத்தில் உள்ள பல ரசாயனங்கள் சிறுநீரகத்துக்கு வேட்டுவைக்கும். எனவே, மதுப் பழக்கம் கூடவே கூடாது.

10. சிறுநீரக பாதுகாப்புக்கு எந்த ஓர் உடற்பயிற்சியும் நல்லதுதான். எனினும், நடைப்பயிற்சி தான் எல்லோருக்குமான எளிய பயிற்சி. தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்கி ஓய்வெடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE