நம் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. உடலுக்குத் தேவைப்படும் நீரின் அளவுக்கும் வெளியேறும் நீரின் அளவுக்கும் இடையே ஏற்படும் சமச்சீரற்ற நிலையே நீரிழப்பு ஆகும். குறிப்பாக, கோடையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வியர்வையின் அளவும் அதிகரிப்பதால் நீரிழப்பு ஏற்படுகிறது.
“ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3.7 லிட்டர் நீரும், பெண்கள் 2.5 லிட்டர் நீரும் பருக வேண்டும். கோடையில் குறைவாக நீர் அருந்தினால் உடலில் நீர் வற்றி தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல், மயக்கம், உடல் வலி, சோர்வு, அசதி போன்ற தொல்லைகள் எளிதில் ஏற்படும். மேலும், உடலில் வறட்சி ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையும். உடல்வலி, தலைவலி உண்டாகும்.
கோடையில் அதிகமாகத் தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும். இல்லையேல், தேநீரின் அளவைக் குறைக்க வேண்டும். தேநீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் கழிப்பது அதிகரித்து உடலில் நீரிழப்பு ஏற்படும். மேலும், காபியில் உள்ள கஃபீன் என்கிற மூலக்கூறு உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி அயர்ச்சியை உண்டாக்கும்.
மோரை தேவைக்கேற்ப குறைந்தபட்ச உப்பு கலந்து பருகினால், கோடையில் நீர் - உப்பு இழப்பு உடனடியாகச் சீராகிக் கோடைச் சோர்வு அகலும். மோர் ஒரு சிறந்த பானம். இதில் உயிர்ச்சத்தான வைட்டமின் டி, தாது உப்பு, கால்சியம், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு போன்ற அனைத்தும் உள்ளதால் கோடையில் உடல் சோர்வு எளிதில் சரி செய்யப்படும்.
» ‘சிம்ப்ளி வேஸ்ட்’ திமுகவின் கடைசி பட்ஜெட் இதுதான்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
» மதுரை பெரியார் பேருந்து நிலையம் வணிக வளாகத்துக்கு சுற்றுசூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம்!
இளநீர், நுங்கு, பதநீர் போன்றவற்றில் உடலுக்கு வேண்டிய பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற தாது உப்புகள் இணைந்து இருப்பதால் கோடைச் சோர்வைப் போக்கி நன்மை பயக்கும்.
அனைத்துப் பழரசங்களையும் சர்க்கரை சேர்க்காமல் அருந்தும் பட்சத்தில், அவற்றிலுள்ள நீர்ச் சத்து, உயிர்ச் சத்து, நார்ச் சத்து, தாது உப்புகள், எதிர் ஆக்ஸிகரணிகள் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். தர்பூசணி நீர் நிறைந்த பழம். கோடையில் நீரிழப்பை எளிதில் ஈடுசெய்யும். திராட்சை, தக்காளி, ஆரஞ்சு, ஆப்பிள் அனைத்தும் எதிர் ஆக்ஸிகரணி நிறைந்தவை.
நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறைந்த சர்க்கரையின் பின்விளைவைத் தவிர்க்க பழச்சாறு பருகுவது சிறந்த அணுகுமுறை. கடைகளில் புட்டியில் அடைத்து விற்கப்படும் பழரசங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதால் அவை உடல் பருமனை அதிகரிக்கும். அதற்கு மாற்றாக மோர், அரிசிக் கஞ்சி, பழைய சாதம் போன்றவை சிறந்த நீராகாரம் ஆகும்.
எலுமிச்சைச் சாறில் உயிர்ச் சத்து ‘சி’ நிறைந்துள்ளது. இதில் சிறிதளவு உப்பைச் சேர்ந்து அருந்தினால் கோடையில் ஏற்படும் உப்பு இழப்பை இது ஈடு செய்யும்.
தர்பூசணியும் வெள்ளரியும்: வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்களில் முதலிடம் வகிப்பது தர்பூசணி. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என்று பல சத்துகள் காணப்பட்டாலும், இதில் 90 சதவீதம் தண்ணீர்ச் சத்துதான் இருக்கிறது. கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்து, நீர்ச்சத்தைச் சமநிலைப் படுத்துவதும் தாகத்தை உடனடியாகத் தணிப்பதில் முன்னிலை வகிப்பதும் இதுவே. எந்த வயதினரும் இதைச் சாப்பிடலாம் என்பது ஒரு கூடுதல் நன்மை.
கோடையில் தினமும் தர்பூசணியைச் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் 25 சதவீதம் அதிகரிக்கிறது. உடலின் வெப்பநிலை குறைகிறது, ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. தர்பூசணியில் உள்ள ‘ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்’ எனப்படும் இயற்கைச் சத்துகள் நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகின்றன. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
வெயிலின் கொடுமையில் இருந்து நம்மைக் காக்கும் இயற்கையின் இன்னொரு வரப்பிரசாதம்தான் வெள்ளரி. இதன் முக்கியப் பலனே உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுதான். அதிக அளவு நீர்ச்சத்தும் குறைந்த கலோரிகளும் கொண்ட வெள்ளரி, உடலில் நீரிழப்பால் ஏற்படுகிற சிறுநீர்க்கடுப்பைக் குறைக்கிறது. வெயில் காலத்தில் அதிகப்படுகிற சிறுநீர் கல் கரையவும் உதவுகிறது.
பிஞ்சு வெள்ளரிக் காயில் உப்பும், மிளகாய்த் தூளும் சிறிதளவு கலந்து சாப்பிடுவது நம் வழக்கம். இந்த உப்பில் உள்ள சோடியம் தாது வியர்வையில் இழக்கும் சோடியத்தை ஈடுகட்ட உதவுகிறது. வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்குக் கண்களில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சலைப் போக்க, வெள்ளரித் துண்டுகளைக் கண் இமைகளின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால் கண் அயர்ச்சி நீங்கிப் புத்துணர்வு ஏற்படும்” என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.