கோடையில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்!

By ந. சரவணன்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் கோடை வெயிலால் ஏற்படும் நோய்களிலிருந்து குழந்தைகளை கவனமாக பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அதே நிலை தொடர்ந்து வரும் நிலையில், கோடை காலத்தில் உண்டாகும் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது அவசியமாகும் என மருத்துவர்கள் அறி வுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, "கோடைகாலத்தில் வெயில் அதிகரிப்பால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. பெரியவர்களுக்கு மட்டும் தான் நீரிழப்பு உண்டாகும் என நினைக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் நீரிழப்பு ஏற்படும். கோடை காலத்தில் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் அனைவரும் மெல்லிய சருமம் கொண்டவர்கள் என்பதால் வெயில் காலத்தில் வேர்க்குரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

மேலும், வெப்ப கொப்புளங்களும் உண்டாகலாம். குறிப்பாக, மண்ணில் விளையாடும் குழந்தைகள் வியர்வையோடு மண் சருமத்தில் ஒட்டிக்கொள்ளும் போது, அவை கொப்புளங்களை ஊக்குவிக்க செய்யும். கோடையில் குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் சின்னம்மையும் உண்டு. இது உடல் முழுவதும் திரவம் நிறைந்த சிறிய கொப்புளங்களாக வரக்கூடும்.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இது அதிகம் தாக்கச் செய்யலாம். வெளியே வெயில் அதிகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு பருத்தி போன்ற ஆடைகளை அணிவிக்க வேண்டும். அவை மற்ற துணிகளை விட அதிக வியர்வையை உறிஞ்சும் தன்மைக்கொண்டது. அதுபோல் குழந்தைகளுக்கு வெளிர் நிற ஆடை களை அணிவிப்பதும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும்.

அடர்த்தியான ஆடை களையோ, இருக்கமான ஆடைகளையோ அணிவிக்க வேண்டாம். தினசரி 2 வேளைகளில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாம். தற்போது, வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருப்பதால் திரவ ஆகாரமான இளநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சரியான இடைவெளியில் கொடுப்பதன் மூலம் நீரிழப்பு அபாயம் உண்டாகாமல் தடுக்கலாம்.

3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்... குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியம். ஒரு சிட்டிகை சீரகப்பொடி, உப்பு மற்றும் ஒரு சிட்டிகை எலுமிச்சை சாறு கலந்த நீர்த்த மோரை தினசரி மதிய உணவுக்கு பிறகு கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல செரிமானமும் கிடைக்கும். மோரில் கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது.

இவை, தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை போக்குகின்றன. வெயில் காலத்தில் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது குடிப்பதற்காக தரமற்ற தண்ணீர் அல்லது குளிர்பானங்களை தரக்கூடாது. மேலும், திராட்சை, அன்னாசி, தர்பூசணி, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி வெள்ளரி, மாதுளை என பழ வகைகளையும், பழச்சாறுகளையும், இளநீர், நுங்கு போன்ற உடலுக்கு கேடு தராதவற்றை கொடுப்பதன் மூலம் கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். கோடையில் மிளகாய், மசாலா மற்றும் இனிப்புகளை அதிகம் கொடுப்பதை தவிர்க்கவும். மிளகாய் மற்றும் மசாலா சாப்பிட்டால், சூடு அதிகமாகும் அபாயம் உள்ளது.

கோடையில் சமைக்கப்படும் உணவுகள் விரைவில் கெட்டுவிடும் என்பதால் குளிர்சாதன பெட்டியில் வைத்து, வெளியே எடுத்த உடனே சாப்பிடுவோம். ஆனால், இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது’’ என்றனர். இந்தாண்டு வெயில் தாக்கம் வழக்கத்தைக் காட்டிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனைகள் படி குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE