கம்பம்: இரண்டு நாள் பெய்த தொடர் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வார நாட்கள் என்பதால் நேற்று கூட்டம் குறைவாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் நீண்டநேரம் குளித்து மகிழ்ந்தனர்.
கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவி, சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளியில் அருவியாகக் கொட்டுகிறது.
அருவிப் பகுதிக்குச் செல்ல ரூ.30-ம், குழந்தைகளுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மழை இல்லாததால், நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 11, 12-ம் தேதிகளில் இப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலையில் நீரவரத்து தொடங்கியது. நேற்று ஓரளவுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். வார நாட்கள் என்பதால் கூட்டம் இல்லை. இதனால், பலரும் நீண்டநேரம் குளித்தனர்.
» பீர், அசைவ பிரியர்கள் கவனத்துக்கு... யூரிக் அமிலம் அதிகரித்தால் பேராபத்தா?
» ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.500க்கு விற்பனை: திண்டுக்கல் சிறுமலையில் சீசன் தொடக்கம்!
வனத்துறையினர் கூறுகையில், ‘இரண்டு நாள் பெய்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் கூட்டம் இல்லை. வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர். இதேபோல், குரங்கணி, கும்பக்கரை, மேகமலை அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.