அரைக் கீரை: அரைக் கீரையில் கால்சியமும் ‘வைட்டமின் சி’யும் அதிகம். பீட்டா கரோடின், நார்ச்சத்து ஓரளவுக்கு உள்ளது. இரும்புச் சத்து மிக அதிகம். உணவுச் செரிமானத்துக்கும் நல்லது. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்ற உணவுதான் இந்த அரைக்கீரை.
புரதம், கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் பருமன், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் அரைக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.
அகத்திக் கீரை: அகத்திக் கீரையில் கால்சியம் மிகுதியாக உள்ளது. இதனால், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் வளரும் பருவத்தினருக்கு நல்லதொரு உணவு. கீரைகளில் அதிக ஆற்றல் தரக் கூடிய அகத்திக் கீரையில், பல மருத்துவக் குணங்கள் உள்ளன. புரதமும் கார்போஹைட்ரேட்டும் ஓரளவுக்கு உள்ளன.
பாஸ்பரஸ் அதிகம் என்பதால், பல் நலன் காக்க உதவுகிறது அகத்திக் கீரை. வைட்டமின் ஏ சத்தும், இரும்புச் சத்தும் இதில் தேவைக்கு உள்ளன. அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. குறிப்பாக, ரத்தசோகை நோயாளிகளுக்கு இந்தக் கீரை மிகவும் உகந்தது.
» அதிமுக மூத்த நிர்வாகியை கன்னத்தில் அறைந்த முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: நடந்தது என்ன?
மணத்தக்காளிக் கீரை: மணத்தக்காளிக் கீரையில் வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்’ அதிகம் இருப்பதால் பொது உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக மிக நல்லது. தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வந்தால், வாய்ப் புண்ணும் இரைப்பைப் புண்ணும் குணமாகும் சாத்தியம் அதிகம்.
ஓரளவுக்குப் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் உள்ள மணத்தக்காளிக் கீரை, ரத்தசோகை உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும். மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது குழந்தைகள் சாப்பிட பழக்கப்படுத்து, அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
புதினா கீரை: செரிமானத்துக்கு மிகவும் ஏற்ற புதினா கீரைதான் எல்லா வயதினருக்கும் ஏற்றது. சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கும் பசியைத் தூண்டவல்லது. வைட்டமின் ஏ, சி, ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ள புதினா கீரையில் இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் தேவைக்கு உள்ளன.
மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், குரோமியம் தாதுக்கள் கொண்ட புதினா கீரை, ரத்தசோகையைப் போக்கவும் மலச்சிக்கல்லை தீர்க்கவும் உதவும். புதினாவில் ‘மென்தால்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இது சளியும் தடுமமும் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது கவனிக்க வேண்டிய விஷயம்.