நாம் ஒரு முறை, இருமுறை என எப்போதாவது நகம் கடித்தால், அது நோயின் அறிகுறி இல்லை. ஆனால், நகம் கடிப்பது என்பது விடமுடியாத பழக்கமாகிவிட்டது என்றாலோ, தங்களை அறியாமலேயே நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலோ, என்னதான் முயன்றாலும் நகம் கடிக்காமல் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டாலோ, அது ஓர் உளவியல் பிரச்சினையின் வடிகாலாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
‘ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அதை வெளியேற்றுவதற்கு மூளை பல வழிகளைத் தேடும். அதில் ஒன்று நகம் கடித்தல். இது ஓர் அனிச்சைச் செயல். மனதில் புதைந்திருக்கும் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து, ஆழ்மனதின் கட்டளைப்படி விரல்கள் தானாகச் செயல்படுவதால், நகம் கடிப்பதைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். இம்மாதிரி நிலைமையில் உள்ளவர்களுக்கு உளவியல் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் தேவைப்படும்.
பெரும்பாலானோருக்கு நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படுவதற்கு உடல் அலுப்பே காரணமாக இருக்கும். எதையும் செய்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாதபோது, வெறுமனே இருக்கும்போது, வெறுத்துப் போயிருக்கும்போது, கவலைப்படும்போது, மனம் பதற்றமாக இருக்கும்போது, ஏதாவது தோல்விகளைச் சந்திக்கும்போது, உணர்ச்சிவசப்படும்போது, நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, ஏமாற்றங்கள் மிஞ்சும்போது, தனக்கு விருப்பமில்லாமல் அடுத்தவரின் கட்டாயத்துக்காகச் செயல்படும்போது, தன்னம்பிக்கையை இழக்கும்போது எனப் பலதரப்பட்ட உளவியல் பிரச்சினைகள் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தூண்டும்.
பலருக்கும் இம்மாதிரியான பிரச்சினைகள் எளிதாக முடிந்துவிடும். அதனால், நகம் கடிக்கும் பழக்கமும் பிரச்சினை முடிந்தவுடன் மறைந்துவிடும். சிலருக்கு இம்மாதிரியான தோல்விகளும் ஏமாற்றங்களும் அச்சங்களும் நீடிக்கும். அப்போது அது மன அழுத்த நோய்க்குப் பாதை அமைத்துவிடும். அதிலிருந்து தற்காலிக விடுதலை பெறுவதற்கான வழியாக, நகம் கடிக்கும் பழக்கம் நீடித்துவிடும். இவர்களால் நகம் கடிப்பதை எளிதில் விட்டுவிடமுடியாது. உளவியல் சிகிச்சைக்குப் பிறகே இதற்குத் தீர்வு கிடைக்கும்.
» கவிஞர் நந்தலாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
» அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.52 கோடி உண்டியல் வசூல்; 229 கிராம் தங்கம் காணிக்கை
உடல்நல பாதிப்புகள் என்னென்ன? - நகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் கவனம் தேவை. இல்லாவிட்டால், நகங்கள் உடல் நோய்களுக்கு வாசலாகிவிடும். நகம் கடிக்கும் பழக்கத்துக்கு மருத்துவ உலகம் ‘ஆனிகோஃபேஜியா’ (Onychophagia) என்று பெயர் சூட்டியுள்ளது. சிலர் திரும்பத் திரும்ப கை கழுவுவதுபோல், நகம் கடிக்கும் பழக்கமும் அடிக்கடி செய்யத் தூண்டும் செயலாகக் கருதப்படுவதால், ‘ஓ.சி.டி’ (Obsessive Compulsive Disorder – OCD) எனும் உளவியல் பிரச்சினையோடு இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
புகைபிடித்தலைப் போல் நகம் கடிக்கும் பழக்கமும் ஒரு கெட்டப் பழக்கம். குடலில் புழுக்கள் தோன்றுவதற்கு நகம் கடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், வாந்தி பேதி, சீதபேதி, அஜீரணம், குடல் நோய்கள் போன்றவை ஏற்படவும் இந்தப் பழக்கம் வழி அமைக்கிறது.
சிலர் மிகவும் தீவிரமாக நகம் கடித்து, கடித்த இடத்தில் புண் ஏற்பட்டு, ரத்தம் கசியும் அளவுக்கு பிரச்சினையைப் பெரிதாக்கி விடுகின்றனர். அப்போது அங்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. நகத்தின் முனையில் தசை பழுதடைந்து, விரிசல் விழுந்து பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடுகிறது.
தீர்வுகள் என்னென்ன? - நகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஒட்ட வெட்டிவிட வேண்டும். நகம் கடிக்கத் தோன்றும்போது, கைவிரல்களுக்கு வேறு வேலை கொடுத்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, செல்போனை நோண்டுவது, பேனாவால் எழுதுவது போன்ற வேலைகளைச் செய்யலாம்.
நகத்தின்மீது துவர்ப்புச் சுவை கொண்ட வர்ணத்தைப் பூசிக்கொள்ளலாம். அக்ரலிக் செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்ளலாம். நகத்தில் பிளவுகள், தொற்றுகள் போன்றவை காணப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தட்டச்சு செய்வது, கணினியில் வேலை பார்ப்பது, வாகனம் ஓட்டுவது போன்றவை சிரமமாக இருக்கும் அளவுக்கு நகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மனதை வாட்டும் பிரச்சினைகளுக்கு உளவியல் தீர்வு காண வேண்டும்’ என்கிறார் பொதுநல மருத்துவர் கு.கணேசன்.