இரவில் உடற்பயிற்சி செய்தால் தூக்கப் பிரச்சினை வருமா?

By ப்ரியன்

தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி ‘ஜிம்’கள் அதிகரித்துள்ள சூழலில், பலரும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இரவு நேர உடற்பயிற்சி குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் பகிர்ந்த சில முக்கிய குறிப்புகள் இங்கே...

இரவு நேர உடற்பயிற்சி ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால், இரவில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெரும்பாலும் இரவு நேர உடற்பயிற்சி நிச்சயம் நமது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நமது உடல் வெப்பநிலையை அதிகரித்து அட்ரினலின், எண்டார்ஃபின் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடற்பயிற்சிக்குப் பின் உறக்கம் வருவது தாமதமாகிறது. எனவே, உறங்குவதற்கு முன் இதமான நீரில் குளிப்பது நன்மை தரும்.

சமீபத்திய ஆய்வுகளின்படி, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் மிதமான உடற்பயிற்சி தூக்கத்தைத் தொந்தரவு செய்யாது. அதாவது, மாலை நேரத்தில் மிதமான அளவிலான உடற்பயிற்சிகள் செய்வது நம் உறக்கத்தை மேம்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

எனினும், மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சிகள் கூடாது என்றும் சில மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இரவில் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது உறக்கத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் என்றும் மருத்துவர்களும் ஆய்வுகளும் எச்சரிக்கின்றன.

எனவே, இயன்றவையில் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது சாலச் சிறந்தது. அவ்வாறு இயலாதவர்கள் மாலை வேளையிலோ அல்லது இரவு உறங்குவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்பாகவோ மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அப்போதுதான் தூக்கத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE