வலது Vs இடது - எந்தப் பக்கம் படுத்து உறங்குவது நல்லது?

By ப்ரியன்

இரவில் படுக்கையில் நம்மில் பலருக்கும் எழும் சந்தேகம்... ‘இடது பக்கம் படுப்பது நல்லதா அல்லது வலது பக்கம் படுப்பது நல்லதா?’ என்பதே. இந்தக் கேள்விக்கு பொது நல மருத்துவர்கள் கூறும் பதிலும் வழிகாட்டுதலும் இதோ...

வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு வலது பக்கமாக படுத்தால், இடது பக்கக் குடல், இரைப்பையை அழுத்தும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசையால் இரைப்பையில் முழுதும் இறங்கிவிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படாது.

இரவு சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்ல வேண்டும். உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக் கூடாது. கனமான பொருளைத் தூக்கக் கூடாது. உடற்பயிற்சி செய்யக் கூடாது.

படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியில் இருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வதால் உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதை தடுக்கலாம். இடது பக்கமாகப் படுக்கும்போது, உணவு நிரம்பிய இரைப்பையானது கல்லீரலுக்கு அழுத்தாது. இதனால், செரிமானம் சிறப்பாக ஊக்குவிக்கப்படும்.

இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டி, உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிட்டும். ரத்தம் சீக்கிரம் சுத்தமாகும். கீழ்ப்பெருஞ்சிரை வலப்பக்கம் இருப்பதால், இடப்பக்கமாக படுக்கும்போது அழுத்தம் ஏற்படாமல் ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இதயத்துக்கும் நல்லது.

சிலருக்கு வலது பக்கமாக படுக்கும்போது நாக்கும் தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, தசைகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும் என்பதால் பெரும்பாலும் குறட்டை ஏற்படுவதில்லை. கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக் கூடாது. இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE