சர்க்கரை நோயாளிகள் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கட்டளைகளாக மருத்துவ நிபுணர்கள் பட்டியிடும் குறிப்புகள் இவை:
> சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகாது என்பதால் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
> சர்க்கரை நோயாளிகள் மாதம் ஒருமுறை ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
> ஒருபோதும் சர்க்கரை நோயாளிகள் சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
> தவறாமல் அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
> நீரிழிவு நோயாளிகள் நிச்சயமாக மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிக்க வேண்டும்.
> பழங்களில் முக்கனியைத் தவிர்த்துக் கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.
> கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சினை இருப்பின், பாலக் கீரையைத் தவிர்க்கலாம்.
> சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண வேண்டும். கூழ், களி ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
> சர்க்கரை நோயாளிகளின் உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிக அளவிலும், சாதம் குறைவாகவும் இருப்பது மிக அவசியம்.
> தினமும் இரண்டு துண்டு பூண்டை எடுத்து சாப்பாட்டுடன் சாப்பிட மாரடைப்பு, கொழுப்பைத் தவிர்க்கலாம். கொடியில் வளரும் அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் உணவுகள்:
உலர்ந்த அத்திப் பழத்தை 1 கிராம் அளவு தினமும் இருவேளை தண்ணீருடன் உண்ணலாம். 5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மில்லி லிட்டர் நீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தலாம் (30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தலாம்).
4 முதல் 10 கிராம் ஆவாரம் பூ பொடியைச் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம். 1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம். கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
1 – 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம். கடும் தாகத்தைத் தணிக்க சீந்தில் இலை அல்லது தண்டுப் பொடியை சுடு தண்ணீரில் ஊற வைத்துத் தினமும் இருவேளை அருந்தலாம். 1 கிராம் தேற்றான் விதைப் பொடியைப் பாலுடன் தினமும் இரு வேளை குடிக்கலாம். 2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.
1-3 கிராம் நிழலில் உலர்த்திய இளநீரின் பொடியை நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம். மணிச்சம்பா அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளலாம். வேகவைத்த மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து தினமும் இரு வேளை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம். எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.