“வள்ளுவரே உலகின் மூத்த மேலாண்மை குரு!” - எழுத்தாளர் சோம வீரப்பன் பெருமிதம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: உலகின் மூத்த மேலாண்மை குரு வள்ளுவரே. திருவள்ளுவர் கூறியதில் 50 சதவீதத்துக்கு மேல் வணிகம், மேலாண்மை சார்ந்த கருத்துகள் உள்ளன என்று எழுத்தாளர் சோம வீரப்பன் தெரிவித்தார்.

புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் சார்பாக "வள்ளுவர் காட்டும் மேலாண்மை"* எனும் தலைப்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில், பொது மேலாளராக பணி நிறைவு செய்தவருமான 'குறள் இனிது' உள்ளிட்ட நூல்களின் எழுத்தாளருமான சோம வீரப்பன் இந்த வகுப்பை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில்,"மேலாண்மை தமிழருக்கு புதிது அல்ல. கல்லணையும் தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலும் இதற்கு சான்று. திருக்குறளில் மொத்தம் உள்ள 133 அதிகாரங்களில் பொருட்பால் மட்டுமே 70 அதிகாரங்களைக் கொண்டது. எனவே திருவள்ளுவர் கூறியதில் 50 சதவீதத்திற்கு மேல் வணிகம் மேலாண்மை போன்றவற்றைச் சார்ந்தது. காலமறிதல், இடம் அறிதல், தெரிந்து தெளிதல் போன்ற அதிகாரங்களில் இருக்கும் குறட்பாக்கள் இதற்கு மேலும் சிறந்த உதாரணங்களாகும். உலகின் மூத்த மேலாண்மை குரு வள்ளுவரே' என குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறையின் பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், முதுகலை மாணவர்களும் கலந்து கொண்டனர். டீன் முனைவர் சுடலை முத்து வரவேற்றார். தமிழ்த் துறையின் தலைவர், முனைவர் கருணாநிதி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE